Tuesday, October 4, 2016

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும்-வைகோ அறிக்கை!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ஆணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி மாண்புமிகு கிருபாகரன் அவர்கள், 'உள்ளாட்சித் தேர்தல் தான் ஜனநாயகத்தின் ஆணிவேர்; ஆணிவேர் சரியாக இருந்தால் தான் ஜனநாயகம் வலுப்பெறும்; புதிய அரசு ஆணை வெளியிட்டு, டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்து இருக்கின்றார்.

இத்தேர்தல் குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், செப்டம்பர் 16-ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைச்செயலாளர் வெளியிட்டுள்ள அரசு ஆணையில் சுழற்சி அடிப்படையில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட வேண்டிய, இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது; எனவே பழங்குடி இனத்தவர்கள் மற்றும் அந்தப் பிரிவைச் சார்ந்த பெண்களுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறாமல் ஒதுக்கப்பட்டுள்ளனர்; செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு ஆணையிலும், இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் வழங்கப்படவில்லை. எனவே, தேர்தல் அறிவிப்பு ஆணையை ரத்து செய்து, பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க உத்திரவிட்டது வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மூன்று அரசு ஆணைகளையும் ரத்து செய்து உத்திரவிட்டுள்ளது.

எனவே, நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்திரவின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment