Wednesday, June 7, 2023

மல்யுத்த வீரர்களின் நீதிக்கானப் போராட்டம் வெல்லட்டும்!


உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக  பொறுப்பு வகித்தார்.  இவரால் ஒரு சிறுமி உட்பட  பத்துக்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக உலக சாம்பின்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகத்,  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உட்பட சுமார்  பத்துக்கும் மேற்பட்ட  வீரர் மற்றும் வீராங்கனைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் அவர் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்  பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும்   மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஜனவரி் மாதம் போராட்டத்தை தொடங்கிய  நிலையில்  ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். 

இந்நிலையில் கடந்த மே 28 ஆம் நாள்  ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக  செல்ல முயன்றனர்.

அப்போது டெல்லி காவல்துறையால்  வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நீதி கேட்டு போராட்டம் நடத்திய இந்திய மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது எமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

பிரிஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் எனவும்  உலக மல்யுத்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான ரியோ 2016 வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், டோக்கியோ 2020 பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகத் ஆகியோர் காவல்துறையின் அடாவடித்தனத்தைக் கண்டிக்கும் விதமாக, ஒலிம்பிக் மற்றும் உலகப் பதக்கங்களை செவ்வாய்க்கிழமை ஹரித்வாரில் கங்கையில் வீசப் போவதாகக் கூறினர்.

மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீச ஹரித்வார் சென்றனர். இந்தத் தகவல் அறிந்ததும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகாத் அங்கு சென்றார். மல்யுத்த வீரர்களிடம் பேசி பதக்கங்களை ஆற்றில் வீசும் முடிவை கைவிடுமாறு வற்புறுத்தினார்.

இதனையடுத்து ஒன்றிய அரசுக்கு 5 நாட்கள் கால அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளார். மேலும் மல்யுத்த வீரர்களிடமிருந்து விருதுகள் மற்றும் பதக்கங்கள் ஆகியவற்றைப்  பெற்றுக்கொண்ட நரேஷ் திகாத், இவற்றை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப் போவதாக அவர் தெரிவித்தார். 

இந்திய நாட்டிற்காக உலக அரங்கில் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வாங்கிக் குவித்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யாமல், நீதிக்காகப் போராடி வரும் மல்யுத்த வீரர்களை கைது செய்வதும், அவர்கள் தங்கள் பதக்கங்களை கண்ணீருடன் கங்கையில் வீசி எறிய சென்றதும் மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஏழ்மையும் வறுமையும் தாண்டவம் ஆடும் எளிய குடும்பத்தில் பிறந்த தங்கள் முயற்சி,ஊக்கத்தால் மல்யுத்த வீராங்கணைகளாக,வீரர்களாக  நாட்டிற்காக விளையாடி பெருமை சேர்த்து வருபவர்களின் இரத்தக் கண்ணீருக்கு ஒன்றிய அரசு பதில் கூறியே தீரவேண்டும்.ஐபிஎல்
சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடி மகிழும் சமூகம்,நான்கு மாத காலத்திற்கும் மேலாக நீதிக்காகப் போராடி வரும் இந்திய மல்யுத்த வீரர்,வீராங்கணைகள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும்.

துரை வைகோ
தலைமைக் கழக செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
31.05.2023

No comments:

Post a Comment