Thursday, May 31, 2018

உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் நியமனம்-தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களாக,

1. புதூர் மு.பூமிநாதன், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் (முகவரி: 786, கற்பகம் நகர்,  கோ. புதூர், மதுரை - 625 007. அலைபேசி:94430 - 56970);

2. வழக்கறிஞர் க.அழகுசுந்தரம், கழக கொள்கை விளக்க அணிச் செயலாளர் (முகவரி: 13/29, பழனியாண்டவர் கோவில் தெரு, திருப்பரங்குன்றம், மதுரை - 625 005, அலைபேசி: 98421 - 48496);

3. ஆடிட்டர் அ.அர்ஜூன்ராஜ், அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர் (முகவரி: 64-65, பாரதி சாலை, இராம் நகர்,கோவை - 641 009. அலைபேசி: 94433 - 39259)

4. டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.பி.பி.எஸ். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் (முகவரி:26, சிதம்பரம் தெற்கு தெரு, புளியங்குடி - 627 855 நெல்லை மாவட்டம். அலைபேசி: 94432 - 33019; 98421 - 60416) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல்களை இன்று 31-05-2018 மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

வேல்முருகன் மீது தேசதுரோக வழக்கு! வைகோ கண்டனம்!

தமிழ்நாட்டின் அதிமுக அரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 124A தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையின் மூலம் அடக்குமுறை வழக்கை ஏவியுள்ளது.

மத்தியில் ஆளும் மோடி அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அதிமுக அரசின் பாசிச போக்கை எதிர்த்து, தமிழக உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த உண்மைப் போராளி வேல்முருகன் மீது இந்த அடக்குமுறையை ஏவிய தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். 


என் மீதும் தேச துரோகக் குற்றச்சாட்டில் இரண்டு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளையும் அஞ்சாமல் எதிர்கொள்வோம்; வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கையும் எதிர்கொண்டு முறியடிப்போம்.

இந்த அராஜக நடவடிக்கையால் வேல்முருகன் மேலும் வீறுகொண்டு களத்துக்கு வருவார். கேடு வரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே என்ற நிலைமைக்கு அதிமுக அரசு ஆளாகும் என எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 31-05-2018 அன்று தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தமிழறிஞர் ம.லெ.தங்கப்பா மறைவு! வைகோ இரங்கல்!

தமிழ் இலக்கியப் படைப்பாளியும், தமிழ் அறிஞரும், ஆய்வாளருமான பேராசிரியர் ம.லெ.தங்கப்பா அவர்கள் மறைவு செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

நெல்லை மாவட்டம் - தென்காசி அருகே உள்ள குறும்பலப்பேரியில் 1934 இல் பிறந்த ம.லே.தங்கப்பா அவர்கள் பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் கல்லூரியில் படித்து, புதுச்சேரி அரசு கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக நெடுங்காலம் பணியாற்றினார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’ இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று தனித்தமிழ் ‘தொன்மொழி’யின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

தங்கப்பா அவர்களின் தனித்துவமான இலக்கியப் படைப்பு சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்ட ‘Hues and Harmonies From An Ancient Land’ எனும் நூல் காலத்தால் அழியாதது. மரபுக் கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கிய தங்கப்பா அவர்கள் எங்கள் சிட்டுச் சேய்கள், இயற்கை விருது, மழலைப் பூக்கள், பின்னிருந்து ஓர் குரல், பனிப்பாறை நுணிகள் போன்ற கவிதை நூல்களை அளித்துள்ளார்.

உரையாடல், கட்டுரை, இலக்கியத்திலும் சிறப்பிடம் பெற்றுள்ள பல நூல்களை யாத்துத் தந்தார். குறிப்பாக நுண்மையை நோக்கி, எது வாழ்க்கை? திருக்குறளும் வாழ்வியலும், வாழ்க்கை அறிவியல், பாட்டு வாழ்க்கை போன்ற கட்டுரை நூல்கள் ம.லே.தங்கப்பா அவர்களின் படைப்பாற்றலுக்கு சிறந்த சான்றுகளாகும்.

ஈழ விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் மட்டுமல்ல, மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் மீது வற்றாத பாசம் கொண்டவர்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த அறிஞர் ம.லே.தங்கப்பா அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். பேராசிரியர் ம.லே.தங்கப்பா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழ் இலக்கிய அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் 31-05-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, May 30, 2018

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தோல்வியுற்றோர் கவலையற்று ஊக்கம் பெறுவீர்-வைகோ அறிக்கை

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்று, 30.05.2018 முதன் முதலாக மேல்நிலை முதலாம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மேலும் வெல்க! என வாழ்த்துகிறேன்.

இத்தேர்வு எழுதிய 25 இலட்சம் மாணவர்களில் சுமார் ஐந்து முதல் பத்து சதவிகித மாணவர் தோல்வி அடைகின்றனர். சுமார் 30 சதவிகித மாணவர்கள் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்று தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர்.

இதன் விளைவாக, மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட விபரீத நிலைக்குச் செல்வதை அறிகின்ற போதும், பத்திரிகைகளில் அத்தகைய செய்திகள் வெளிவருவதைக் காணும்போதும் என் மனம் பெரிதும் துயருறுகின்றது.

இத்தேர்வுகளை எழுதச் செல்லும் மாணவர்களுக்கு நான் வழக்கமாக தெரிவிக்கின்ற வாழ்த்துச் செய்திகள் கூட, அதிக மதிப்பெண் பெறுவது என்பது அடுத்தடுத்த படிப்புக்குச் செல்வதற்கான ஒரு வாய்ப்புதானே தவிர, வாழ்க்கையே தீர்மானிக்கும் காரணி அல்ல என்று குறிப்பிடுவது உண்டு.

இன்று அறிவியியல், பொறியியல், சமூகவியல், அரசியல், கலைத்துறை, தொழில்துறை உள்ளிட்ட பல்துறைகளிலும் தலைசிறந்து விளங்கும் பெருமக்களில் பெரும்பாலோர் பள்ளித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அல்ல. இதன் மூலம் மதிப்பெண்கள் மட்டுமே எதிர்கால வாழ்வை தீர்மானிக்கும் சக்தி அல்ல என்பதை அறியலாம்.

பல பெற்றோர்களே, தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்கள் குறைந்துவிட்டதாகக் குறைபட்டுக்கொள்கின்றனர். அவ்வாறு குறைப்பட்டுக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. குழந்தைகள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாகவும், சிந்தனைத் திறன் உடையவர்களாகவும், ஆற்றலாளர்களாகவும் வளர்ந்திடப் பயிற்றுவிப்பதே பெற்றோரின் கடமை ஆகும்.

அதற்கும், தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் வெவ்வேறானை. எனவே பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த, மதிப்பெண் குறைந்த மாணவர்கள் வாழ்வே சூன்யமாகிவிட்டதாகக் கருதி தற்கொலை செய்துகொள்ளுதல், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல் போன்ற விபரீத முடிவுகளுக்குச் செல்ல வேண்டாம்.

ஒரு கதவு அடைக்கப்பட்டால், ஆயிரம் கதவுகள் திறந்திருக்கும் என்ற இயற்கை நியதியை நெஞ்சில் பதித்து, அதற்கேற்றவாறு எதிர்கால திட்டங்களை வகுத்துச் செயல்பட முன்வர வேண்டும். அருமைப் பெற்றோர்களும், உறவினர்களும் சமூகமும் அத்தகைய மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ளாத வகையில் அவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களது எதிர்காலம் செம்மையாக அமைந்திட நல்வழி காட்டிட முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 30-05-2018 அன்று தனது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, May 29, 2018

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட அழிவுக்குத் தமிழக அரசே பொறுப்பு! வைகோ அறிக்கை!

தூத்துக்குடி மாநகரில் மே 22 ஆம் தேதியன்று, அ.தி.மு.க. அரசு, எந்த வன்முறையிலும் ஈடுபடாது, கோரிக்கை கொடுக்கச் சென்ற நிராயுதபாணியான மக்கள் மீது, காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தி, 14 தமிழர்களின் உயிரைப் பலி கொண்டு, பலரை மரண காயப்படுத்தி, காவல்துறை கோரத் தாண்டவம் ஆடியதன் எதிர் விளைவாக, தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார மக்கள் எரிமலையாகக் கொந்தளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு இன்று (28.5.2018) அறிவித்துள்ளது.

இந்த நச்சு ஆலையால் ஏற்பட்ட புற்று நோயால் மக்கள் மடிந்ததற்கும், விவசாயம் சீரழிந்ததற்கும், மலை போலக் கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட நாசம், நச்சுக் கந்தக வாயு பரவியதால், பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல்நலக் கேட்டுக்கும் அ.தி.மு.க. அரசே பொறுப்பு ஆகும்.

1994 ஆம் ஆண்டு, மராட்டிய மாநிலத்து இரத்தினகிரி விவசாயிகளால் உடைத்து நொறுக்கப்பட்டு, சரத் பவார் அரசால் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு, எந்த மாநிலமும் அனுமதி கொடுக்காத நிலையில், தமிழகத்தில் விண்ணப்பித்த பதினைந்தாம் நாளில், அ.தி.மு.க.வின் ஜெயலலிதா அரசு லைசென்ஸ் கொடுத்தது.

1996 இல், இந்த ஆலை இயங்கத் தொடங்கிய நாளில் இருந்து, கடந்த 22 ஆண்டுகளாக நானும், எங்கள் தோழர்களும், இடைவிடாத போராட்டங்களை நடத்தினோம்.

1997 தொடக்கத்தில் உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில், 2010 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 22 இல், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபி தர்மராவ், பால் வசந்தகுமார், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று, வழக்கு நடந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆலையை இயக்கலாம் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், 2012 டிசம்பரில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தன.

2013 ஏப்ரல் 2 ஆம் நாள், உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தீர்ப்பு வழங்கப் போகிறது என்று கருதி, மூன்று நாட்களுக்கு முன்பு, மார்ச் 29 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பட்நாயக், கோகலே அமர்வு, ஒப்புக்கு 100 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யச் சொல்லிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று தீர்ப்பு அளித்தது.

பொதுமக்களை ஏமாற்றுவதற்காக, தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. நானும் வழக்குத் தொடுத்தேன்.
ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் வசப்படுத்தும் சக்தியால், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தில்லி தலைமை அமர்வு, வழக்கு விசாரணையைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, ‘ஆலையை இயக்கலாம்’ என்று தீர்ப்பு அளித்தது. 

அதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. நானும் தனியாக ரிட் மனு தாக்கல் செய்தேன். இந்த இரண்டு மனுக்களும் ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.


இந்தப் பின்னணியில், ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கு அ.தி.மு.க. அரசு உடன்பட்டு, சிப்காட் மூலம் நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கியது.

அதனை எதிர்த்து, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், குமரெட்டியாபுரம், சில்வர்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், தூத்துக்குடி மாநகர மக்கள் அறப்போர் தொடுத்தனர்.

விரிவாக்கத்திற்கு எதிராக மட்டும் அல்ல, ஆலையையே மூட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் ரிட் மனு தாக்கல் செய்தேன். ஜூன் 13 ஆம் நாள் இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது.

இதற்கு இடையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட இருந்த அனுமதி காலாவதியாகிப் போனது. அதைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்கவில்லை.

இதனால், ஸ்டெர்லைட் நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பு ஆயத்தில் அனுமதி கேட்டு வழக்குத் தொடுத்தது.

அதனை எதிர்த்து நானும் அதே தீர்ப்பு ஆயத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். வழக்கு ஜூன் 6 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கின்றது.

இந்தச் சூழலில், தூத்துக்குடி மட்டும் அல்ல, தமிழக மக்களின் மொத்த வெறுப்பிற்கும் ஆளாகி இருக்கின்ற அ.தி.மு.க. அரசு, செய்த பாவம், ஏற்பட்ட பழியில் இருந்து தப்பித்துக் கொள்ள, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக இன்று (28.5.2018) அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனரும், வேதாந்தா குழுமத்தின் அதிபருமான அனில் அகர்வால், அரசிடம் அல்லது நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, ஆலையைத் தொடர்ந்து இயக்குவேன் என்று நான்கு நாள்களுக்கு முன்பு திமிராக அறிவித்தார். 

எனவே, நீதிமன்றத்தில் அரசின் ஆணையை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடுக்கும் வழக்கில், ஒருவேளை, 2013 ல் நடந்தது போலவே, உச்சநீதிமன்றத்தில் நீதி பறிக்கப்படுமானால், ஸ்டெர்லைட் ஆலையை இயக்கும் தீர்ப்பு வருமானால், ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்கிறேன்.


ஸ்டெர்லைட் ஆலையை எங்கள் தமிழ் மண்ணில் நடத்த விட மாட்டோம்; இரத்தினகிரியில் திரண்டது போல், இலட்சக்கணக்கானவர்கள் திரண்டு ஆலையை அப்புறப்படுத்துவோம்.

அதுவரை அ.தி.மு.க. அரசு நீடிக்குமானால், 22 ஆம் தேதி போலக் காவல்துறையை அனுப்பி, துப்பாக்கி வேட்டை நடத்தலாம் என்று நினைத்தால், அதனையும் எதிர்கொள்வோம். மத்திய அரசு துணை இராணுவத்தை அனுப்பினாலும், எங்கள் மண்ணையும் மக்களையும் காக்க, மரணத்தைத் துச்சமாக நினைத்து, அடக்குமுறையை எதிர்கொண்டு ஆலையை அகற்றியே தீர்வோம்.

தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகக் காவல்துறை டிஜிபி இராஜேந்திரன் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். 
இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்று, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பதவியில் இருந்து விலக வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 28-05-2018 அன்று தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, May 28, 2018

சமூக வலைதளங்களில் அவதூறு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார்!

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம் சீமானின் தம்பி, ஆர்.சௌந்தர்ராஜன் ஆகிய இரண்டு பேர், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது, சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

‘பல்வேறு தலைவர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்றனர் என, தந்தி டி.வி, புதிய தலைமுறை தொலைக்காட்சி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஆகிய தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தி வெளியிட்டதுபோல ஒரு காட்சிப் படத்தை, இவர்களே போலியாக வரைந்து, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார்கள். அந்தப் பட்டியலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பெயரும் இடம் பெற்று உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு அறப்போராட்டங்கள், பேரணி, நீதிமன்றப் போராட்டம் என்று இன்றுவரை தொடர்ந்து போராடி வருகின்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் குறித்து, பொய்யான, அவதூறான, நன்மதிப்பைக் கெடுக்கின்ற வகையிலான செய்திகளை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பொதுமக்கள் மனதில் வைகோ அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்ற வகையில் பரப்பி வருகின்றார்கள்.

மேற்கண்ட இருவர் மீதும், இவர்களைப் போல, சமூக வலைதளங்களில் போலியான  செய்திகளை வெளியிடுபவர்கள் மீதும், குற்றத் தடுப்புச் சட்டப்படியும், இந்திய தண்டனைச் சட்டப் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சார்பில் கழக வழக்கறிஞர்கள் நன்மாறன், பிரியகுமார், செந்தில்செல்வன், வினோத்குமார் ஆகியோர் இன்று மாலை 4 மணி அளவில், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர் என மதிமுக தலைமை நிலையம்‌ தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 28.05.2018 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்கொலை முயற்சி! உரிய நீதி தேவை- வைகோ அறிக்கை!


என்எல்சி தொழிலாளர்கள் 25 பேர் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்ற தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது. சுரங்க விரிவாக்கத் திட்டங்களுக்கு வீடு மற்றும் நிலங்களைத் தாரை வார்த்துக் கொடுத்த 13000 பேர், நிரந்தரப் பணி வாய்ப்பு இன்றி ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அவர்களுள், முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 40 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன், வேலை நாட்களையும் பாதியாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்தது. ஏற்கனவே மிகக் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கைப்பாட்டுக்குத் திண்டாடி வரும் நிலையில், இப்போது வேலை நாட்களையும் பாதியாகக் குறைத்ததால், அத்தொழிலாளர்களின் குடும்பங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.



தங்களுக்கு முழு பணி நாள் அளிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பணியாற்றிய முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியமர்த்த வேண்டும் என்றும் பல கட்டங்களாக அறவழியில் போராடி வந்தனர். 

அவர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்காததால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 25 பேர் இன்று முதல் சுரங்க விரிவாக்க நுழைவாயிலில் நஞ்சு அருந்தி உள்ளனர். அதில் 2 தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது. 25 தொழிலாளர்களையும் காப்பாற்றுவதற்கு உயர்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். 

ஏதேனும் உயிர் இழப்புகள் நேர்ந்தால், அதற்கு மத்திய மாநில அரசுகளும், நெய்வேலி நிலக்கரி நிர்வாகம், காவல்துறையும்தான் பொறுப்பு ஆகும். 

உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; வீடு, நிலங்களைக் கொடுத்துவிட்டு, வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, சட்டப்படியும், நியாயப்படியும் உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, May 25, 2018

தமிழகம் காக்க உயிர் நீத்த தியாகிகள் படம் திறந்து வீர வணக்கம் செலுத்திய தலைவர்கள்!

தமிழகம் காக்க உயிர் நீத்த தியாகிகள் படம் திறந்து வீர வணக்கம் செலுத்திய தலைவர்கள்!

நியூட்ரினோ எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஜிஎஸ்டி அகற்றுதல், ஹைட்ரோகார்பன் அகற்றுதல் போன்ற திட்டங்களுக்காக எதிர்ப்பு தெரிவித்து தன்னுயிரை மாய்த்தால் புரட்சி வெடிக்காதா என்ற ஏக்கத்தில் தன்னை தீ-க்கு இரையாக்கினார்கள் சிவகாசி ரவி, சரவண சுரேஷ், ஈரோடு தர்மலிங்கம், மணிகண்டன் ஆகியோர்.

அவரது படங்களை சென்னை சிராஜ் மாஹாலில் 25-05-2018 மாலை ரம்ஜான் நோன்பு முடிந்ததும் திறந்து வைத்தார்கள்.

அண்ணன் சிவகாசி ரவி அவர்களின் திரு உருவப்படத்தை திரு.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அண்ணன் விருதுநகர் சரவண சுரேஷ் அவர்களின் திரு உருவ படத்தை திரு.தங்கபாலு அவர்கள் திறந்து வைத்தார்கள்.

தர்மலிங்கம் மற்றும் மணிகண்டன் ஆகியோரது திரு உருவ படங்களையும் தலைவர்கள் திறந்து வைத்தார்கள்.

தொடர்ந்து கலவரத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த பட்டது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது-வைகோ கண்டனம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் தமிழக உரிமைகளைக் காக்க சுற்றுச்சூழலைக் காக்க காவிரி உரிமையைக் காக்க அறவழிகளிலே போராடி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகக் காவல்துறை நடத்திய படுகொலையைக் கண்டித்து போராடிய கட்சிகளைப் போலவே அவருடைய இயக்கமும் அறவழியில் சென்னையில் போராடியது. நேற்று அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இன்று தூத்துக்குடியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக வருகை தந்த வேல்முருகன் அவர்களை தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்தது கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற பாசிச நடவடிக்கை என குற்றம் சாட்டுகிறேன். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தமிழக அரசின் அராஜக நடவடிக்கைகளால் காவல்துறை நடத்திய படுகொலைகளால் வேதனை கொண்டிருக்கின்ற மக்களை மேலும் ஆத்திரத்திற்கு ஆளாக்க வேண்டாம். வேல்முருகன் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 25-05-2018 அன்று தெரிவித்துள்ளார்.



ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, May 24, 2018

சிபா.ஆதித்தனார் சிலைக்கு வைகோ மரியாதை!

சிபா.ஆதித்தனார் நினைவு நாளையொட்டி இன்று 24-02018 எழும்பூர் தாயகம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

உடன் கழக நிர்வாகிகள் இருந்தார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானங்கள்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம், 24.05.2018 வியாழக்கிழமை காலை, தாயகத்தில், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1

பேரறிஞர் அண்ணா, அறிவாசான் தந்தை பெரியார் ஆகியோர் வகுத்த இலட்சியங்களை வென்றெடுக்கும் குறிக்கோளுடன், 1994 மே 6 ஆம் நாள் உதயமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இலட்சக்கணக்கான தொண்டர்களின் தன்னலம் அற்ற உழைப்பாலும், தியாகத்தாலும், குன்றிமணி அளவும் குன்றா நேர்மையாலும், அடக்குமுறைக்கு அஞ்சாது சிறைவாசம் ஏற்ற தீரர்களின் நெஞ்சுரத்தாலும் கட்டிக் காக்கப்பட்டு, 24 ஆண்டுகள் நிறைவு பெற்று, 25 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

2019 மே 6 வரையிலும், ஓராண்டைக் கழகத்தின் வெள்ளி விழா ஆண்டாக, தாய்த் தமிழகத்தின் நலன், தமிழ் ஈழ விடுதலை, இந்தியத் துணைக்கண்டத்தின் மதச்சார்பு இன்மை, மக்கள் ஆட்சிக் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் கடமை, இந்துத்துவ சக்திகளும், புல்லுருவி அமைப்புகளும் தொடுத்து வரும் நச்சுப் பாணங்களை முறித்து, திராவிட இயக்கத்தைக் காக்கும் கவசமாகக் களத்தில் நிற்கும் உறுதி, அனைத்தையும் இலக்காகக் கொண்டு, வெள்ளி விழா நிகழ்வுகளாக நடத்திட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் நாளில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, கழகத்தின் வெள்ளி விழா என முப்பெரும் விழா மாநாடாக, ஈரோடு மாநகரில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது. 

தீர்மானம்: 2

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த, பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தை முன்மாதிரியாகக் கொண்டு, தன்னாட்சி அதிகாரம் கொண்ட, ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்க வேண்டும் என்று, நடுவர் மன்றம் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

ஆனால், மத்திய அரசு, ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ என்ற பெயரால் ஒரு வரைவுச் செயல்திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அதனை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு ஏற்றுக் கொண்டு, மத்திய அரசு இதழில் வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி, இந்த அமைப்பிற்குத் தற்சார்பு அதிகாரம் எதுவும் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, காவிரியின் அணைகள், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று வரைவுச் செயல்திட்டத்தின் பிரிவு 9 (3)-இன் உட்பிரிவு (IV) கூறுகின்றது.

காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் அடாவடி செய்தால், அணைகளைத் திறக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அறவே இல்லை. 

வரைவு செயல் திட்டத்தின் பிரிவு 9 (3), உட்பிரிவு (XIV) -இன்படி ‘கர்நாடகம் நீர் திறக்க மறுத்தால் காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய அரசிடம் முறையீடு செய்து உதவி கோரலாம்’ என்றுதான் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

‘காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட, மேல் பாசன மாநிலம் முயலக் கூடாது’ என்று, காவிரி நடுவர் மன்றம், தனது இறுதித் தீர்ப்பு தொகுதி V, பாகம் 9, பிரிவு XI-இல் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

ஆனால், உச்ச நீதிமன்றம் ஏற்பு அளித்து இருக்கின்ற காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடகம் காவிரியில் அணை கட்ட முயன்றால் அதனைத் தடுக்கும் அதிகாரம் இல்லை.

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தமது அறிக்கையில் விரிவாக இதனைச் சுட்டிக்காட்டி, காவிரியில் தமிழகம் வஞ்சிப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இருக்கின்றார். 

தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதகங்களை மறைத்து விட்டு, மத்திய அரசின் பச்சைத் துரோகத்திற்குத் துணை போகும் எடப்பாடி பழனிசாமி அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தை மிகப் பெரிய சாதனையாகக் கொண்டாடுவது தவறு. 

காவிரி மேலாண்மை ஆணையம் மூலம், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதி உத்தரவை எதிர்த்து, ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்பக் கோரி, தமிழக அரசு வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 3
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை மூடக் கோரி கடந்த 22 ஆண்டுகளாக, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடி வருவது மட்டும் அன்றி, சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றார். தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்திலும் வழக்குத் தாக்கல் செய்து வாதாடி வருகின்றார்.

இந்நிலையில், கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக தூத்துக்குடி குமரெட்டியாபுரத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு, ‘ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது; ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்’ என்று போராடி வருகின்றனர்.

மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணி சென்றனர். அமைதியாக அறவழியில் பேரணியாக வந்த பொதுமக்களை, காவல்துறையினர் காட்டுமிராண்டித் தர்பார் நடத்தி, காக்கை, குருவிகளைச் சுடுவது போலப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தமிழக அரசின் திட்டமிட்ட உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில், 13 அப்பாவி மக்கள் பலி ஆகி உள்ளனர். இது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற நிகழ்வு இதுவரையில் நடந்தது இல்லை. 

மக்களின் நியாயமான அறவழிப் போராட்டங்களை அடக்குமுறை தர்பார் மூலம் ஒடுக்கி விடலாம் என்று பகல் கனவு காணும் மத்திய, மாநில அரசுகள், தூத்துக்குடியில் முன்னோட்டம் பார்த்துள்ளன. தூத்துக்குடி படுகொலைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இதற்குப் பொறுப்பு ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 4

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் நான்கு ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் கட்டுப்படுத்த முடியாத வீழ்ச்சியை நோக்கிச் சென்று விட்டது என்று பொருளாதார நிபுணர்களும், பா.ஜ.க. முன்னணித் தலைவரும், முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சருமான திரு. யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி, மக்கள் வயிற்றில் அடிக்கும் மாபாதகச் செயலில் மோடி அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. 

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என்பதை ஏற்க முடியாது. 

2013-இல் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 105 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூ. 76 ஆக இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை 80 டாலராக இருக்கும்போது, பெட்ரோல் விலை ரூ. 80 ஆகவும், டீசல் விலை ரூ. 73 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி, மதிப்புக் கூட்டு வரிகளால் அவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இதனால் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கின்றது.

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உடனடியாகக் குறைப்பது மட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விற்பனையை பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 5

குருகுலக் கல்வியைப் பரவலாக்குவது தொடர்பாக, உஜ்ஜயினியில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நடத்திய மாநாட்டு முடிவுகளை, மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

முதல் நடவடிக்கையாக , குரு குலக் கல்விச் சாலையில் படித்த மாணவர்கள்10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் நேரடியாகச் சேருவதற்குத் தகுதி படைத்தவர்கள் எனச் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 15 வயது நிரம்பிய எந்தவொரு மாணவரும், சமஸ்கிருதம் படிக்க, எழுதிடத் தெரியும் என தனக்குத் தானே சான்று அளித்தால், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும், தேசிய திறந்த பள்ளி நிறுவனம் (National Institute of Open Schooling) நேரடியாகப் பத்தாம் வகுப்பில் சேர அனுமதி அளித்து விடும்.

அதற்கான அனுமதிச் சான்று பெறுவதற்கு முன்பாக, மாணவர்கள் ஐந்து பாடங்களில் தேர்வு எழுதிட வேண்டும். அவை, வேத அத்தியாயன (வேதம் கற்றல்), பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை), சமஸ்கிருத வியாகரன (சமஸ்கிருத இலக்கணம்), சமஸ்கிருத சாகித்ய (சமஸ்கிருத புலமை) மற்றும் சமஸ்கிருத மொழி ஆகிய ஐந்து பாடங்களில் தேர்வுஎழுதி, குறைந்தது 33 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று இருந்தால், 10ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வியைத் தொடர சான்று அளிக்கப்படும்.

முறையான கல்வித் திட்டத்தில் பிற மாணவர்கள் பயின்ற பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, பூகோளம் பற்றி, குருகுலக் கல்விக் கூடங்களில் பயின்ற மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.

இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தை (Indian Knowledge Tradition) வளர்ப்பதற்காக எனச் சொல்லப்படும் இந்த மத்திய அரசுத் திட்டம், உண்மையில் அடிப்படைக் கல்வி பயிலாத மாணவர்களும், 10ஆம் வகுப்பில் சேர்ந்திட, சமஸ்கிருதக் கல்வி பயின்றிருந்தால் போதும் எனக் கூறுகின்றது.

சமஸ்கிருதத் திணிப்பினை முன்னிறுத்தி, கல்வியின் தரத்தைச் சீரழிப்பதற்கு மத்திய அரசால் இந்தப் புதிய கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம் பயின்ற மாணவர்கள், குருகுலக் கல்வி முறையிலோ அல்லது அஞ்சல் வழிப் பள்ளியிலோ பயின்ற மாணவர்கள், முறையான கல்வித் திட்டத்தில் பள்ளிப் படிப்பினை முடித்திட ஏதுவான ஒரு வழிமுறையாக இந்தப் புதிய திட்டம் கொண்டு வரப்படுகின்றது. ‘கல்வியின் தரம் பற்றிய கவலை இல்லை; சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் போதும் எனும் சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிக்கும் நோக்கில் பா.ஜ.க. அரசு செயல்படுகின்றது. 

குருகுலக் கல்வி என்ற போர்வையில், ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தும் வருணாசிரம முறையை, குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய பா.ஜ.க. ஆட்சியின் முயற்சிகளைத் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் கடமையும் ஆகும். 

இத்தகயை பிற்போக்குக் கல்வித் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, மாநிலம் தழுவிய பிரச்சாரம் மற்றும் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம்: 6

மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ‘நீட்’ திணிக்கப்பட்டு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியல் வகுப்பு மாணவர்களின் மருத்துவக் கனவை மோடி அரசு சிதைத்து வருகின்றது. இரண்டாம் ஆண்டாக மே 6, 2018-இல் நடைபெற்ற ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் ‘நீட்’ எழுத விண்ணப்பித்து இருந்த மாணவர்களுள் சுமார் 5,500 பேர்களுக்குத் தேர்வு எழுதும் மையங்கள் தமிழகத்தில் ஒதுக்காமல் கேரளா, ஆந்திரா, இராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

‘நீட்’ தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் அலட்சியப் போக்கின் காரணமாக தமிழக மாணவர்கள் பெருத்த அலைக்கழிப்புகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி, ‘நீட்’ தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலைமை திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. 

மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்குக்கு இது ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

‘நீட்’ தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இழைத்த கொடுமைகளைக் கண்டு இதயம் நொறுங்கிய மாணவச் செல்வங்களின் பெற்றோர் மூவர் உயிர் இழந்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ‘நீட்’ எழுதச் சென்ற திருத்துறைப்பூண்டி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி, சிங்கம்புணரி மாணவி ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன், பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த மாணவி சுவாதியின் தந்தை சீனுவாசன் ஆகியோர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.

‘நீட்’ தேர்வின் மூலம் தமிழகத்தின் கல்வி உரிமை மீது ஆதிக்கம் செலுத்தி வரும் மோடி அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், தமிழகச் சட்டமன்றத்தில் பிப்ரவரி 2017-இல் நிறைவேற்றப்பட்ட ‘நீட் விலக்கு கோரும் சட்ட முன் வடிவு’க்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 7

இந்தியாவின் இரண்டாவது பசுமை வழிச் சாலை, சேலம் முதல் சென்னை வரை பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கு 2018, பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அண்மையில் சென்னைக்கு வருகை தந்த மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சேலம்-சென்னை எட்டு வழி பசுமைச் சாலை 274 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட இருப்பதாகவும், இந்த அதி விரைவுச் சாலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கு மூன்று மணி நேரத்தில் பயணிக்கலாம் என்றும் கூறி இருக்கின்றார்.

சேலம் - சென்னை பசுமை வழிச் சாலை அமைக்கும்போது சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பசுமை வளங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விடும்.

தொன்மை மிக்க கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர் மற்றும் மழை வளம் தரும் காடுகள், விவசாய நிலங்கள் நிறைந்துள்ள இப்பகுதியில் அமைய உள்ள 274 கி.மீ. நீள பசுமை வழிச் சாலையில், 230 கி.மீ. முற்றிலும் காடுகள், மலைகள் நிறைந்த பசுமை படர்ந்த பகுதிகள் ஆகும்.

சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலை, சேத்துப்பட்டு மலை, ஜருகு மலைக் காடுகள் மற்றும் நீப்பத்துத்துறை தீர்த்தமலை காடுகள், காஞ்சி மாவட்டத்தில் சிறுவாஞ்சூர் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நம்பேடு, சாத்தனூர்-பிஞ்சூர், திருவண்ணாமலை சொரகுளத்தூர், போளூர்-அலியாலமங்கலம், செங்கம்-முன்னூர்மங்கலம், ஆனந்தவாடி மற்றும் ராவந்தவாடி, தருமபுரி மாவட்டத்தில் அரூர் முதல் பூவாப்பட்டி மற்றும் விரிவு படுத்தப்பட்ட பூவாம்பட்டி காடுகள், தீர்த்தமலை நோநாங்கனூர் மற்றும் பள்ளிப்பட்டி விரிவுபடுத்தப்பட்ட காடுகள், சேலம் மாவட்டம் மஞ்சவாடி கணவாய் மற்றும் ஜருகுமலை வனப் பகுதி போன்ற இயற்கை வளங்கள், பசுமை வழிச் சாலை திட்டத்தால் சூறையாடப்பட்டு விடும்.

கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் காணப்படும் இரும்புத் தாது, கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களை, ஜிந்தால் போன்ற பெரும் நிறுவனங்கள் கொள்ளை அடிக்கவும், சேலம் உருக்கு ஆலையைத் தாரை வார்த்துக் கொடுத்து, தனியார் நிறுவனங்களின் போக்குவரத்து வசதிக்காகவும், 8 வழி பசுமைச் சாலை அமைக்கும் நோக்கத்தை மத்திய அரசு செயற்படுத்த முனைந்து இருக்கின்றது.

அடர்ந்த வனங்கள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிவதோடு, இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 8

இந்தியாவின் மிகப் பெரிய இணைய வணிக நிறுவனம் ‘பிளிப் கார்ட்’டின் 77 விழுக்காடுப் பங்குகளை, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், சுமார் ரூ. 1.07 இலட்சம் கோடி (16 பில்லியன் டாலர்) செலவில் கைப்பற்றி இருக்கின்றது. இந்தியாவில் இணைய வணிகத்தின் மதிப்பு உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வால்மார்ட், இங்கே நுழைவதற்கு வாசலைத் திறந்து விட்டது. சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதால் நாடு முழுவதும் உள்ள சில்லரை வணிகர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில், பிளிப் கார்ட் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றி இருக்கும் வால்மார்ட், உள்நாட்டுச் சில்லரை வணிகத்தை அடியோடு ஒழித்து விடும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

வால்மார்ட், சீனாவில் இருந்து பொருட்களை வாங்குவதால் இந்தியாவில் இணைய வணிகத்தின் மூலம் சீனப் பொருட்கள் வந்து குவியும். இதனால் உள்நாட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் தேக்கம் அடையும். மேலும், வால்மார்ட் இணைய வணிகம், கோடிக்கணக்கானோரின் வேலைவாய்ப்பைப் பறித்து விடும். 

எனவே, வால்மார்ட் இணைய வணிகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 9

தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT), மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) பனிரெண்டாம் வகுப்புப் பாடநூலை 11 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றி அமைத்து இருக்கின்றது. 

இதில், ‘விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசியல்’ எனும் தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள பாடநூலில், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு அமைந்ததை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று வர்ணிக்கப்பட்டு இருக்கின்றது. 

இதே புத்தகத்தில் “பொதுவுடைமை - மதச் சார்பின்மை - ஜனநாயகம்” எனும் தலைப்பில் உள்ள அத்தியாயம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. 1986-ஆம் ஆண்டில் இருந்து “இந்து தேசியவாத” கோட்பாடு வளர்ச்சி பெற்றதாகவும், இந்துத்துவா என்பதற்கு வி.டி. சாவர்கர் கொடுத்த விளக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியாவைத் தந்தை நாடாக ஏற்றுக் கொள்வது மட்டும் அன்றி, இந்திய நாட்டைப் புனித பூமியாகவும் கருதுகின்றவர்கள்தான் ‘இந்தியர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். மற்றவர்கள் அந்நியர்கள்” என்று கூறிய வி.டி. சாவர்கர் கருத்துக்கு விளக்க உரை தரப்பட்டு இருக்கின்றது.

பாடநூல்களில் இந்துத்துவ மத வெறியைப் புகுத்தி, சிறுபான்மை இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களை இந்நாட்டிற்கு அந்நியர்கள் என்று சித்தரிக்கும் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டத்தின் கொள்கையைத் திணிக்கும் வகையில் திட்டமிட்டு மோடி அரசு பாட நூல்களைக் காவிமயம் ஆக்கி வருவதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், அத்தகைய பாடங்களை என்.சி.இ.ஆர்.டி. பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 10

தொழிற்துறைப் பணிகளுக்கான (நிலை ஆணைகள்) மைய விதிகள் (சட்டத் திருத்தம்) - 2018 என்னும் வரைவு அறிக்கை ஒன்றை, சட்ட வடிவம் பெற மத்திய அமைச்சரவை 2017, டிசம்பர் 15 அன்று ஒப்புதல் அளித்து இருக்கின்றது. இதன்படி வேலை வரம்பு ஒப்பந்தம் (Fixed Term Employment) சட்டம் ஆக்கப்படும். இவ்வொப்பந்தம், நிறுவனங்களின் விருப்பப்படி வேலைவாய்ப்பு வழங்கும் ஒப்பந்தம் ஆகும். அதன்படி, இனி தொழிற்சாலைகளில் வேலை இருந்தால் மட்டுமே தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர். பணிப் பாதுகாப்பு, வேலை உத்தரவாதம் என்பதெல்லாம் இனி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் கிடையாது. 

இதுவரை ஒரு ஒப்பந்தத் தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவதாக இருந்தாலும் கூட, தொழிற் தகராறு சட்டப்படி முன்கூட்டியே முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும்; வேலை விட்டு நீக்கியதை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் அந்நிய முதலீடுகள் வருவதற்கு நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் தடையாக இருக்கின்றன என்று, பா.ஜ.க. அரசு அவற்றை ரத்து செய்து வருகின்றது. 

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இருந்த குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்பைக் கூட நீக்குவது தொழிலாளர் வர்க்கத்தின் கழுத்தை நெறிப்பது போன்றதாகும். அரசுத் துறை, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. நிரந்தரத் தன்மை உள்ள பணிகள் அனைத்தையும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் சொற்ப ஊதியம் வழங்கி நிறைவேற்றி வரும் சூழலில், வேலை இருக்கும்போது வர வேண்டும்; இல்லையெனில் வெளியேற வேண்டும் என்று தினக்கூலிகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களை மாற்றும் வேலை வரம்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 11

உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவின் மூலம் தமிழகத்தின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்பிறகும், மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சிச் சாலைகளாக மாற்றி, மதுக்கடைகளை தமிழக அரசு திறந்தது. இதற்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக அரசு காரணம் கூறியது. 

இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிச் சாலைகளாக வகை மாற்றம் செய்து, முறையாக அறிவிக்கப்படாத சாலைகளுக்கு அருகே உள்ள 1,300 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. 

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசு, மீண்டும் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவு பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தினேஷ் நல்லசிவன், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு, பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருந்த நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டை, இரயில்வே மேம்பாலத்தில் மே 2 -ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த மடலில், “அப்பா, நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதாலே எனக்கு கொள்ளி வைக்காதே என்று எழுதி இருப்பது வேதனை அளிக்கின்றது. அத்துடன், “இனிமேலாவது இந்தியாவில் பிரதமரும், தமிழகத்தில் முதல் அமைச்சரும் மதுக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம்; இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்,” என்று அந்தப் பிஞ்சு உள்ளம் கடிதத்தில் தீட்டி இருக்கின்றது.

தினேஷ் நல்லசிவன் குடும்பம் போன்று இலட்சக்கணக்கான குடும்பங்கள் மதுவால் சீரழியும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்; படிப்படியாக மதுக்கடைகளை மூடி, முழு மதுவிலக்கைச் செயற்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை