Friday, October 21, 2016

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்க - வைகோ அறிக்கை!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி, 5ஆவது அலகில் மின் உற்பத்திக்கு தண்ணீர் செல்லும் கொதிகலன் அருகில் உள்ள வெப்பக் குழாய் திடீரென்று வெடித்துச் சிதறிய விபத்தில், பணியில் இருந்த முத்துநகர் ஆறுமுகம், செக்காரக்குடி முருகப் பெருமாள் ஆகிய இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற விபத்துகள் தொடர் நிகழ்வுகளாகி வருவது கவலை அளிக்கிறது. விபத்துகளால் உயிர் பலி ஆவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதால்தான் தொழில்நுட்பக் கோளாறுகளும் விபத்துகளும் ஏற்படுவதாக அங்குள்ள பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே உதிரி பாகங்கள் வாங்கும் போது, தொழில்நுட்ப நிபுணர்கள் குழு அமைத்து தரமுள்ள பொருட்களை வாங்க வேண்டும்.

இங்குள்ள ஒவ்வொரு யூனிட் பிரிவுக்கும் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டொன்று 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், தொடர்ந்து பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடை படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

தொழிற்சாலை சட்டவிதிகளின்படி 24 மணி நேரமும் இயங்கக் கூடிய மருத்துவமனையை தொழிலகப் பகுதியில் அமைத்திட வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களும் பயன்பெறத்தக்க வகையில் மருத்துவமனையில் உரிய கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும்.

சமவேலைக்கு சம ஊதியம் என்ற வகையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதுடன், குறைந்தபட்ச ஊதியமாக 350 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் கிடைக்க வழிவகை செய்வதுடன், அவர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அனல்மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று 20-10-2016 வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment