Tuesday, October 18, 2016

சென்னையில் இயங்கும் சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றும் முயற்சிக்கு வைகோ கண்டனம்!

மத்திய அரசின் இரசயானம் மற்றும் உரத்தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான ‘சிப்பெட்’ 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிளாஸ்டிக் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமாகத் திகழும சிப்பெட், உலகளாவிய நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற்றுள்ளது. உற்பத்தித் தொழில்துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளதாக செயல்படுகிறது.

தொடக்கத்தில் மத்திய அரசின் முதலீடுகள் செய்யப்பட்டு, தற்போது சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. சிப்பெட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 6ஆவது ஊதிய மற்றும் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி ஊதியம் அளிக்க மத்திய அரசின் உதவிகளை நாடாமல், சிப்பெட் தனது நிதித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு வலுவான நிதி ஆதாரங்களைப் பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 250 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதுடன், தொடர்ந்து முன்னணி பொதுத்துறையாகவே நீடிக்கின்றது. சிப்பெட் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திட 2007 ஆம் அண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு முயற்சி செய்தபோது, கடும் எதிர்ப்பு எழுந்ததால் கைவிடப்பட்டது.

தற்போது பா.ஜ.க. அரசு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சிப்பெட் நிறுவனத்தையும் தனியாருக்கு விற்பனை செய்திட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் -சென்னையில் சிறப்பாக இயங்கி வரும் முன்னணிப் பொதுத்துறையான சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை மத்திய இரசாயன மற்றும் உரத்தொழில்துறை அமைச்சர் அனந்தகுமார் டெல்லிக்கு மாற்ற முயற்சிப்பதும், தனியாருக்கு தாரை வார்க்க நடவடிக்கை எடுத்து வருவதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

மத்திய அரசு, சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவை கைவிட்டு, இந்நிறுவனம் பொதுத்துறையாக நீடிக்க வழிவகை கhண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment