காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த அத்தீர்ப்பில் தெளிவாக சுட்டிக்காட்டியவாறு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரு அமைப்புகளை மத்திய அரசு உருவாக்கினால்தான் தமிழகத்தின் காவிரி உரிமையை ஓரளவு நிலைநாட்ட முடியும். இதற்காகத்தான் தமிழகம் கொந்தளித்துப் போராடி வருகிறது.
இந்நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு, இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் ‘காவிரி செயல் திட்டம்’ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இருக்கிறது.
பக்ரா - பியாஸ் மேலாண்மை ஆணையத்தை முன் மாதிரியாகக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால்தான் இறுதித் தீர்ப்பு செயல்பாட்டுக்கு வரும் என்று காவிரி நடுவர் மன்றமே சுட்டிக்காட்டியது. காவிரி பிரச்சினையில் மோடி அரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான துரோக நடவடிக்கைகள் அனைத்தும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைக் குப்பைக் கூடையில் வீசி எறிகின்ற விதத்தில்தான் இருக்கின்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகம் எதிர்க்கிறது என்பதைக் காரணமாகக் காட்டி, அரசியல் சட்ட அதிகாரம் இல்லாத ஒரு வெற்று மேற்பார்வைக்குழுவை அமைக்க செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது மன்னிக்கவே முடியாத அநீதியாகும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவிடாமல் தடுப்பதற்கு கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பு வழக்கறிஞர் பா~லி நாரிமன் மூலம் மே 10 , 2013 இல் காவிரி மேற்பார்வைக்குழு அமைக்க வேண்டும் என்று கருத்துக் கூறியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா, குரியன் ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு கர்நாடகத்தின் வஞ்சகமான கருத்தை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு மேற்பார்வைக்குழு அமைக்க உத்தரவிட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, மே 24, 2013 இல் மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையில் ‘தற்காலிக காவிரி நீர் இறுதித் தீர்ப்பு அமலாக்கத் திட்டம்’ என்ற பெயரில் ஒரு மேற்பார்வைக் குழுவை அமைத்தது.
இந்த மேற்பார்வைக் குழுவுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரம் கிடையாது. கர்நாடகத்தில் உள்ள அணைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சட்ட அங்கீகாரம் கிடையாது. தற்போது மோடி அரசு கொடுத்துள்ள வரைவுத் திட்டமும் அதிகாரம் ஏதுமற்ற பல் இல்லாத ஒரு மேற்பார்வைக் குழுதான் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பாக இருந்தால் கர்நாடகத்திலுள்ள அணைகள் மேற்பார்வைக் குழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு காவிரியில் கட்டப்பட்டுள்ள அணைகள் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று செயல் திட்டத்தில் தெரிவித்து இருப்பது தமிழகத்தை நிரந்தரமாக புதைகுழியில் தள்ளும் அக்கிரமம் ஆகும். இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் பாசனத் திட்டங்கள், நீர்ப் பாசன முறைகள், சாகுபடி பரப்பளவு, தண்ணீர் பயன்பாட்டு முறைகளை மத்திய அரசு அமைக்கும் ‘பெயர் சூட்டப்படாத’ குழு நெறிப்படுத்தும் என்று செயல்திட்டத்தில் குறிப்பிட்டு இருப்பதும், நடுவர் மன்ற உத்தரவை திசை திருப்பும் யுக்தியாகவே தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நிகரான நடுவர் மன்றத் தீர்ப்பை முற்றிலும் நீர்த்துப் போகச் செய்திடும் வகையில் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை உருவாக்கி, தமிழகத்தின் ஈராயிரம் ஆண்டுகால மரபு உரிமையை தட்டிப் பறிக்க நினைப்பதை தமிழக மக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள். உச்சநீதிமன்றமும், மோடி அரசும் தமிழக நலன்களுக்கு பாதகமான முடிவுகளை மேற்கொண்டு வருவதை சகித்துக்கொள்ள முடியாது.
உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16 ஆம் தேதி வழங்கியத் தீர்ப்பை ஏழு நீதிபதிகளுக்கு மேலாக அரசியல் சாசன அமர்வின் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழகம் மனுதாக்கல் செய்ய வேண்டும். இதை விடுத்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மோடி அரசின் மோசடியான காவிரி செயல் திட்டத்திற்கு ஆதரவாக பல்லக்குத் தூக்குவது தமிழ்நாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 14-05-2018 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment