Saturday, October 22, 2016

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்ட தீர்மானங்கள்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 22.10.2016 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம்-1:

தமிழகத்தில் சிங்கள இனவெறி அரசின் தமிழ் இன அழிப்புப் போர் உச்சத்தில் இருந்தபோது, 2008 அக்டோபர் 21 இல், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்சசியில் நிறைவுப் பேருரை ஆற்றிய கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், “ஈழத்தில் இராசபக்சே அரசு தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு இந்திய அரசுதான் இராணுவத் தளவாடங்களையும், ரேடார் உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்களையும் இலங்கை சிங்கள அரசுக்கு வழங்கி வருகிறது என்பதை எடுத்து உரைத்தார்.

தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவது மட்டும் அன்றி, ஈழத் தமிழர்கள் மீதான போரை முன்னின்று நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கூட்டணி அரசின் இதே நிலை தொடருமானால் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களைக் காப்பாற்றத் தமிழ்நாட்டில் இருந்து இளைஞர்கள் ஈழத்திற்குச் சென்று ஆயுதம் தாங்கிப் போரிடுவார்கள். முன் வரிசையில் நானே ஈழப் போர்க்களத்தில் நிற்பேன்” என்று பிரகடனம் செய்தார்.

காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சர்களாக தி.மு.க.வினர் டெல்லியில் பதவி சுகம் அனுபவித்துக் கொண்டு இருந்தபோதுதான் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் கலைஞர் கருணாநிதிதான் முதல் அமைச்சராக இருந்தார். ஈழத்தில் தமிழ் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையை நிறைவேற்றாமல் இந்திய அரசுக்குத் துணைபோன கருணாநிதி அரசு, ஈழத்தில் நடைபெற்ற கொடூரமானப் போரை தாய்த் தமிழர்களிடம் எடுத்து உரைத்தற்காக கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீது தேசத்துரோகச் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் வழக்குத் தொடர்ந்தது.

நீதிமன்றத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கில் 112 விசாரணை அமர்வுகளில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆஜரானார்கள். கருத்து அரங்கில் பேசிய எதையும் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நீதிமன்றத்தில் மறுத்துப் பேசவில்லை.

இந்திய அரசு ஈழத்தமிழர்கள் படுகொலைக்குத் துணைபோனது என்பதை நீதிமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக மீண்டும் பதிவு செய்தார். சென்னை 3ஆவது கூடுதல் அமர்வு நிதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று 2016 அக்டோபர் 20 அன்று பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி பொடா வழக்கில் பேச்சு உரிமையை நிலைநாட்டியது போன்று கருணாநிதி அரசு தொடர்ந்த தேசத்துரோகக் குற்றச்சாட்டு வழக்கில் வெற்றி பெற்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம்-2:

காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் தமிழக அரசு தொடர்ந்த வழககை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, செப்டம்பர் 20 மற்றும் 30 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு 6 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகம் காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் சுட்டிக்காட்டியவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ஆம் தேதிக்குள் மத்திய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டனி ஜெனரல் முகுல் ரோகத்கி ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசு தயாராக இருக்கிறது’ என்று தெரிவித்தார். ஆனால், திடீரென்று அக்டோபர் 3 ஆம் தேதி, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்துதான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், கர்நாடக மாநிலத்திற்குத் துணை போகும் விதத்திலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததின் மூலம் தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் இழைத்துள்ள நரேந்திர மோடி அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம்-3:

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், “அரசியல் சட்டப் பிரிவு 262 இன்படி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குதான் உண்டு. உச்ச நீதிமன்றம் அதில் ஆணையிட முடியாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் பரிந்துரையே தவிர, ஆணையல்ல” என்றும் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முன் வைத்துள்ள வாதம் தவறானது ஆகும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் பகுதி 8 (பக்கம் 224, தொகுதி 5) இல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது காவிரி நீர் தகராறு தீர்ப்பு ஆயத்தின் இறுதி முடிவுகள் மற்றும் ஆணைகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கும் (மாநிலங்களை) அவற்றுக்கு உட்படுத்துவதற்கும் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் மாநிலங்களுக்கு இடையேயான மன்றம் ஒன்றை நிறுவியாக வேண்டும். இந்த வாரியம் இந்திய அரசின் நீர்வளத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்று கூறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றுதான் நடுவர் மன்றம் ஆணையிடுகிறதே தவிர, வாரியம் அமைக்கலாம் என்று பரிந்துரைக்கவில்லை.

நர்மதா நதி நீர்ப் பிரச்சினையில், ‘நர்மதா கட்டுப்பாட்டு ஆணையம்’ அமைக்கப்பட்டபோதும், கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்சினையில் ‘கிருஷ்ணா மேலாண்மை வாரியம்’ அமைக்கப்பட்டபோதும், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படவில்லை. எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றத் தேவையில்லை என்று மறுமலர்ச்சி தி.மு.க. சுட்டிக்காட்டுகிறது.

எனவே,மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்காமல், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்-4:

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அக்டோபர் 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் நீர் இருப்பு, பயிர் பாதிப்பு, நீர்த் தேவை ஆகியவற்றை ஆராய உயர்நிலைத் தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. கர்நாடக மாநில அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, மேற்கண்ட குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரைத்தது.

மத்திய நீர்வள ஆணையைத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய உயர்நிலைத் தொழில்நுட்பக் குழு, கர்நாடகம், தமிழ்நாடு இரு மாநிலங்களிலும் ஆய்வு செய்து தனது அறிக்கையை 17 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையில், கர்நாடகக் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள 48 வட்டங்களில், 42 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கர்நாடக விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12 இலட்சம் ஏக்கர் சாகுபடி மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்கு 160 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது என்று ஒப்புக்கொண்டுள்ள காவிரி உயர்நிலைத் தொழில்நுட்பக் குழு, தமிழ்நாட்டில் விவசாயம் பாதிப்பு வறட்சி ஆகியவற்றை மேலோட்டமாகக் கூறிவிட்டு, சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட மாற்று முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

காவிரி உயர்நிலைத் தொழில்நுட்பக்குழு மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப அறிக்கை தயாரித்து அளித்துள்ளதோ என்ற ஐயப்பாடு எழுகின்றது. காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளைப் பிரதிபலிக்காமல், முழுக்கமுழுக்கக் கர்நாடக மாநிலம் மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக தயாரிக்கப்பட்டுள்ள காவிரி உயர்நிலை தொழில்நுட்பக்குழு அறிக்கையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.

தீர்மானம்-5:

தமிழ்நாட்டில் 2 கோடியே 3 இலட்சத்து 64 ஆயிரத்து 386 குடும்ப அட்டைதாரர்கள் பங்கீட்டுக் கடைகளின் மூலம் உணவுப் பொருட்களைப் பெற்று வருகின்றனர். இதில் பொது வழங்கல் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 91 இலட்சத்து 53 ஆயிரத்து 352 குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.

மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழக அரசு அரிசியை விலை கொடுத்து வாங்கும் போது, பரம ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசி ரூ.3 க்கும், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான அரிசி கிலோ ரூ. 5.65க்கும், வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கான அரிசி கிலோ ரூ.8.30க்கும் தமிழக அரசு வாங்குகிறது.

இதில் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் மக்களுக்கான அரிசியின் விலையை ரூ. 8.30 லிருந்து ரூ.22.54 என மூன்று மடங்காக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாகத் தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.2134.50 கோடி கூடுதலாகச் செலவு செய்ய நேரிடும். தமிழக அரசு, தற்போது பொது வழங்கல் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.5300 கோடி ரூபாய் மானியமாக செலவழித்து வருகின்றது.

இந்நிலையில், மத்திய அரசு அரிசி விலையை மூன்று மடங்கு உயர்த்தியதால், தமிழ்நாட்டில் பொது வழங்கல் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நெருக்கடி உருவாகும். எனவே, அரிசி விலையை மூன்று மடங்கு உயர்த்தி இருப்பதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்-6:

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் விருப்பப்படி தாறுமாறாகக் அதிக கட்டணங்களை உயர்த்தி, பொதுமக்களை துயரத்தில் ஆழ்த்தி வருவதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டனம் தெரிவித்து இருக்கின்றது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தி, ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்-7:

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையின்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்புக்கு உள்ளாயின.

அக்டோபர் இறுதியில் பருவ மழை தொடங்க இருப்பதால், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தக்க வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம்-8:

நாட்டின் பட்டாசு உற்பத்தியில், 90 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 750க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற தொழிற் சாலைகள் உள்ளன. இவற்றால், நேரடியாக, இரண்டு லட்சம் பேரும், மறைமுகமாக, மூன்று லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கிறது.

விளையாட்டு பொம்மைகள் என்ற பெயரில், சீன பட்டாசுகள் இறக்குமதியால், பட்டாசு வர்த்தகம் சரிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பட்டாசு ஆலைகள் மற்றும் கிடங்குகளில், பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாததால், வெடி விபத்துகளும், அதனால், உயிர் இழப்புகளும் தொடர் நிகழ்வுகளாக உள்ளன.

விருதுநகர், விழுப்புரம், கோவை மாவட்டங்களில் அண்மையில் நடந்த பட்டாசு விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சில தொழிற்சாலைகள் விதிமுறைகளை பின்பற்றாமல், அளவுக்கு அதிகமாக வெடி மருந்துகளை தேக்கி வைப்பதாலும், பணியாளர்களின் பணிச்சுமை அதிகரிப்பாலும் விபத்துகள் நடக்கின்றன.

மத்திய - மாநில அரசு துறைகள், மக்களின் உயிருடன் விளையாடாமல்,உரிய ஆய்வுகளை நடத்தி, தொடர் உயிர் இழப்புகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம்-9:

கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த கொள்முதல் விலையான டன்னுக்கு ரூபாய் 2650 வழங்காமல், சர்க்கரை ஆலைகள் 2350 ரூபாய் மட்டுமே வழங்கி வருகின்றன. கடந்த மூன்றாண்டு காலமாக விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை 1800 கோடி ரூபாயை சர்க்கரை ஆலைகள் தர மறுக்கின்றன.

இதனால் கரும்பு விவசாயிகள் தமிழகம் முழுவதும் அறப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துவதுடன், நடப்பு கரும்புப் பருவத்திற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் நான்காயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது என மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment