மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம், 24.05.2018 வியாழக்கிழமை காலை, தாயகத்தில், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம்: 1
பேரறிஞர் அண்ணா, அறிவாசான் தந்தை பெரியார் ஆகியோர் வகுத்த இலட்சியங்களை வென்றெடுக்கும் குறிக்கோளுடன், 1994 மே 6 ஆம் நாள் உதயமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இலட்சக்கணக்கான தொண்டர்களின் தன்னலம் அற்ற உழைப்பாலும், தியாகத்தாலும், குன்றிமணி அளவும் குன்றா நேர்மையாலும், அடக்குமுறைக்கு அஞ்சாது சிறைவாசம் ஏற்ற தீரர்களின் நெஞ்சுரத்தாலும் கட்டிக் காக்கப்பட்டு, 24 ஆண்டுகள் நிறைவு பெற்று, 25 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
2019 மே 6 வரையிலும், ஓராண்டைக் கழகத்தின் வெள்ளி விழா ஆண்டாக, தாய்த் தமிழகத்தின் நலன், தமிழ் ஈழ விடுதலை, இந்தியத் துணைக்கண்டத்தின் மதச்சார்பு இன்மை, மக்கள் ஆட்சிக் கோட்பாடுகளைப் பாதுகாக்கும் கடமை, இந்துத்துவ சக்திகளும், புல்லுருவி அமைப்புகளும் தொடுத்து வரும் நச்சுப் பாணங்களை முறித்து, திராவிட இயக்கத்தைக் காக்கும் கவசமாகக் களத்தில் நிற்கும் உறுதி, அனைத்தையும் இலக்காகக் கொண்டு, வெள்ளி விழா நிகழ்வுகளாக நடத்திட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் நாளில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, கழகத்தின் வெள்ளி விழா என முப்பெரும் விழா மாநாடாக, ஈரோடு மாநகரில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம்: 2
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த, பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தை முன்மாதிரியாகக் கொண்டு, தன்னாட்சி அதிகாரம் கொண்ட, ‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்க வேண்டும் என்று, நடுவர் மன்றம் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றது.
ஆனால், மத்திய அரசு, ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ என்ற பெயரால் ஒரு வரைவுச் செயல்திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அதனை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு ஏற்றுக் கொண்டு, மத்திய அரசு இதழில் வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி, இந்த அமைப்பிற்குத் தற்சார்பு அதிகாரம் எதுவும் அளிக்கப்படவில்லை. குறிப்பாக, காவிரியின் அணைகள், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று வரைவுச் செயல்திட்டத்தின் பிரிவு 9 (3)-இன் உட்பிரிவு (IV) கூறுகின்றது.
காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் அடாவடி செய்தால், அணைகளைத் திறக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அறவே இல்லை.
வரைவு செயல் திட்டத்தின் பிரிவு 9 (3), உட்பிரிவு (XIV) -இன்படி ‘கர்நாடகம் நீர் திறக்க மறுத்தால் காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய அரசிடம் முறையீடு செய்து உதவி கோரலாம்’ என்றுதான் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
‘காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட, மேல் பாசன மாநிலம் முயலக் கூடாது’ என்று, காவிரி நடுவர் மன்றம், தனது இறுதித் தீர்ப்பு தொகுதி V, பாகம் 9, பிரிவு XI-இல் சுட்டிக்காட்டி இருக்கின்றது.
ஆனால், உச்ச நீதிமன்றம் ஏற்பு அளித்து இருக்கின்ற காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடகம் காவிரியில் அணை கட்ட முயன்றால் அதனைத் தடுக்கும் அதிகாரம் இல்லை.
கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தமது அறிக்கையில் விரிவாக இதனைச் சுட்டிக்காட்டி, காவிரியில் தமிழகம் வஞ்சிப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இருக்கின்றார்.
தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதகங்களை மறைத்து விட்டு, மத்திய அரசின் பச்சைத் துரோகத்திற்குத் துணை போகும் எடப்பாடி பழனிசாமி அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தை மிகப் பெரிய சாதனையாகக் கொண்டாடுவது தவறு.
காவிரி மேலாண்மை ஆணையம் மூலம், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதி உத்தரவை எதிர்த்து, ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்பக் கோரி, தமிழக அரசு வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 3
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை மூடக் கோரி கடந்த 22 ஆண்டுகளாக, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடி வருவது மட்டும் அன்றி, சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றார். தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்திலும் வழக்குத் தாக்கல் செய்து வாதாடி வருகின்றார்.
இந்நிலையில், கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக தூத்துக்குடி குமரெட்டியாபுரத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு, ‘ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது; ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்’ என்று போராடி வருகின்றனர்.
மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணி சென்றனர். அமைதியாக அறவழியில் பேரணியாக வந்த பொதுமக்களை, காவல்துறையினர் காட்டுமிராண்டித் தர்பார் நடத்தி, காக்கை, குருவிகளைச் சுடுவது போலப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
தமிழக அரசின் திட்டமிட்ட உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில், 13 அப்பாவி மக்கள் பலி ஆகி உள்ளனர். இது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற நிகழ்வு இதுவரையில் நடந்தது இல்லை.
மக்களின் நியாயமான அறவழிப் போராட்டங்களை அடக்குமுறை தர்பார் மூலம் ஒடுக்கி விடலாம் என்று பகல் கனவு காணும் மத்திய, மாநில அரசுகள், தூத்துக்குடியில் முன்னோட்டம் பார்த்துள்ளன. தூத்துக்குடி படுகொலைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இதற்குப் பொறுப்பு ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 4
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் நான்கு ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் கட்டுப்படுத்த முடியாத வீழ்ச்சியை நோக்கிச் சென்று விட்டது என்று பொருளாதார நிபுணர்களும், பா.ஜ.க. முன்னணித் தலைவரும், முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சருமான திரு. யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி, மக்கள் வயிற்றில் அடிக்கும் மாபாதகச் செயலில் மோடி அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என்பதை ஏற்க முடியாது.
2013-இல் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 105 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூ. 76 ஆக இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை 80 டாலராக இருக்கும்போது, பெட்ரோல் விலை ரூ. 80 ஆகவும், டீசல் விலை ரூ. 73 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி, மதிப்புக் கூட்டு வரிகளால் அவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இதனால் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கின்றது.
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உடனடியாகக் குறைப்பது மட்டுமின்றி, பெட்ரோல், டீசல் விற்பனையை பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பின்கீழ் கொண்டு வர வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 5
குருகுலக் கல்வியைப் பரவலாக்குவது தொடர்பாக, உஜ்ஜயினியில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நடத்திய மாநாட்டு முடிவுகளை, மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.
முதல் நடவடிக்கையாக , குரு குலக் கல்விச் சாலையில் படித்த மாணவர்கள்10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் நேரடியாகச் சேருவதற்குத் தகுதி படைத்தவர்கள் எனச் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 15 வயது நிரம்பிய எந்தவொரு மாணவரும், சமஸ்கிருதம் படிக்க, எழுதிடத் தெரியும் என தனக்குத் தானே சான்று அளித்தால், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும், தேசிய திறந்த பள்ளி நிறுவனம் (National Institute of Open Schooling) நேரடியாகப் பத்தாம் வகுப்பில் சேர அனுமதி அளித்து விடும்.
அதற்கான அனுமதிச் சான்று பெறுவதற்கு முன்பாக, மாணவர்கள் ஐந்து பாடங்களில் தேர்வு எழுதிட வேண்டும். அவை, வேத அத்தியாயன (வேதம் கற்றல்), பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை), சமஸ்கிருத வியாகரன (சமஸ்கிருத இலக்கணம்), சமஸ்கிருத சாகித்ய (சமஸ்கிருத புலமை) மற்றும் சமஸ்கிருத மொழி ஆகிய ஐந்து பாடங்களில் தேர்வுஎழுதி, குறைந்தது 33 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று இருந்தால், 10ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வியைத் தொடர சான்று அளிக்கப்படும்.
முறையான கல்வித் திட்டத்தில் பிற மாணவர்கள் பயின்ற பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, பூகோளம் பற்றி, குருகுலக் கல்விக் கூடங்களில் பயின்ற மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.
இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தை (Indian Knowledge Tradition) வளர்ப்பதற்காக எனச் சொல்லப்படும் இந்த மத்திய அரசுத் திட்டம், உண்மையில் அடிப்படைக் கல்வி பயிலாத மாணவர்களும், 10ஆம் வகுப்பில் சேர்ந்திட, சமஸ்கிருதக் கல்வி பயின்றிருந்தால் போதும் எனக் கூறுகின்றது.
சமஸ்கிருதத் திணிப்பினை முன்னிறுத்தி, கல்வியின் தரத்தைச் சீரழிப்பதற்கு மத்திய அரசால் இந்தப் புதிய கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் பயின்ற மாணவர்கள், குருகுலக் கல்வி முறையிலோ அல்லது அஞ்சல் வழிப் பள்ளியிலோ பயின்ற மாணவர்கள், முறையான கல்வித் திட்டத்தில் பள்ளிப் படிப்பினை முடித்திட ஏதுவான ஒரு வழிமுறையாக இந்தப் புதிய திட்டம் கொண்டு வரப்படுகின்றது. ‘கல்வியின் தரம் பற்றிய கவலை இல்லை; சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் போதும் எனும் சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிக்கும் நோக்கில் பா.ஜ.க. அரசு செயல்படுகின்றது.
குருகுலக் கல்வி என்ற போர்வையில், ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தும் வருணாசிரம முறையை, குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய பா.ஜ.க. ஆட்சியின் முயற்சிகளைத் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் கடமையும் ஆகும்.
இத்தகயை பிற்போக்குக் கல்வித் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, மாநிலம் தழுவிய பிரச்சாரம் மற்றும் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
தீர்மானம்: 6
மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ‘நீட்’ திணிக்கப்பட்டு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியல் வகுப்பு மாணவர்களின் மருத்துவக் கனவை மோடி அரசு சிதைத்து வருகின்றது. இரண்டாம் ஆண்டாக மே 6, 2018-இல் நடைபெற்ற ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் ‘நீட்’ எழுத விண்ணப்பித்து இருந்த மாணவர்களுள் சுமார் 5,500 பேர்களுக்குத் தேர்வு எழுதும் மையங்கள் தமிழகத்தில் ஒதுக்காமல் கேரளா, ஆந்திரா, இராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
‘நீட்’ தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் அலட்சியப் போக்கின் காரணமாக தமிழக மாணவர்கள் பெருத்த அலைக்கழிப்புகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி, ‘நீட்’ தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலைமை திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.
மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்குக்கு இது ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
‘நீட்’ தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இழைத்த கொடுமைகளைக் கண்டு இதயம் நொறுங்கிய மாணவச் செல்வங்களின் பெற்றோர் மூவர் உயிர் இழந்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு ‘நீட்’ எழுதச் சென்ற திருத்துறைப்பூண்டி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி, சிங்கம்புணரி மாணவி ஐஸ்வர்யாவின் தந்தை கண்ணன், பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த மாணவி சுவாதியின் தந்தை சீனுவாசன் ஆகியோர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.
‘நீட்’ தேர்வின் மூலம் தமிழகத்தின் கல்வி உரிமை மீது ஆதிக்கம் செலுத்தி வரும் மோடி அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், தமிழகச் சட்டமன்றத்தில் பிப்ரவரி 2017-இல் நிறைவேற்றப்பட்ட ‘நீட் விலக்கு கோரும் சட்ட முன் வடிவு’க்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 7
இந்தியாவின் இரண்டாவது பசுமை வழிச் சாலை, சேலம் முதல் சென்னை வரை பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கு 2018, பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அண்மையில் சென்னைக்கு வருகை தந்த மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சேலம்-சென்னை எட்டு வழி பசுமைச் சாலை 274 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட இருப்பதாகவும், இந்த அதி விரைவுச் சாலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கு மூன்று மணி நேரத்தில் பயணிக்கலாம் என்றும் கூறி இருக்கின்றார்.
சேலம் - சென்னை பசுமை வழிச் சாலை அமைக்கும்போது சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பசுமை வளங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விடும்.
தொன்மை மிக்க கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர் மற்றும் மழை வளம் தரும் காடுகள், விவசாய நிலங்கள் நிறைந்துள்ள இப்பகுதியில் அமைய உள்ள 274 கி.மீ. நீள பசுமை வழிச் சாலையில், 230 கி.மீ. முற்றிலும் காடுகள், மலைகள் நிறைந்த பசுமை படர்ந்த பகுதிகள் ஆகும்.
சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலை, சேத்துப்பட்டு மலை, ஜருகு மலைக் காடுகள் மற்றும் நீப்பத்துத்துறை தீர்த்தமலை காடுகள், காஞ்சி மாவட்டத்தில் சிறுவாஞ்சூர் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நம்பேடு, சாத்தனூர்-பிஞ்சூர், திருவண்ணாமலை சொரகுளத்தூர், போளூர்-அலியாலமங்கலம், செங்கம்-முன்னூர்மங்கலம், ஆனந்தவாடி மற்றும் ராவந்தவாடி, தருமபுரி மாவட்டத்தில் அரூர் முதல் பூவாப்பட்டி மற்றும் விரிவு படுத்தப்பட்ட பூவாம்பட்டி காடுகள், தீர்த்தமலை நோநாங்கனூர் மற்றும் பள்ளிப்பட்டி விரிவுபடுத்தப்பட்ட காடுகள், சேலம் மாவட்டம் மஞ்சவாடி கணவாய் மற்றும் ஜருகுமலை வனப் பகுதி போன்ற இயற்கை வளங்கள், பசுமை வழிச் சாலை திட்டத்தால் சூறையாடப்பட்டு விடும்.
கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் காணப்படும் இரும்புத் தாது, கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களை, ஜிந்தால் போன்ற பெரும் நிறுவனங்கள் கொள்ளை அடிக்கவும், சேலம் உருக்கு ஆலையைத் தாரை வார்த்துக் கொடுத்து, தனியார் நிறுவனங்களின் போக்குவரத்து வசதிக்காகவும், 8 வழி பசுமைச் சாலை அமைக்கும் நோக்கத்தை மத்திய அரசு செயற்படுத்த முனைந்து இருக்கின்றது.
அடர்ந்த வனங்கள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிவதோடு, இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 8
இந்தியாவின் மிகப் பெரிய இணைய வணிக நிறுவனம் ‘பிளிப் கார்ட்’டின் 77 விழுக்காடுப் பங்குகளை, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், சுமார் ரூ. 1.07 இலட்சம் கோடி (16 பில்லியன் டாலர்) செலவில் கைப்பற்றி இருக்கின்றது. இந்தியாவில் இணைய வணிகத்தின் மதிப்பு உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வால்மார்ட், இங்கே நுழைவதற்கு வாசலைத் திறந்து விட்டது. சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதால் நாடு முழுவதும் உள்ள சில்லரை வணிகர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில், பிளிப் கார்ட் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றி இருக்கும் வால்மார்ட், உள்நாட்டுச் சில்லரை வணிகத்தை அடியோடு ஒழித்து விடும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்மார்ட், சீனாவில் இருந்து பொருட்களை வாங்குவதால் இந்தியாவில் இணைய வணிகத்தின் மூலம் சீனப் பொருட்கள் வந்து குவியும். இதனால் உள்நாட்டு சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் தேக்கம் அடையும். மேலும், வால்மார்ட் இணைய வணிகம், கோடிக்கணக்கானோரின் வேலைவாய்ப்பைப் பறித்து விடும்.
எனவே, வால்மார்ட் இணைய வணிகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 9
தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT), மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) பனிரெண்டாம் வகுப்புப் பாடநூலை 11 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றி அமைத்து இருக்கின்றது.
இதில், ‘விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசியல்’ எனும் தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள பாடநூலில், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு அமைந்ததை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று வர்ணிக்கப்பட்டு இருக்கின்றது.
இதே புத்தகத்தில் “பொதுவுடைமை - மதச் சார்பின்மை - ஜனநாயகம்” எனும் தலைப்பில் உள்ள அத்தியாயம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. 1986-ஆம் ஆண்டில் இருந்து “இந்து தேசியவாத” கோட்பாடு வளர்ச்சி பெற்றதாகவும், இந்துத்துவா என்பதற்கு வி.டி. சாவர்கர் கொடுத்த விளக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தியாவைத் தந்தை நாடாக ஏற்றுக் கொள்வது மட்டும் அன்றி, இந்திய நாட்டைப் புனித பூமியாகவும் கருதுகின்றவர்கள்தான் ‘இந்தியர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். மற்றவர்கள் அந்நியர்கள்” என்று கூறிய வி.டி. சாவர்கர் கருத்துக்கு விளக்க உரை தரப்பட்டு இருக்கின்றது.
பாடநூல்களில் இந்துத்துவ மத வெறியைப் புகுத்தி, சிறுபான்மை இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்களை இந்நாட்டிற்கு அந்நியர்கள் என்று சித்தரிக்கும் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டத்தின் கொள்கையைத் திணிக்கும் வகையில் திட்டமிட்டு மோடி அரசு பாட நூல்களைக் காவிமயம் ஆக்கி வருவதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், அத்தகைய பாடங்களை என்.சி.இ.ஆர்.டி. பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 10
தொழிற்துறைப் பணிகளுக்கான (நிலை ஆணைகள்) மைய விதிகள் (சட்டத் திருத்தம்) - 2018 என்னும் வரைவு அறிக்கை ஒன்றை, சட்ட வடிவம் பெற மத்திய அமைச்சரவை 2017, டிசம்பர் 15 அன்று ஒப்புதல் அளித்து இருக்கின்றது. இதன்படி வேலை வரம்பு ஒப்பந்தம் (Fixed Term Employment) சட்டம் ஆக்கப்படும். இவ்வொப்பந்தம், நிறுவனங்களின் விருப்பப்படி வேலைவாய்ப்பு வழங்கும் ஒப்பந்தம் ஆகும். அதன்படி, இனி தொழிற்சாலைகளில் வேலை இருந்தால் மட்டுமே தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர். பணிப் பாதுகாப்பு, வேலை உத்தரவாதம் என்பதெல்லாம் இனி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குக் கிடையாது.
இதுவரை ஒரு ஒப்பந்தத் தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவதாக இருந்தாலும் கூட, தொழிற் தகராறு சட்டப்படி முன்கூட்டியே முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும்; வேலை விட்டு நீக்கியதை அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் அந்நிய முதலீடுகள் வருவதற்கு நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் தடையாக இருக்கின்றன என்று, பா.ஜ.க. அரசு அவற்றை ரத்து செய்து வருகின்றது.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இருந்த குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்பைக் கூட நீக்குவது தொழிலாளர் வர்க்கத்தின் கழுத்தை நெறிப்பது போன்றதாகும். அரசுத் துறை, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. நிரந்தரத் தன்மை உள்ள பணிகள் அனைத்தையும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் சொற்ப ஊதியம் வழங்கி நிறைவேற்றி வரும் சூழலில், வேலை இருக்கும்போது வர வேண்டும்; இல்லையெனில் வெளியேற வேண்டும் என்று தினக்கூலிகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களை மாற்றும் வேலை வரம்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 11
உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவின் மூலம் தமிழகத்தின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்பிறகும், மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சிச் சாலைகளாக மாற்றி, மதுக்கடைகளை தமிழக அரசு திறந்தது. இதற்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக அரசு காரணம் கூறியது.
இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிச் சாலைகளாக வகை மாற்றம் செய்து, முறையாக அறிவிக்கப்படாத சாலைகளுக்கு அருகே உள்ள 1,300 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசு, மீண்டும் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவு பெற்றுள்ளது.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தினேஷ் நல்லசிவன், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு, பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருந்த நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டை, இரயில்வே மேம்பாலத்தில் மே 2 -ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த மடலில், “அப்பா, நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதாலே எனக்கு கொள்ளி வைக்காதே என்று எழுதி இருப்பது வேதனை அளிக்கின்றது. அத்துடன், “இனிமேலாவது இந்தியாவில் பிரதமரும், தமிழகத்தில் முதல் அமைச்சரும் மதுக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம்; இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்,” என்று அந்தப் பிஞ்சு உள்ளம் கடிதத்தில் தீட்டி இருக்கின்றது.
தினேஷ் நல்லசிவன் குடும்பம் போன்று இலட்சக்கணக்கான குடும்பங்கள் மதுவால் சீரழியும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்; படிப்படியாக மதுக்கடைகளை மூடி, முழு மதுவிலக்கைச் செயற்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment