Monday, April 30, 2018

2 ஆம் நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அறப்போர் பிரச்சார பயணம்!

காவேரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்களின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அறப்போர் பிரச்சார பயணம் இன்று 30.04.2018 மாலை தஞ்சை ஒரத்தநாட்டில் நடந்தது.

இதில் பேசிய ஒரத்தநாடு திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் அவர்கள் பேசும்போது, நான் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கு அண்ணன் வைகோவின் பயிற்சி தான் காரணம் என்று வைகோவிற்கு புகழாரம் சூட்டினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தொழிலாளர் வர்க்க உரிமைகளைக் காக்க உறுதி கொள்வோம்-வைகோ மே தின வாழ்த்து!

முதலாளித்துவ நுகத்தடியில் அடிமைகளாகப் பூட்டப்பட்டிருந்த உலகத் தொழிலாளர்கள் விடுதலை பெற்ற வீர வரலாறு பிரகடனம் செய்யப்பட்ட நாள்தான், ‘மே நாள்’ ஆகும்.

உதயசூரியன் உதிக்கும் அதிகாலை முதல், அந்தி சாயும் வேளை வரை தொழிலாளர் வர்க்கம் வேலை செய்வதற்கு விதிக்கப்பட்ட கொடுமைக்கு முடிவுகட்ட 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உரிமைக்குரல் எழுப்பப்பட்டது. 16 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான தொழிலாளர்கள் முதன் முதலில் 1806 இல் அமெரிக்க பிலடெல்பியா நகரில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவில் 1866 இல் உருவான தேசிய தொழிற்சங்கம், “எட்டு மணி நேரம் வேலை நாள்” என்பதை சட்டமாக்க வேண்டும் என்று போராடியது.

1877 இல் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

1884 இல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின்போது எரிமலையென வெடித்தப் போராட்டங்கள்தான் மே நாள் எழுச்சியாக வடிவம் பெற்றன.

1886 இல் 8 மணி நேர வேலை நாளுக்கானப் போராட்டம் தீவிரமடைந்தது. ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தொழிலாளர்கள் மாபெரும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். 1886 மே முதல் நாள் சிகாகோ நகரில் தொழிலாளர் போராட்டம் உச்சத்தை எட்டியது. அரசின் அடக்குமுறை தர்பார் தலைவிரித்து ஆடியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். 1886 மே 3, 4 ஆகிய நாட்கள் காவல்துறையினர் தாக்குதல் எல்லை கடந்தன. சிகாகோ நகரில் உள்ள ‘ஹே மார்க்கெட்’ சதுக்கத்தில் கூடிய இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடிய இந்த வன்முறையில் நான்கு தொழிலாளர்கள் பலி ஆயினர். தொழிலாளர் தலைவர்களான பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், பிர் மற்றும் எங்கல் ஆகிய நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.

‘ஹே மார்க்கெட் தியாகிகள்’ என்று வரலாறு போற்றுகின்ற தொழிலாளர் 
தலைவர்கள் தூக்கிலிடப்பட்ட ஓராண்டுக்குப் பின்னர் எட்டு மணி நேர இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்றது. 1889 மே முதல் நாள் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டு 1890 மே முதல் நாள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைப் பதாகையை உயர்த்திப்பிடிக்கும் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டது.

உலகத் தொழிலாளர் வர்க்கம் இரத்தம் சிந்தி, உயிர்ப் பலிகள் கொடுத்துப் போராடிப் பெற்ற உரிமைதான் எட்டு மணி நேரம் வேலைநாள் என்பது உலகம் முழுவதும் சட்டமாக்கப்பட்டது.

இந்தியாவில் நாடு விடுதலைபெற்ற பின்னர் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நரேந்திர மோடி அரசு தொழிலாளர் வர்க்கத்தின் மீது மோசமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகள், தொழிலாளர் நலச் சட்டங்கள், அனைத்தும் குப்பைக் கூடையில் வீசி எறிந்து இருக்கிற மோடி அரசு, தற்போது ‘வேலை வரம்பு ஒப்பந்தம் (Fixed Term Employment)’ என்ற பெயரில் சட்டத் திருத்தம் கொண்டுவர டிசம்பர் 2017 இல் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையை அறவே ஒழிக்க வேண்டும் என்று சட்டப்பூர்வமாக தொழிற்சங்கங்கள் போராடி வரும் நிலையில், ஒப்பந்த முறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தரத்தன்மை கொண்ட பணிகள் அனைத்தும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு தூக்கி எறியும் வகையில் ‘வேலை வரம்பு ஒப்பந்தம்’ என்ற பெயரில் மோடி அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.

தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம்.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் இதயமார்ந்த மே நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் இன்று  30-04-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, April 29, 2018

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் மதிமுக வெள்ளிவிழா!

கழகத்தின் கண்மணிகளே!

திராவிட இயக்கத்தை கட்டி காத்திடும் இடத்தில் மதிமுக உள்ளது என்பதை தோழமை கட்சிகள் அறிந்து, திராவிட இயக்கத்தின் கடைசி கையிருப்பு தலைவர் வைகோ அவர்கள் செல்லுமிடமெல்லாம் மாலை, சால்வை அணிவித்து மரியாதை செய்வதை காணலாம்.

அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும், அவர்களுக்கு நாம் பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டுமென்று ஜாதி, மத வேற்றுமைகளற்ற பாதுகாப்பான அரசியலை முன்னெடுப்பவர் தலைவர் வைகோ அவர்களும், மதிமுகவும்.

ஜாதி, மத கலவரங்களை தூண்டி அதன் மூலம் ஆதாயம் அடைய துடிக்கும் மத்திய மோடி அரசு, மாநிலங்களின் உரிமைகளை பறித்து மாநிலங்களை மதிக்காமல செயல்படுவதால், ஆட்சியிலிருந்தே அகற்றுவது தமிழர்களின் மிகபெரிய கடமையாகும்.

மாநில சுயாட்சியை முன்னெடுக்கும் வகையில் பல மாநில தலைவர்கள் சந்திப்பு இன்றியமையாததாகிறது. இதன் மூலம் வரும் காலங்களில் மத்தியில் கூட்டாட்சியை நிலைநிறுத்தி, மாநிலங்களில் சுயாட்சியை நிறுவ வேண்டிய தருணம்.

இந்நிலையில்தான் நெருப்பின் மீது தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வெள்ளிவிழாவை நோக்கி நகர்கிறது.

24 ஆண்டுகள் முடிவுற்று 25 ஆம் ஆண்டின் தொடக்க நாள் மே 6. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு புத்துணர்வு கொடுக்கும் விதத்தில் மதிமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ருசைல் ரவுண்டானா அருகில் உள்ள செல் பெட்ரோல் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள “சிம்பொனி டைன் இன்” ல் (பழைய ஸ்பைஸ் வில்லேஜ் ரெஸ்டாரண்ட்) 11-05-2018 மாலை 3 மணி அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

கழகத்தின் கொள்கைகளை உயர்த்தி பிடிக்கவும், கழகத்தின் மேல் கொண்ட பற்றுறுதியை நிலைநாட்டவும், தமிழர் உரிமைகளை மீட்கவும், கடல் கடந்து வாழ்ந்தாலும், தமிழக வாழ்வாதங்களை காக்கும் தலைவர் வைகோ அவர்களின் குரலுக்கு வலிமை சேர்க்க, ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை உறுப்பினர்கள்,  கழகத்தினர் என அனைத்து தமிழர்களும் தவறாது கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
29-04-2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அறப்போர் பிரச்சார பயணம்!

தஞ்சை முழுவதும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க அறப்போர் பிரச்சார பயணம் இன்று 29-04-2018 அன்று தஞ்சை செங்கிப்பட்டியில்காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

திருக்காட்டுபள்ளி வழியாக சென்ற இந்த வாகன பிரச்சார பயணத்தில் வைகோ அவர்கள் பேசும்போது, ராணுவத்தை கொண்டு வந்து மிரட்டாதீர்கள், இந்த ராணுவத்தை எல்லாம் மொழிப் போரிலேயே பார்த்தவர்கள் தமிழர்கள். சித்ரா பவுர்ணமி நாளில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளில் , இந்த தஞ்சை மண்ணில் காவிரி அறப்போர் பிரச்சாரம் துவங்கி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாநாட்டில் வைகோ கண்டன முழக்கம்!

தூத்துக்குடியில் நாசகார நச்சு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, இன்று 28-04-2018 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நீண்ட நேரம் பேசி நச்சாலையின் தீமையையும், அதை மூடுவதற்காக மதிமுக செய்த தியாக வரலாற்றையும் வீர முழக்கமாக உரையாற்றினார்.

அதில் பேசிய தலைவர் வரலாற்று நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்து பேசினார். அப்போது பேசிய வைகோ அவர்கள் மணவை ருஸ்வெல்ட் கொடுத்த சிறு கப்பலை பார்த்து நினைவுகூர்ந்து,

Mr. பிள்ளை, Mr. பிள்ளை என்று சிறையில் காவல்ர் கேட்ட பொது அந்த பாவி தான என் சுதோசி கப்பல் நிறுவனத்தை சீதைதவன் என்று வஉசி சொன்ன பொது, இன்று காலையில் வாஞ்சி மணியாச்சி ஜங்ஷன்யில் அவனை ஒரு இளைஞன் சுற்று கொன்றான் என்று சொன்ன பொது சந்தோச பட்டார். 

அந்த சுதேசி கப்பல் நிறுவனத்தின் நினைவை சுமந்து தம்பி Manavai rosevelt இந்த கப்பல்யை எனக்கு தந்தார் என்று மனம் நெகிழ்ந்தார்.

ஈழ தமிழர் பெயரை சொல்லி காசு,பணம் சம்பாதிக்கும் ஈன செயலை ஒரு பொதும் நாங்கள் செய்தது கிடையாது. என் தலைவன் பிரபாகரனுக்காக அந்த எச்சகலா வேலை செய்யும் நபர்கள்யின் முகத்திரையை கிளிப்பேன் என்றார்.

ஸ்டெர்லைட் வாகன பிரச்சாரத்தில் பாஜகவினர் ஸ்டெர்லைட்டை ஆதரித்தும், ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த முதல் நாளில் பாஜக ஏவிய வன்முறையாளர்கள் வைகோ மீது வீசியெறிந்த கற்களை எடுத்து பொதுமக்களுக்கு காட்டினார்.

ரத்தினகிரியில் நடந்தது, தூத்துக்குடியிலும் நடக்கும். ஸ்டெர்லைட்டை சம்மட்டி கடப்பாரை கொண்டு அகற்றுவோம். இளைஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

நான் ஒப்புக்கு பேச வரவில்லை, எதற்காக 22 வருடம் போராடினானோ, அது நிறைவேற 
பிறந்த பொன்னாட்டுக்கு ஏற்பட்டு இருக்க் கூடிய பேராபத்துகளை நீக்க வேண்டும் என போராடி வருகிறேன்.


வரும் ஏப்ரல் 7ஆம் தேதி வாய்தாவில், ஸ்டெர்லைட் எதிர்த்து நானே வாதாடுவேன்.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் 24 மணி நேரத்திற்குள் என் போராட்டத்தை அறிவிப்பேன். அது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடும் அளவுக்கு உள்ள போராட்டமாக இருக்கும் என்றார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Saturday, April 28, 2018

காவிரிப் பிரச்சினை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வைகோ கோரிக்கை!

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் வாழிடங்களைத் தூய்மைப்படுத்தல் ஆணையராக லியோ ஹெல்லர் பொறுப்பு வகித்து வருகின்றார்,

காவிரிப் பிரச்சினை குறித்து அவருக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளார்,

தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்கும், தலைநகர் சென்னைக்கும் குடிதண்ணீர் வழங்கும் காவிரி நதிநீர் உரிமையை, பல்லாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருகின்ற உரிமையை, கர்நாடக அரசு தடுக்கின்ற அநீதிக்கு இந்தியாவின் மத்திய அரசு துணைபோவதால், மனித உரிமைகள் ஆணையத்தில் செயல்படும் நீங்கள், இதில் தலையிட்டு, இந்திய அரசுக்கு அறிவுறுத்துவதற்காக, இந்தக் கோரிக்கை மடலைச் சமர்ப்பித்துள்ளார்,

இக்கடிதம் ஏப்ரல் 25 ஆம் தேதி மின்அஞ்சலில் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டு, ஜெனீவாவில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் அதனை நேரடியாக, லியோ ஹெல்லரிடம் வழங்கினர்.

தமிழ்நாட்டில் இருந்து, காவிரிப் பிரச்சினையில் அக்கறை உள்ள பலரும் இதுபோன்ற மனுக்களை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து இயன்ற நடவடிக்கை எடுப்பதாக லியோ ஹெல்லர் உறுதி அளித்துள்ளார்.
வைகோ கடிதம்:

இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் இயங்கி வருகின்ற காவிரி பாதுகாப்பு இயக்கம், காவிரி பாசன விவசாயிகளின் உரிமைகளைக் காக்கவும், தமிழகத்தின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் பாடுபட்டு வருகின்றது. அதற்காகப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றது.

காவிரி ஒரு பழமையான நதி. சென்னை மாகாண எல்லைக்குள், குடகு மலையில் உற்பத்தியாகின்றது. 1956 ஆம் ஆண்டு, தென் இந்திய மாநிலங்களின் எல்லைகள் மறுசீரமைப்பின்போது, குடகு மாவட்டம், கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டில் 2.5 மில்லியன் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசனம் பெறுகின்றன. ஒட்டுமொத்தமாக, 81,155 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காவிரி நீரால் பயன் பெறுகின்றது. ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, பவானி, அர்காவதி, லட்சுமண தீர்த்தம், நொய்யல் ஆகியவை காவிரியின் கிளை ஆறுகள் ஆகும்.

காவிரியால் பயன்பெறும் நிலப்பரப்பு:

கொடை விழா தமிழ்நாடு 43,856 சதுர கிலோ மீட்டர்கள் (16,933 சதுர மைல்கள்)
கர்நாடகா 34,273 சதுர கிலோ மீட்டர்கள் (13,233 சதுர மைல்கள்)
கேரளா 2,866 சதுர கிலோ மீட்டர்கள் (1,107 சதுர மைல்கள்)
புதுச்சேரி 164 சதுர கிலோ மீட்டர்கள் ( 62 சதுர மைல்கள்)

கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குக் கோடியில் உற்பத்தியாகும் காவிரி, தென் கிழக்காக 800 கிலோமீட்டர்கள் பாய்ந்தோடி, வங்கக் கடலில் கலக்கின்றது.

பெரிய அளவில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன; நீர் மின் நிலையங்கள் அமைத்து மின்சாரம் பெறப்படுகின்றது.

பலநூறு ஆண்டுகளாக காவிரி நீர் பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பண்டைக்காலப் பேரரசுகள், இன்றைய புது நகரங்கள் அனைத்திற்கும் காவிரி நீரே குடிநீர் ஆதாரமாகவும், உயிர்நாடியாகவும் திகழ்கின்றது.

ஹெல்சிங்கி விதிகளின்படி, ஒரு ஆற்றின் மேல்மடை மாநிலத்திற்குள்ள உரிமை போலவே, கடைமடைப் பகுதிக்கும் உரிமை உண்டு; அதை மேல்மடை மாநிலம் மறுதலிக்க முடியாது.

நைல், ரைன், சிந்து ஆகிய நதிகள், பங்கீட்டில் எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி, பல நாடுகளின் வழியாகப் பாய்ந்து ஓடுகின்றன.

1924 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையும், தமிழ்நாட்டில் மேட்டூர் அணையும், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டன. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து, மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்.

ஆனால், இந்த உடன்படிக்கைக்கு எதிராக, இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் ஒப்புதல் எதுவும் பெறாமல், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய இடங்களில் கர்நாடக அரசு மூன்று புதிய அணைகளைக் கட்டியது.

இதனால், இரு மாநிலங்களுக்கும் இடையே சட்டப்பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு முறையிடப்பட்டது.

இதற்கு இடையில், இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் 26 முறை நடைபெற்ற பேச்சுகள், எவ்வித முடியும் எட்டாமல் தோல்வி அடைந்தன.

இந்திய அரசியல் சட்டத்தின் 262 (1) ஆவது பிரிவு, இந்திய மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளில் மத்திய அரசு தலையிட்டுப் பேசி முடிவு காண வேண்டும் என்று கூறுகின்றது.

அதன் அடிப்படையில், இந்திய மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டம், 1956 ஆம் ஆண்டு, இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. அதன்படி, ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

அந்த அடிப்படையில், 1990 ஆம் ஆண்டு, காவிரி நடுவர் மன்றத்தை, இந்திய நடுவண் அரசு உடனே அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, 1990 ஜூன் 2 ஆம் நாள், மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. தமிழக, கர்நாடக அரசுகள், தங்கள் தரப்புக் கோரிக்கையை, நடுவர் மன்றம் முன்பு வைத்தன.

அதன்பிறகு, நடுவர் மன்றத் தலைவரும், உறுப்பினர்களும் காவிரி நதிநீர் பாசனப் பரப்பு முழுமையும் நேரில் ஆய்வு செய்தனர்.

1991 ஜூன் 25 ஆம் நாள், தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்குமாறு நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை. நடுவர் மன்ற உத்தரவின்படித் தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கவும் இல்லை.

அதற்கு மாறாக, கர்நாடக அரசு புதிதாக ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து, நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல் இழக்க வைத்திட முயற்சித்தது.

ஆனால், இந்திய உச்சநீதிமன்றம், கர்நாடக அரசின் அவசரச் சட்டம் செல்லாது என அறிவித்ததுடன், கர்நாடக அரசுக்குக் கண்டனமும் தெரிவித்தது.

பல நூறு ஆண்டுகளாக, கர்நாடக மாநிலத்தில் 25 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். அந்த மாநிலச் சட்டங்களை மதித்து நடக்கின்றனர். 1990 களில், காவிரி நதிநீர்ப் பிரச்சினையால், சில கன்னட வெறி அமைப்புகளால், தமிழர்கள் தாக்கப்பட்டனர். ஆனால், அதுபோன்ற தாக்குதல் எதுவும், தமிழகத்தில் வாழும் கன்னட மக்கள் மீது நடத்தப்படவில்லை.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள், காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

1956 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டத்தின் 6(2) பிரிவின்படி, நடுவண் அரசு கெசட்டில் வெளியிடப்பட்ட நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானதாகும்.

பக்ரா-பியாஸ் நதிநீர் மேலாண்மை வாரியம் போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்திய நடுவண் அரசு, காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை 6 ஆண்டுகளாக, அரசு கெசட்டில் வெளியிடவில்லை.

உச்சநீதிமன்றக் கண்டிப்புக்குப் பிறகு, 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி hதம் 19 ஆம் நாள், கெசட் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்பிறகும் கூட, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.

எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் நாள், இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்குப் புதிதாக ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில், தமிழகத்திற்கு நடுவர் மன்றம் வழங்கி இருந்த காவிரி நீரில் மேலும்14.75 டி.எம்.சி. நீரைக் குறைத்து விட்டது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட, 19 மாவட்டங்களுக்குக் காவிரி நீர்தான் குடிநீர் ஆகும். தமிழகத்தின் இரண்டரைக் கோடி மக்கள், உயிர் வாழக் காவிரிக் குடிநீரையை நம்பி உள்ளனர்.

இந்த நிலையில், மேலும் அதிர்ச்சி அளிக்கின்ற வகையில், கர்நாடக அரசு, மேகே தாட்டூ, ராசி மணல் ஆகிய இரண்டு இடங்களில் காவிரியின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டத் திட்டமிட்டு, அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து வருகின்றது.

அப்படி இந்த அணைகளைக் கட்டி விட்டால், அதன்பிறகு, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குக் காவிரி நீர் வராது. 25 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு பாழாகும்.

தமிழகத்தின் பசுமையான காவிரி தீரப் பகுதிகள் காய்ந்து பாலை மணல்வெளி ஆகும். அதனால் ஏற்படக்கூடிய பேரபாயத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகின்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விட்டால், அதன்பிறகு, கர்நாடக அரசு புதிய அணைகளைக் கட்டமுடியாது. தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படும், நீதி நிலைநாட்டப்படும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், இந்திய அரசு, கபட நாடகம் ஆடுகின்றது; இரட்டை வேடம் போடுகின்றது; தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றது.

எனவே, தாங்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு, இந்திய அரசைத் தொடர்பு கொண்டு, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி கிடைக்கவும், குடிநீர் வழங்கவும் தமிழகத்தின் பாசனப் பரப்பைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் இன்று 28-04-2018 குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, April 26, 2018

26-04-2018 ல் 4ஆம் நாளாக ஸ்டெர்லைட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் வைகோ!

ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடக்கோரி நான்காவது நாளாக 26.04.2018 ல் திருவைகுண்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வாகன பிரச்சாரம் செய்தார். அபோது ஸ்டெர்லைட்டான் ஏற்படும் புற்றுநோய் மற்றும் அனைத்து விதமான நோய்களை பற்றியும் தெரிவித்தார்.


தொடர்ந்து ஏரல், வடக்கு ஆத்தூர், பெரியதாழையில் போன்ற இடங்களிலும் ஸ்டெர்லைட்டை எதிர்த்து பேசினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஸ்டெர்லைட்டை எதிர்த்து வைகோ வழக்கு; மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வைகோ தாக்கல் செய்த பொதுநல வழக்கு, இன்று 26 ஏப்ரல் 2018 நீதியரசர் செல்வம், நீதியரசர் பஷீர் அகமது அமர்வில், முதல் வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த வழக்குரைஞர்களுள் ஒருவரான அஜ்மல்கான், வைகோ சார்பில் வாதங்களை எடுத்து வைத்தார்.

அவரது வாதம் பின்வருமாறு:

ஸ்டெர்லைட் எனப்படும் தாமிர உருட்டு ஆலை, தூத்துக்குடி மாநகரையும் சுற்றுப்புறங்களையும் அழிக்கின்ற நாசகார நச்சு ஆலை என்பதால், மக்களைத் திரட்டிப் பல போராட்டங்களை நடத்திய மனுதாரர், 1996 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுநல வழக்குத் தொடுத்து, அவரே வாதாடினார்.

2010 செப்டெம்பர் 28 ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு, நீதியரசர் எலிபி தர்மாராவ், நீதியரசர் பால் வசந்தகுமார் அமர்வு தீர்ப்பு அளித்தது.

அதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல் முறையீடு செய்து, சென்னைத் தீர்ப்புக்குத் தடை ஆணை பெற்றது.

மனுதாரர், உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு ஆதாரங்களுடன் வாதங்களை முன்வைத்தார்.

2013 ஏப்ரல் 2 ஆம் நாள், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்துவதற்கு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அந்தத் தீர்ப்பில், மனுதாரரின் பல்வேறு வாதங்களை ஏற்றுக் கொண்டபோதிலும், ‘ஸ்டெர்லைட் நிர்வாகம் வங்கியில் 100 கோடி ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாகக் கட்ட வேண்டும் என்றும், இந்தத் தீர்ப்பு நிரந்தரமாக ஆலையை இயக்கும் தீர்ப்பு அல்ல என்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் என்று கருதினால், எந்தக் கட்டத்திலும் ஆலையை மூட ஆணை பிறப்பிக்கலாம்’ என்று குறிப்பிட்டு இருந்தது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை, 4 லட்சம் டன் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்தி, 8 லட்சம் டன் உற்பத்தி செய்வதற்கு, ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் என்று ஒரு விரிவாக்கத் திட்டத்தைத் தமிழக அரசிடம் முன்வைத்தது.

இதற்கு அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

முதலில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி, 2018 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. அதற்குப்பிறகு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகின்றது. அப்படியானால், ஆலையை மூடுவதற்கு ஏன் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பிக்கவில்லை?

விரிவாக்கத் திட்டத்திற்கும் இதுவரை அனுமதி தராவிட்டாலும், வரும் நாள்களில் அனுமதி அளிக்க வாய்ப்பு இருக்கின்றது.

எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கும், விரிவாக்கத்திற்குத் திட்டவட்டமாக அனுமதி மறுப்பதற்கும் இந்த நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன்’ என்றார்.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘மாசு கட்டுப்பாட்டு வாரியம், மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு அனுமதியை நீட்டிக்கவில்லை என்றும், விரிவாக்கத்திற்கும் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை’ என்றும் கூறினார்.

இந்த வழக்கை நீதிமன்றம், ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

வைகோ செய்தியாளர்களிடம் கூறியது பின்வருமாறு:

ஸ்டெர்லைட் ஆலையை, தமிழக அரசு நிரந்தரமாக மூடுவதற்கு ஆணை பிறப்பிக்காது. ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் சேர்ந்து கபட நாடகம் நடத்துகின்றன.

மார்ச் 31 ஆம் தேதியுடன் அனுமதி முடிந்து விட்டது என்று கூறும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு ஏன் ஆணை பிறப்பிக்கவில்லை?

சிப்காட் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைக் கிராமப்புற விவசாயிகளிடம் கையகப்படுத்தி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்துகொண்டு இருக்கின்றது.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் 22 ஆண்டுகளாக நான் போராடி வருகின்றேன். இன்று மாலை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறேன்; ஏப்ரல் 28 ஆம் தேதியன்று, தூத்துக்குடி மாநகரில், மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கின்றேன்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கின் அடுத்தடுத்த அமர்வுகளில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்களோடு ஆலோசித்து நானே வாதாட இருக்கின்றேன்.’ என வைகோ கூறியுள்ளதாக மதிமுக தலைமைக் கழகம் 26-04-2018 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை