Wednesday, June 14, 2023

பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியல், வைகோ MP கண்டனம்!

ஒன்றிய பா.ஜ.க. அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்துகொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.

மேற்கு வங்காளம், புது டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. நடத்திய அரசியல் சித்து விளையாட்டுகளை தமிழ்நாட்டிலும் அரங்கேற்றுவதற்கு திட்டம் தீட்டி, அதைச் செயல்படுத்த முனைந்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத் துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாக தெரிவித்தும்கூட, விசாரணை முடிந்து, எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நள்ளிரவில் அவரைக் கைது செய்து துன்புறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. 

ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை. இதனை திராவிட முன்னேற்றக் கழக அரசு முறியடிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
14.06.2023

No comments:

Post a Comment