Tuesday, May 29, 2018

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட அழிவுக்குத் தமிழக அரசே பொறுப்பு! வைகோ அறிக்கை!

தூத்துக்குடி மாநகரில் மே 22 ஆம் தேதியன்று, அ.தி.மு.க. அரசு, எந்த வன்முறையிலும் ஈடுபடாது, கோரிக்கை கொடுக்கச் சென்ற நிராயுதபாணியான மக்கள் மீது, காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்தி, 14 தமிழர்களின் உயிரைப் பலி கொண்டு, பலரை மரண காயப்படுத்தி, காவல்துறை கோரத் தாண்டவம் ஆடியதன் எதிர் விளைவாக, தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார மக்கள் எரிமலையாகக் கொந்தளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு இன்று (28.5.2018) அறிவித்துள்ளது.

இந்த நச்சு ஆலையால் ஏற்பட்ட புற்று நோயால் மக்கள் மடிந்ததற்கும், விவசாயம் சீரழிந்ததற்கும், மலை போலக் கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட நாசம், நச்சுக் கந்தக வாயு பரவியதால், பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல்நலக் கேட்டுக்கும் அ.தி.மு.க. அரசே பொறுப்பு ஆகும்.

1994 ஆம் ஆண்டு, மராட்டிய மாநிலத்து இரத்தினகிரி விவசாயிகளால் உடைத்து நொறுக்கப்பட்டு, சரத் பவார் அரசால் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு, எந்த மாநிலமும் அனுமதி கொடுக்காத நிலையில், தமிழகத்தில் விண்ணப்பித்த பதினைந்தாம் நாளில், அ.தி.மு.க.வின் ஜெயலலிதா அரசு லைசென்ஸ் கொடுத்தது.

1996 இல், இந்த ஆலை இயங்கத் தொடங்கிய நாளில் இருந்து, கடந்த 22 ஆண்டுகளாக நானும், எங்கள் தோழர்களும், இடைவிடாத போராட்டங்களை நடத்தினோம்.

1997 தொடக்கத்தில் உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில், 2010 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 22 இல், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிபி தர்மராவ், பால் வசந்தகுமார், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று, வழக்கு நடந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆலையை இயக்கலாம் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், 2012 டிசம்பரில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தன.

2013 ஏப்ரல் 2 ஆம் நாள், உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தீர்ப்பு வழங்கப் போகிறது என்று கருதி, மூன்று நாட்களுக்கு முன்பு, மார்ச் 29 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பட்நாயக், கோகலே அமர்வு, ஒப்புக்கு 100 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யச் சொல்லிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று தீர்ப்பு அளித்தது.

பொதுமக்களை ஏமாற்றுவதற்காக, தென் மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது. நானும் வழக்குத் தொடுத்தேன்.
ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் வசப்படுத்தும் சக்தியால், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தில்லி தலைமை அமர்வு, வழக்கு விசாரணையைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, ‘ஆலையை இயக்கலாம்’ என்று தீர்ப்பு அளித்தது. 

அதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. நானும் தனியாக ரிட் மனு தாக்கல் செய்தேன். இந்த இரண்டு மனுக்களும் ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.


இந்தப் பின்னணியில், ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கு அ.தி.மு.க. அரசு உடன்பட்டு, சிப்காட் மூலம் நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கியது.

அதனை எதிர்த்து, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், குமரெட்டியாபுரம், சில்வர்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், தூத்துக்குடி மாநகர மக்கள் அறப்போர் தொடுத்தனர்.

விரிவாக்கத்திற்கு எதிராக மட்டும் அல்ல, ஆலையையே மூட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் ரிட் மனு தாக்கல் செய்தேன். ஜூன் 13 ஆம் நாள் இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது.

இதற்கு இடையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட இருந்த அனுமதி காலாவதியாகிப் போனது. அதைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்கவில்லை.

இதனால், ஸ்டெர்லைட் நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பு ஆயத்தில் அனுமதி கேட்டு வழக்குத் தொடுத்தது.

அதனை எதிர்த்து நானும் அதே தீர்ப்பு ஆயத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். வழக்கு ஜூன் 6 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கின்றது.

இந்தச் சூழலில், தூத்துக்குடி மட்டும் அல்ல, தமிழக மக்களின் மொத்த வெறுப்பிற்கும் ஆளாகி இருக்கின்ற அ.தி.மு.க. அரசு, செய்த பாவம், ஏற்பட்ட பழியில் இருந்து தப்பித்துக் கொள்ள, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக இன்று (28.5.2018) அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனரும், வேதாந்தா குழுமத்தின் அதிபருமான அனில் அகர்வால், அரசிடம் அல்லது நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, ஆலையைத் தொடர்ந்து இயக்குவேன் என்று நான்கு நாள்களுக்கு முன்பு திமிராக அறிவித்தார். 

எனவே, நீதிமன்றத்தில் அரசின் ஆணையை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடுக்கும் வழக்கில், ஒருவேளை, 2013 ல் நடந்தது போலவே, உச்சநீதிமன்றத்தில் நீதி பறிக்கப்படுமானால், ஸ்டெர்லைட் ஆலையை இயக்கும் தீர்ப்பு வருமானால், ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்கிறேன்.


ஸ்டெர்லைட் ஆலையை எங்கள் தமிழ் மண்ணில் நடத்த விட மாட்டோம்; இரத்தினகிரியில் திரண்டது போல், இலட்சக்கணக்கானவர்கள் திரண்டு ஆலையை அப்புறப்படுத்துவோம்.

அதுவரை அ.தி.மு.க. அரசு நீடிக்குமானால், 22 ஆம் தேதி போலக் காவல்துறையை அனுப்பி, துப்பாக்கி வேட்டை நடத்தலாம் என்று நினைத்தால், அதனையும் எதிர்கொள்வோம். மத்திய அரசு துணை இராணுவத்தை அனுப்பினாலும், எங்கள் மண்ணையும் மக்களையும் காக்க, மரணத்தைத் துச்சமாக நினைத்து, அடக்குமுறையை எதிர்கொண்டு ஆலையை அகற்றியே தீர்வோம்.

தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகக் காவல்துறை டிஜிபி இராஜேந்திரன் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். 
இதற்கெல்லாம் பொறுப்பு ஏற்று, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பதவியில் இருந்து விலக வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 28-05-2018 அன்று தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment