வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் ஜூன்-2 ஆம் தேதி மாலை மக்கள் சந்திப்புக்காகச் சென்ற, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது சிங்கள அரசின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதுடன், காவலர் சீருடையிலிருந்த ஒருவர் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டியிருக்கிறார்.
இலங்கை காவல்துறையினர் சாதாரண உடையில் வந்து தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், தான் அடையாள அட்டையை காண்பிக்கக் கோரியதும் தன் மீது தாக்குதல் நடத்த அவர்கள் முயன்றதாக கஜேந்திர குமார் பொன்னம்பலம் புகார் தெரிவித்திருந்தார்.
ஆனால் இது தொடர்பாக ஊடகங்கள், இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் இருவரிடமும் கேள்வி எழுப்பிய போது, தங்களுக்கு எதுவும் தெரியாது என பதில் அளித்தனர்.
இந்நிலையில் ஜூன் 7 ஆம் தேதி காலை, கொழும்பு- கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் பொன்னம்பலத்தை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் டிரான் அலஸ், காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய பொன்னம்பலம் தடையாக இருந்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இலங்கையின் வடகிழக்கு பகுதியில் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே ஆயுதமுனையில் மிரட்டப்பட்டு இருக்கிறார். பின்னர் அவரை கைது செய்துள்ளனர். இலங்கை அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.
கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஈழத் தமிழர்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் பெயரன் ஆவார். இவரது தந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான குமார் பொன்னம்பலம் சிங்கள அரசின் சதியால் 2000ஆம் ஆண்டு, ஜனவரி 5 ஆம் தேதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
தனது பாட்டனார் மற்றும் தந்தை வழியில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்காகவும், இறையாண்மையை மீட்கவும் ஜனநாயக முறையில் இயங்கி வரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் சிங்கள அரசால் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று ஈழத் தமிழர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இலங்கையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நிலை என்றால் சாதாரண தமிழ் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் எந்த உத்திரவாதமும் இல்லை என்பது இதன் மூலம் வெளி உலகிற்கு தெரிகிறது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிப்பதுடன், உடனடியாக இலங்கை அரசு அவரை விடுதலை செய்யவும் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
09.06.2023
No comments:
Post a Comment