Friday, October 14, 2016

சேலம் உருக்காலையை தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை கைவிட மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

மத்திய பா.ஜ.க. அரசு மோடி தலைமையில் அமைந்தவுடன் கடந்த 28 மாதங்களாக மேற்கொண்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள் பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கும் மட்டுமே வாய்ப்பாக உள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்து வரும் பொதுத்துறை நிறுவனங்களை முற்றாகவே ஒழித்துவிடும் திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது. தமிழகத்தில் குறிப்பிடத்தக்க பொதுத்துறை நிறுவனமாக இயங்கி வரும் சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. சேலம் உருக்காலையில் உற்பத்தியாகும் ‘சேலம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ பன்னாட்டுச் சந்தையில் சிறப்பான இடத்தை வகித்து, உலகின் 43 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சேலம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பாபா அணுஉலை மையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் இந்திய ரயில்வே துறை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்திய அரசின் நாணயச் சாலை தேவைகளுக்காக சுமார் ஒரு லட்சம் டன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வில்லைகள் மற்றும் சுருள்களை சேலம் உருக்காலை வழங்கி இருக்கிறது.

சேலம் உருக்காலை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் அரசுக்கு சுமார் மூன்றாயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி கிட்டியிருக்கிறது. இந்த உருக்காலை பல்வேறு மறைமுக வரிகள் மூலம் இந்திய அரசுக்கு 2700 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.

விரிவாக்கத் திட்டங்களுக்காக 2010 ஆம் ஆண்டு, ரூ.2370 கோடி முதலீடு செய்யப்பட்டு, உருக்கு உற்பத்திக்கூடம் குறுகிய காலத்தில் நிறுவி, சேலம் உருக்காலை ஒருங்கிணைந்த உருக்காலையாக மாற்றப்பட்டது. ஆனால், விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான முதலீட்டை மத்திய அரசின் செயில் நிறுவனம் வழங்காமல், இரண்டாயிரம் கோடி ரூபாய் கடனாக அளித்தது. இந்த முதலீட்டுத் தொiக்கான வட்டிச்சுமை மற்றும் உருக்கு தொழிலில் பன்னாட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, விற்பனை விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் தற்போது சேலம் உருக்காலை நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.

பொதுத்துறையான சேலம் உருக்காலை நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, அந்நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு, தமது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு, தனியாருக்கு தாரை வார்த்திட முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

உள்நாட்டு உருக்குத் தொழில் நலிந்து வரும் நிலையில் சீனா, தென்கொரியா, தைவான் போன்ற வெளிநாடுகளிலிருந்து குறைந்த விலையில் உருக்குப் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பதால், இந்தியச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

சேலம் உருக்காலை நிறுவனம் போன்ற உள்நாட்டு பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றாமல், தனியாருக்கு விற்பனை செய்துவிட்டு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை செயல்படுத்த, அயல்நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு தொழில் தொடங்க வாருங்கள், தொழில் வளர்ச்சிக்கு வகை செய்வோம் என்று நாடு நாடாகச் சென்று பன்னாட்டு நிறுவனங்களை பிரதமர் மோடி அழைப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதனை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பனை செய்வதன் நோக்கம் என்ன? சுமார் 4000 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கவா சேலத்து மக்கள் தங்களது நிலங்களை அரசுக்கு சொற்ப விலைக்கு வழங்கினார்கள்?

சேலம் உருக்காலை நிறுவனத்தில் 1300 நிரந்தர தொழிலாளர்களும், 800 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். சுமார் இரண்டாயிரம் பேருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் நிதி நிலையும் மேம்பட்டுள்ளது. அனைத்து உற்பத்திப் பிரிவுகளும் சிறப்பாக இயங்கி வருகின்றன.

சேலம் உருக்காலை நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கைவிட்டுவிட்டு, விரிவாக்கத் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, கடன் சுமையை குறைத்து பொதுத்துறை நிறுவனமாக நீடிக்க மத்திய அரசு வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment