தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்று, 30.05.2018 முதன் முதலாக மேல்நிலை முதலாம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மேலும் வெல்க! என வாழ்த்துகிறேன்.
இத்தேர்வு எழுதிய 25 இலட்சம் மாணவர்களில் சுமார் ஐந்து முதல் பத்து சதவிகித மாணவர் தோல்வி அடைகின்றனர். சுமார் 30 சதவிகித மாணவர்கள் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்று தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர்.
இதன் விளைவாக, மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட விபரீத நிலைக்குச் செல்வதை அறிகின்ற போதும், பத்திரிகைகளில் அத்தகைய செய்திகள் வெளிவருவதைக் காணும்போதும் என் மனம் பெரிதும் துயருறுகின்றது.
இத்தேர்வுகளை எழுதச் செல்லும் மாணவர்களுக்கு நான் வழக்கமாக தெரிவிக்கின்ற வாழ்த்துச் செய்திகள் கூட, அதிக மதிப்பெண் பெறுவது என்பது அடுத்தடுத்த படிப்புக்குச் செல்வதற்கான ஒரு வாய்ப்புதானே தவிர, வாழ்க்கையே தீர்மானிக்கும் காரணி அல்ல என்று குறிப்பிடுவது உண்டு.
இன்று அறிவியியல், பொறியியல், சமூகவியல், அரசியல், கலைத்துறை, தொழில்துறை உள்ளிட்ட பல்துறைகளிலும் தலைசிறந்து விளங்கும் பெருமக்களில் பெரும்பாலோர் பள்ளித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அல்ல. இதன் மூலம் மதிப்பெண்கள் மட்டுமே எதிர்கால வாழ்வை தீர்மானிக்கும் சக்தி அல்ல என்பதை அறியலாம்.
பல பெற்றோர்களே, தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்கள் குறைந்துவிட்டதாகக் குறைபட்டுக்கொள்கின்றனர். அவ்வாறு குறைப்பட்டுக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. குழந்தைகள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாகவும், சிந்தனைத் திறன் உடையவர்களாகவும், ஆற்றலாளர்களாகவும் வளர்ந்திடப் பயிற்றுவிப்பதே பெற்றோரின் கடமை ஆகும்.
அதற்கும், தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் வெவ்வேறானை. எனவே பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த, மதிப்பெண் குறைந்த மாணவர்கள் வாழ்வே சூன்யமாகிவிட்டதாகக் கருதி தற்கொலை செய்துகொள்ளுதல், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல் போன்ற விபரீத முடிவுகளுக்குச் செல்ல வேண்டாம்.
ஒரு கதவு அடைக்கப்பட்டால், ஆயிரம் கதவுகள் திறந்திருக்கும் என்ற இயற்கை நியதியை நெஞ்சில் பதித்து, அதற்கேற்றவாறு எதிர்கால திட்டங்களை வகுத்துச் செயல்பட முன்வர வேண்டும். அருமைப் பெற்றோர்களும், உறவினர்களும் சமூகமும் அத்தகைய மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ளாத வகையில் அவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களது எதிர்காலம் செம்மையாக அமைந்திட நல்வழி காட்டிட முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 30-05-2018 அன்று தனது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment