தமிழ் இலக்கியப் படைப்பாளியும், தமிழ் அறிஞரும், ஆய்வாளருமான பேராசிரியர் ம.லெ.தங்கப்பா அவர்கள் மறைவு செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.
நெல்லை மாவட்டம் - தென்காசி அருகே உள்ள குறும்பலப்பேரியில் 1934 இல் பிறந்த ம.லே.தங்கப்பா அவர்கள் பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் கல்லூரியில் படித்து, புதுச்சேரி அரசு கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக நெடுங்காலம் பணியாற்றினார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’ இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று தனித்தமிழ் ‘தொன்மொழி’யின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.
தங்கப்பா அவர்களின் தனித்துவமான இலக்கியப் படைப்பு சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்ட ‘Hues and Harmonies From An Ancient Land’ எனும் நூல் காலத்தால் அழியாதது. மரபுக் கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கிய தங்கப்பா அவர்கள் எங்கள் சிட்டுச் சேய்கள், இயற்கை விருது, மழலைப் பூக்கள், பின்னிருந்து ஓர் குரல், பனிப்பாறை நுணிகள் போன்ற கவிதை நூல்களை அளித்துள்ளார்.
உரையாடல், கட்டுரை, இலக்கியத்திலும் சிறப்பிடம் பெற்றுள்ள பல நூல்களை யாத்துத் தந்தார். குறிப்பாக நுண்மையை நோக்கி, எது வாழ்க்கை? திருக்குறளும் வாழ்வியலும், வாழ்க்கை அறிவியல், பாட்டு வாழ்க்கை போன்ற கட்டுரை நூல்கள் ம.லே.தங்கப்பா அவர்களின் படைப்பாற்றலுக்கு சிறந்த சான்றுகளாகும்.
ஈழ விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் மட்டுமல்ல, மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் மீது வற்றாத பாசம் கொண்டவர்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த அறிஞர் ம.லே.தங்கப்பா அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். பேராசிரியர் ம.லே.தங்கப்பா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழ் இலக்கிய அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் 31-05-2018 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment