தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். சோழ வள நாடாம் தஞ்சை மாவட்டத்தில் பிறந்த பாலகுமாரன் அந்த மண்ணுக்கே உரிய கலை, இலக்கிய, பண்பாட்டு உணர்வில் தோய்ந்து வளர்ந்தவர். 1969-ஆம் ஆண்டு சிறுகதை எழுத்தாளராக அறிமுகம் ஆகி, இருநூற்று எழுபத்து நான்கு நாவல்களைப் படைத்து, இலக்கிய சிகரம் தொட்ட பெருமை பாலகுமாரன் அவர்களுக்கு உண்டு.
பாலகுமாரனின் எழுத்து ஓவியங்களான இரும்புக் குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், சுகஜீவனம் போன்ற படைப்புகள் நெஞ்சை விட்டு நீங்காதவை. சிறுகதை இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த பாலகுமாரன் அவர்களின் ‘கடற்பாலம்’ சிறுகதை தொகுப்பைப் படித்து வியந்திருக்கிறேன். பாலகுமாரனின் படைப்புக்களில் தனி மனிதனின் வாழ்வு மேம்பட்டால்தான் சமூகமும் நாடும் உயர்ந்தோங்கும் என்பது மைய இழையாக இருக்கும். பழந்தமிழ் இலக்கியங்களின் கருத்துக்கள் தோய்ந்ததாக அவருடைய நாவல்கள் இருப்பதைக் காணலாம்.
திரை உலகிலும் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களோடு இணைந்து உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்; வெற்றி கண்ட திரைப்படங்களான நாயகன், பாட்சா, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்குக் கருத்துச் செறிவுள்ள வசனம் தீட்டியவர்.
பாலகுமாரனின் படைப்புத் திறனைக் காலம் காலமாகப் பேசும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழன் பற்றியும், தஞ்சை பெருவுடையார் கோவில் பற்றியும் ஆறு பாகங்கள், 2500 பக்கங்கள் கொண்ட பிற்காலச் சோழர்களின் சரித்திரத்தைக் கண்முன் நிறுத்தும் ‘உடையார்’ எனும் நாவல் விளங்குகிறது. ஆன்மீகச் சிந்தனைகள் அடங்கிய பல படைப்புக்களை வழங்கியவர் பாலகுமாரன் என்பதும் அவருக்கு உரிய தனிச் சிறப்பு ஆகும்.
எழுத்து ஆளுமையும், இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயத்தைத் தொட்ட படைப்பாளி எனும் கீர்த்தியும் பெற்றிருந்த பாலகுமாரன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment