மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம், 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி அளவில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, என்.எச். 7 சாலையில் அமைந்துள்ள ‘ஹோட்டல் செல்லா’ அரங்கில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:-
நூற்றாண்டு கண்ட திராவிட இயக்க வரலாற்றில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மே 6, 1994 இல் உதயமாகி, வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகள் பாதுகாக்கப்படவும், தமிழ் இன மொழி, பண்பாட்டு உரிமைகளுக்காகவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று போராடி வருகிறது. திராவிட இயக்கத்தின் முதல் மூவர் டாக்டர் சி. நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் போன்ற தலைவர்களும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரும் வகுத்த இலட்சியப் பாதையில் தடம் புரளாமல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பயணிக்கிறது.
தமிழ்நாட்டின் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் 24 ஆண்டுகளாக கழகம் களத்தில் நின்று சமரசமின்றி போராடி வந்திருக்கிறது.
திராவிட இயக்கத்தின் இன்னொரு பரிணாமமாக மலர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழாவை மாவட்ட வாரியாக இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது என்று இந்த உயர்நிலைக் குழுத் தீர்மானிக்கிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 110-ஆவது பிறந்த நாள் விழாவை செப்டம்பர் 15, 2018 இல் முழு நாள் மாநாடாக நடத்துவது எனவும் உயர்நிலைக் குழு தீர்மானிக்கிறது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 13-05.2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment