Friday, May 25, 2018

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது-வைகோ கண்டனம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் தமிழக உரிமைகளைக் காக்க சுற்றுச்சூழலைக் காக்க காவிரி உரிமையைக் காக்க அறவழிகளிலே போராடி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகக் காவல்துறை நடத்திய படுகொலையைக் கண்டித்து போராடிய கட்சிகளைப் போலவே அவருடைய இயக்கமும் அறவழியில் சென்னையில் போராடியது. நேற்று அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இன்று தூத்துக்குடியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக வருகை தந்த வேல்முருகன் அவர்களை தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்தது கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற பாசிச நடவடிக்கை என குற்றம் சாட்டுகிறேன். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தமிழக அரசின் அராஜக நடவடிக்கைகளால் காவல்துறை நடத்திய படுகொலைகளால் வேதனை கொண்டிருக்கின்ற மக்களை மேலும் ஆத்திரத்திற்கு ஆளாக்க வேண்டாம். வேல்முருகன் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 25-05-2018 அன்று தெரிவித்துள்ளார்.



ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment