Wednesday, November 11, 2015

உலகத் தமிழர்கள் போற்றுகின்ற அன்னையால் எனக்குப் பெருமை வைகோ இரங்கல் உரை!

அன்னை மாரியம்மாளின் மரணத்தில் மகன் வைகோவின் இரங்கல் உரை!

எந்த மணிவயிற்றில் பத்து மாதங்கள் நான் உருவாகி வளர்ந்தேனோ, அந்த மணி வயிறு இப்பொழுது எரிந்து கொண்டு இருக்கின்றது. எந்தக் கரங்கள் என்னைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டினவோ, அந்தக் கரங்கள் இப்பொழுது சாம்பலாகிக் கொண்டு இருக்கின்றன. எந்தக் கால்களில் இத்தனை ஆண்டுகளாக நான் எங்கே சென்றாலும் தொட்டு வணங்கினேனோ, எந்தப் பாதங்களைப் பற்றி வணங்கி வாழ்த்தும் ஆசியும் பெற்றுச் சென்றேனோ, அந்தக் கால்கள் நெருப்பில் கருகிக் கொண்டு இருக்கின்றன.

இங்கே எல்லாத் தலைவர்களும் வந்து இருக்கின்றார்கள். இப்படியொரு கூட்டத்தைப் பார்த்தால் யார் மிகவும் மகிழ்ச்சி அடைவார்களோ, அந்த என் தாய் இன்றைக்கு இல்லை. மகன் ஏற்பாடு செய்கின்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு, அங்கே வருகின்ற கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தவர் அவர். எல்லோரும் சாப்பிட்டார்களா? கடைசி வரைக்கும் சாப்பாடு இருந்ததா? என்று கேட்டுப் பூரித்துப் புளகாங்கிதம் அடைகின்ற அந்த மாரியம்மாள் இந்தக் கூட்டத்தைப் பார்ப்பதற்கோ, இவ்வளவு பேர் வந்து கலிங்கப்பட்டியில் அவர் தீபச்சுடராக எரிந்த அந்த வீட்டுக்கு வந்து பெருமைப்படுத்தியதையோ பார்த்துப் பூரிக்க அவர்கள் இல்லை.

இந்த வேளையில் அவர்கள் மறைவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு எத்தனை வயது? என்று என்னிடம் கேட்டார்கள். அவருடைய வயதைச் சொன்னால், எங்கே நமக்கு வயது மிகவும் அதிகமாகி விட்டது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஏற்பட்டு விடுமோ என்று கருதி, கடந்த ஆறேழு ஆண்டுகளாகவே அவரது வயதைக் குறிப்பிடுவது இல்லை. 95, 96 என்றுதான் சொல்லிக் கொண்டு இருந்தேன். என்னுடைய மூத்த சகோதரிக்கு 81 வயது ஆகிறது. அப்படியானால் என் தாயாருக்கு அநேகமாக 99 வயது நிறைவுற்று 100 வயது ஆகி இருக்கலாம். நான் 100 வயது வரை இருப்பேன் என்று அவர் சொல்லிக் கொண்டு இருந்தார்.

நான் டெல்லியில் இருந்து தம்பியிடம் பேசும்போது, அம்மா எப்படி இருக்கிறார்கள்? என்று கேட்டேன். நன்றாக இருக்கிறார்கள் என்றார். பேச முடியுமா? என்று கேட்டேன். பேச முடியவில்லை. ‘சரி நான் நாளைக்கு அங்கே வந்து ஒரு மூன்று நாட்கள் உடன் தங்கி இருக்கிறேன் என்று சொன்னேன்.

என்னுடைய வருகையை எதிர்பார்த்து எனக்காகச் சமைப்பார்கள். கடந்த முறை நான் நள்ளிரவு ஒரு மணிக்கு வந்து காலையில் உணவு அருந்திவிட்டுப் புறப்படுகையில் காலைத் தொட்டுக் கும்பிட்டு, ஊருக்குப் போகிறேன் என்று சொன்னேன். வழக்கமாக எதுவும் சொல்ல மாட்டார்கள். அன்றைக்கு நான் சொன்னபோது சற்று அதிர்ச்சியோடு என்னைப் பார்த்து ‘அப்படியா?’ என்று கேட்டார். காரில் போகும்போது எனக்கு அது சற்று உறுத்தலாகவே இருந்தது.

இன்றைக்கு எங்கள் ஊரில் ஆதி திராவிட சகோதரன் அலெக்சாண்டருக்குத் திருமணம். அந்தத் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு, அம்மாவுடன் ஒரு மூன்று நாட்கள் இருப்பது என்று முடிவு செய்து இருந்தேன். தில்லியில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்குச் சென்னைக்கு வந்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். மூன்றேகால் மணிக்குத் தம்பி சந்துரு ‘சின்னய்யா கூப்பிடுகிறார்கள்’ என்று சொன்னார். தம்பி ரவி பேசினார். ‘ஒண்ணுமில்ல. அம்மா கொஞ்சம் சோர்வாக வே இருந்தார்கள். சாப்பிடவில்லை. மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறோம்’ என்றார்.

உடனே நான் காலை 6 மணி விமானத்தைப் பிடிக்க முயன்றேன். டிக்கட் கிடைக்கவில்லை. 8.30 மணி தூத்துக்குடி விமானத்தைப் பிடித்து வந்தேன். பத்து மணிக்கு இறங்கினேன். காரில் ஏறி உட்கார்ந்தவுடன், ‘அம்மா போய்விட்டார்கள்’ என்று என் துணைவியார் சொன்னார். அப்போது அவர் அருகே என் துணைவியார், தம்பி, அவரது துணைவியார் அக்காமார்கள் எல்லோரும் உடன் இருந்தார்கள். ஆனாலும் அந்த இடத்தில் என்னை அவர் தேடி இருப்பார். ‘அண்ணனுக்குச் சொல்லி விட்டேன். வந்துகொண்டு இருக்கிறார்’ என்று ஏழு மணிக்கு ரவி சொன்னபோது தலையை அசைத்து இருக்கின்றார். அந்தக் கடைசி நிமிடத்தில் அவருடன் இருக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

இங்கே வந்து இருக்கின்ற தலைவர்களுக்குச் சொல்லுகிறேன். ‘ஏம்பா இப்படி அலையற?’ என்று என்னை அவர்கள் கேட்டது இல்லை. ‘நமக்கு அரசியல் தேவையா?’ என்றும் கேட்டது இல்லை. எனக்கு எது விருப்பமோ, அதுதான் அவருக்கும். நான் செய்வது தப்போ சரியோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்வார். ஆனால் மற்றவர்களிடம், ‘இந்தப் பாடா? ஒருநாளாவது சாப்பிடறானா? சரியாத் தூங்கறானா?’ என்று சொல்லுவார்.

அவரைப் பார்ப்பதற்காக வருகின்ற தோழர்களை நினைவில் வைத்து இருப்பார். என்னை விட நினைவு ஆற்றல் மிக்கவர். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் சரியாகச் சொல்லுவார். ஒருவரது முகத்தைப் பார்த்தே ஊகித்துச் சொல்லுவார். ஒரு மாநாட்டு மேடையில் என் பக்கத்தில் இருந்தவர் சரியாக இல்லை என்று என்னிடம் சொன்னார். அது அப்படியே நடந்தது.

நான் வீட்டுக்கு வந்தவுடன், ‘ஏப்பா கீழத்தெருவில் இன்னார் இறந்து விட்டார்; மேலத் தெருவில் அவருடைய மகன் இறந்து விட்டார்’ என ஊரில் யார் யார் இறந்து போனார்கள் என்ற தகவலை முதலில் என்னிடம் சொல்லி, ‘அங்க போய்ட்டு வந்துருப்பா’ என்று சொல்லுவார். நான் உடனே அந்த வீடுகளுக்குச் சென்று துக்கம் விசாரித்து விடுவேன்.

அம்மா நன்றாகச் சமைப்பார்கள். எல்லோருக்குமே அவர்களது தாயாரின் சமையல் பிடித்தமாக இருக்கும். நான் அம்மாவிடம் கேட்டேன். ‘எந்தக் குழம்பு வைத்தாலும் இவ்வளவு ருசியாக இருக்கிறதே? யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்?’ என்று. அதற்கு அவர், ‘எங்க பாட்டியிடம்தான் படிச்சுக்கிட்டேன். எங்க அப்பா நாடகக் கம்பெனிகளைக் கூட்டிக்கிட்டு வந்து அடிக்கடி நாடகம் போடுவாரு. அவங்களுக்கெல்லாம் எங்க வீட்டுலதான் விருந்து. பாட்டிதான் சமைப்பார்கள். கூடமாட இருந்து படிச்சுக்கிட்டேன்’ என்றார். 

தியாகத்தால் புகழ் பெற்றார். நான் எத்தனையோ முறை சிறைக்குச் சென்று இருக்கின்றேன். ‘ஏம்பா இத்தனை கஷ்டப்படனும். நீ ஏம்பா ஜெயிலுக்குப் போகனும்னு?’ கேட்டது இல்லை. ‘சுகமாக வீட்டில் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கலாமேன்னு’ சொன்னதும் இல்லை. எத்தனையோ நடைபயணங்கள் நடந்து இருக்கின்றேன். வெயிலிலும் மழையிலும் காடு மேடெல்லாம் அலைந்து இருக்கின்றேன். ஏழைத் தாய்மார்கள் சாலையோரம் வரிசையாக நின்று என்னை வரவேற்கின்றபோதெல்லாம் ‘ஏனய்யா இப்படி வெயிலில் அலைகிறீர்கள்?’ என்று கேட்பார்கள். இப்படி நீங்கள் கேட்பது என்னைப் பெற்ற தாய் மாரியம்மாள் சொல்வது போல இருக்கிறது என்று சொல்லுவேன்.

இன்றைக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கலிங்கப்பட்டிக்கு வந்து என் தாயைப் பெருமைப்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அது எனக்குக் கிடைத்த புகழ் அல்ல. 99 வயதில் மதுவை ஒழிக்கக் களத்தில் இறங்கியதால் அவர்களுக்குக் கிடைத்த பெருமை. இதை நான் அவரிடமே சொன்னேன். அம்மா, இன்றைக்கு என்னைவிட உலகமெல்லாம் உனக்குத்தான் பெயராகி விட்டதம்மா என்றேன்.

தொலைக்காட்சி செய்திகள், விவாதங்களை விடாமல் பார்த்து விடுவார். அதை என்னிடம் சரியாகச் சொல்லுவார். நான் தில்லிக்குச் சென்று வந்தது குறித்து அவரிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். பஞ்சாப் சென்று முதல் அமைச்சர் பாதல் அவர்களைச் சந்தித்து, பொன்விழாவுக்கு அழைப்பு விடுத்தேன். அம்மா எப்படி இருக்கிறார்கள்? என்று அவர் கேட்டது மட்டும் இல்லை. நான் எந்த ஒரு நிகழ்ச்சியும் இன்றி உங்கள் கிராமத்து வீட்டுக்கு வந்து அம்மாவைப் பார்க்க வேண்டும்; ஒருநாள் அங்கே தங்கி இருந்து ஊரைப் பார்க்க வேண்டும் என்று என்னிடம் இரண்டு ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார். இந்தச் சந்திப்பின்போதும் அதை நினைவுபடுத்தினார். 

அவர் கிராமத்தை மிகவும் நேசிப்பவர். சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தபோதும் நினைவூட்டினார். அதற்கு நான், ‘ஐயா தேர்தல் முடியட்டும் அழைத்துச் செல்கிறேன்’ என்று சொன்னேன். ‘சரி’ என்று சொன்னேன். அம்மாவின் நலம் விசாரித்தார்.

அடுத்து மன்மோகன் சிங்கைப் பார்த்தேன். அவரும் அம்மாவைப் பற்றித்தான் கேட்டார். ஏனென்றால் என்னுடைய சிறையில் விரிந்த மடல்கள் நூலை வெளியிடுவதற்காகச் சென்னைக்கு வந்தபோது, முன்வரிசையில் அம்மா உட்கார்ந்திருக்கிறார் என்பதை அறிந்தவுடன், மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்று அவரது கையைப் பிடித்து நலம் விசாரித்தவர் அவர். 

கடந்த செப்டெம்பர் மாதம் திருப்பூரில் நடந்த மாநாட்டுக்கு வர வேண்டும் என்று என்னிடம் அம்மா கேட்டார்கள். நான் யோசித்துக் கொண்டு இருந்தபோதே தம்பி ரவி, ‘வேண்டாம். நடக்க முடியாது கஷ்டம்’ என்று சொல்லி விட்டார். நானும் அதை ஏற்றுக் கொண்டேன்.
                 
கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டக் களத்திற்கு வந்தபோதும், ‘அண்ணன்கிட்ட சொல்லாதே. அவன் வேண்டாம்’ என்று சொல்லி விடுவான் என்று சொல்லிவிட்டு, கூட இருந்தவர்களை அழைத்துக் கொண்டு வந்து விட்டார். தள்ளு நாற்காலியில் வைத்துத்தான் தள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.

கள். இறப்பதற்கு முதல் நாள் வரையிலும் பாத்ரூமுக்கு அவராகத்தான் சென்று வந்தார். ஆனால் வெளியில் நீண்ட தொலைவு நடக்க முடியாது. மதுக்கடையை எதிர்த்து அவர் போராடுகின்ற செய்தியைக் கேட்டு நான் சென்னையில் இருந்து அங்கே போனேன். போலீசைக் கொண்டு வந்து குவித்து விட்டார்கள். மறுநாள் கலகம் வரும் என்று எதிர்பார்த்தார்கள். துப்பாக்கிச் சூடு கூட நடக்கலாம் என்றார்கள். அப்போது அம்மாவிடம், நீங்கள் வர வேண்டாம் போராட்டக் களத்திற்கு. நான் பார்த்துக் கொள்கிறேன். அங்கே எதுவும் நடக்கலாம் என்று சொல்லிவிட்டு நான் புறப்பட்டபோது, அவருக்குக் கொஞ்சம் கவலை. முகத்தில் தெரிந்தது. அன்றைக்கு இங்கே கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினார்கள், துப்பாக்கியால் சுட்டார்கள். அதைக் கேள்விப்பட்டு ஆருயிர்ச் சகோதரர் திருமா வளவன் அவர்கள் இங்கே ஓடோடி வந்தார்கள்.

என்னை விட இந்தச் சமூகத்தை என் தாயார் நன்றாகப் புரிந்து வைத்து இருந்தார். நான் உயர்ந்த பதவிகளுக்கு வந்து விட வேண்டும் என்று அவர் நினைத்தது இல்லை. கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நான் தோற்றபோது, எங்கள் கிராமத்துப் பெண்கள் அவரிடம் வந்து அழுதார்கள். ‘அவன் தோற்பான் என்று எனக்கு முதலிலேயே தெரியும். பணம் கொடுத்து ஓட்டு வாங்கறாங்க. இவன் எப்படி ஜெயிக்க முடியும்? அழாதீர்கள்’ என்று சொன்னார்.

இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இன்றைக்குத் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார். முன்னாள் முதல்வர் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார். முன்னாள் முதல்வருடைய மகன், மகள் இங்கே வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார்கள். முதல் அமைச்சர் சார்பில், இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை இங்கே அனுப்பி வைத்து இருக்கின்றார்கள். நான் முதன்முதலாக அமெரிக்காவில் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபோது எந்த சகோதரர் வீட்டில் தங்கி இருந்தேனோ, அந்த மதிப்பிற்குரிய பழனி பெரியசாமி அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் கெட்டு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரைக் கண் போலப் பாதுகாத்தவர் அவர். என்னுடைய திருமணத்தின்போது குற்றாலத்திற்கு வந்து தங்கி இருந்து உடன் இருந்து நடத்திக் கொடுத்த ஆருயிர்ச் சகோதரர் எம். நடராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கின்றார். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

என் தந்தையார் காலத்தில் எங்கள் வீட்டைப் பராமரித்த சங்கிலியின் பேரன் சந்துருவுக்கு நாங்கள் ஒரு வீடு கட்டி, செப்டெம்பர் மாதம் 22 ஆம் தேதி திறப்பு விழா நடத்தியபோது, இந்தத் தலைவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். அன்றைக்கு சுமார் நாலாயிரம் ஐயாயிரம் பேர் சாப்பிட்டு விட்டுப் போனார்கள். மாமா ஹைதர் அலி அவர்கள் உங்கள் வீட்டுச் சாப்பாடு அவ்வளவு ருசியாக இருந்தது என்று சொன்னார்கள். அம்மாவுக்கு அவ்வளவு சந்தோசம்.

இன்றைக்கு எத்தனையோ பெரிய தலைவர்கள், பெரிய மனிதர்கள் எல்லாம் வந்தார்கள். ஆனால் அதிகமாக வந்தவர்கள் ஏழை மக்கள்தாம். வறுமையில் வாடுகின்றவர்கள், நல்ல உடை அணிய முடியாத அவர்களுடைய அன்புதான் என்னை நெகிழச் செய்கிறது. அது அரசியலைக் கடந்த அன்பு.

அதுபோல இயற்கையும் ஒத்துழைத்து இருக்கின்றது. இன்றைக்குப் பலத்த மழை வரும் என்ற அறிவிப்பால், வீட்டுக்கு முன்பு ஒரு பெரிய தகரக் கொட்டகை போட்டோம். மழை வரவில்லை. வெயிலும் இல்லை. எங்கள் ஊர் கண்மாய் நிறைந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த ஆண்டு பெய்து கொண்டு இருக்கின்ற மழை தொடர்ந்து கண்மாய் நிறைந்து விட வேண்டும்; அதை அம்மாவும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.

தமிழ் மண்ணைச் சுமந்த அன்னை உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்ற ஈழத்தமிழர்கள் என் தாயாருக்கும், கேணல் பரிதிக்கும் சேர்த்து நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை நடத்துகின்றார்கள். நோர்வே ஈழத்தமிழர்கள் ‘தமிழ் ஈழ மண்ணைச் சுமந்த அன்னை’ என்று சொல்லி இரங்கல் நிகழ்ச்சி நடத்தி இருக்கின்றார்கள். கை, கால்களை இழந்த 37 புலிகளை ஓராண்டுக்கும் மேல் இந்த வீட்டில் வைத்துச் சோறு போட்டவர் அம்மா. யார் வந்தாலும் அவர்களை நன்றாகச் சாப்பிட வைக்க வேண்டும் என்று எண்ணுவார். பொடாவில் நான் கைது செய்யப்பட்டபோது, இந்த வீட்டிலும் சோதனை போட்டார்கள். அங்கே மாட்டி இருந்த பிரபாகரன் படத்தை அவர்கள் கழற்றிய போது, ‘அதை ஏன் எடுக்கின்றீர்கள். அதுவும் எனக்கு ஒரு பிள்ளைதான்’ என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், ‘இல்லம்மா எங்களுக்கு சர்க்கார் உத்தரவு இருக்கிறது. நாங்கள் எடுத்துக் கொண்டு போகிறோம். பிறகு திருப்பிக் கொடுத்து விடுவோம்’ என்று சொன்னார்கள்.

அந்தச் சோதனையை முடித்துக் கொண்டு வந்திருந்த அத்தனைக் காவலர்களும் அதிகாரிகளும் புறப்பட்டனர். அப்போது அம்மா, ‘சரி எல்லாம் முடிஞ்சுது. நேரமாயிருச்சு. இந்நேரம் எங்க போய்ச் சாப்பிடுவீக. எல்லோரும் சாப்பிட்டு விட்டுப் போங்கள்’ என்று சொன்னதைக் கேட்டு அவர்கள் நெகிழ்ந்து போனார்கள். எந்த இடத்திலும் சோதனைக்குச் செல்லுகின்ற எங்களைப் பார்த்து சாப்பிடுங்கள் என்று யாருமே சொன்னது கிடையாது என்று சொன்னார்கள். இதெல்லாம் யாரும் சொல்லிக் கொடுத்து வருவது இல்லை.

அம்மா மகா தைரியசாலி. நான் தேர்தலில் தோற்றபோதெல்லாம் முதல் போன் அவரிடம் இருந்துதான் வரும். ‘கவலைப்படாதே. உன் மேல இருக்கிற திருஷ்டி கழிஞ்சது’ என்பார்கள். ஆனால் ஜெயித்தபோது போன் வந்தது இல்லை. இங்கே வந்து அவரது காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றுச் சென்றால் அது எனக்குப் பெரிய துணிச்சலைத் தரும்.

எங்கள் கலிங்கப்பட்டி கிராமத்தில் அனைவருக்கும் ஒரே சுடுகாடுதான். 42 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையாரையும் இங்கேதான் எரித்தோம். இன்றைக்கு அம்மாவை எரிக்கின்றோம். தமிழகத்தில் உள்ள அனைத்துச் சாதிகளும் இந்தக் கிராமத்தில் இருக்கின்றன. இந்த சமத்துவம் என்பது நாங்கள் ஏற்படுத்தியது அல்ல. 400 ஆண்டுகளாக இங்கே நிலவுகின்ற சமத்துவம் இது.

மக்கள் எதையும் கூர்ந்து கவனிக்கின்றார்கள். ஒவ்வொரு அசைவையும் கவனிக்கின்றார்கள். அம்மா இந்த வயதில் போராடினார்களே, அதைப் பார்த்துத்தான் இன்றைக்கு இத்தனை பேர் இங்கே திரண்டு வந்து இருக்கின்றார்கள். அது பொது நன்மைக்காக. அன்றைக்கு மூடிய அந்தக் கடையை இன்று வரையிலும் திறக்கவில்லை. இனியும் திறக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். நீதிமன்றத்திலும் தடை ஆணை பிறப்பித்து இருக்கின்றார்கள்.

என் தாயாரின் கனவு நனவாக வேண்டும். நான் முதல் அமைச்சராக வேண்டும் என்று அவர் ஒருநாளும் எண்ணியது இல்லை. நான் ஒரு பெரிய பதவிக்கு வரவேண்டும் என்ற வார்த்தை ஒருநாளும் அவர் வாயில் இருந்து வந்ததே கிடையாது. மகனை மந்திரியாகப் பார்க்க வேண்டும் என்று யாரிடமும் சொன்னதே கிடையாது. நான் அரசியலுக்கு வந்து 51 ஆண்டுகள் ஆகின்றன; கட்சி தொடங்கி 22 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கும் அப்படிப்பட்ட ஆசை கிடையாது. என் குடும்பத்தில் யாருக்கும் அந்த எண்ணமும் இல்லை. என் தம்பி ரவி தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தபோதும் அவர் கவலைப்படவில்லை. நான் மிசா சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் இருந்தபோதும் அவர் கவலைப்படவில்லை.

சேலம் சிறைக்கு என்னைப் பார்க்க வந்தார்கள். ‘நம்ம ஐயா எழுதிக் கொடுத்தால் விட்டு விடுவார்களாமே என்று நம்ம வீட்டில் களை வெட்டுகிற பெண்கள் சொல்லுகிறார்கள்’ என்றார். ‘அதற்கு நீங்க என்னம்மா சொன்னீர்கள்?’ என்று கேட்டேன். ‘என் மகன் என்ன கொலை செய்தானா? கொள்ளை அடிச்சானா? அந்த ராட்சசி எத்தனை வருசம் உள்ளே வச்சிருவான்னு சொன்னேன்’ என்றார்.

திரைமறைவில் நின்று எங்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டு இருந்த உளவுத் துறை அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். ஜெயிலர் இரவில் என் அறைக்கு வந்து கம்பிகளுக்கு ஊடாக என் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார். அவர் பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். அப்படி எங்களுக்குத் துணிச்சலை ஏற்படுத்திக் கொடுத்தார்.

தமிழகத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டால், இந்தத் தள்ளாத வயதிலும் களத்திற்கு வந்து போராடிய என் தாயின் கனவு நிறைவேறும். தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனைச் சுட்டுக் கொன்றதைக் கேள்விப்பட்டு, அந்தப் படத்தைப் பார்த்த அவர், ‘இந்தப் பச்சைப் புள்ளையச் சுடடுக் கொன்றிருக்கிறார்களே, நம்ம ஊரில் போராட்டம் நடத்தனும்’ என்று சொல்லி, அப்போதும் அவராகவே களத்திற்கு வந்தார். அதுபற்றியும் என்னிடம் கேட்கவில்லை. ஊர்ப் பெண்களை எல்லாம் திரட்டிக் கொண்டு வந்தார். காலையில் இருந்து மாலை வரையிலும் சொட்டுத் தண்ணீர் பருகவில்லை. நானும் அப்படித்தான். நான் பொடா சிறையில் இருந்தபோது நடைபெற்ற மூன்று உண்ணாவிரதப் போராட்டங்களிலும் பங்கேற்றார். செண்பகவல்லி அணைக்கட்டுக்காக வாசுதேவநல்லூரில் நடைபெற்ற விவசாயிகள் உண்ணாவிரத அறப்போரிலும் கலந்து கொண்டார். மின்வெட்டைக் கண்டித்து கோவில்பட்டி உண்ணாவிரதம் இருந்தபோது, ஊரில் இருந்து 500 பெண்களைத் திரட்டிக் கொண்டு வந்து பங்கேற்றார்.

பாலச்சந்திரன் படுகொலை உண்ணாவிரதத்திற்குப் பிறகுதான் அவரது உடல்நிலை மோசமானது. சென்னை வீட்டுக்கு அழைத்து வந்தோம். ஒருநாள் அறைக் கதவைத் திறந்து பார்க்கிறேன். பேச்சு வரவில்லை. கையைத்தான் ஆட்டினார்கள். அன்றைக்கே முடிந்து போனது என்று நினைத்தேன். உடனே காரில் ஏற்றிக்கொண்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கே மூன்று நாட்கள் வைத்து இருந்தோம்.காப்பாற்றிவிட்டோம். அவருக்கு சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு எல்லாம் இருந்தது. ஒருநாள் முழுக்கக் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உயிருக்கு ஆபத்து. அந்த நிலையிலும் அப்படி உண்ணாவிரதம் இருந்தார். என்றைக்கு இருந்தாலும் சாகப் போகிறவர்தான்.
அவருக்கு இந்தப் புகழ் வைகோவால் வந்தது அல்ல. அவருடைய தியாகத்தால் வந்தது. நீங்கள் எல்லோரும் வந்து, இந்த இரங்கல் நிகழ்விலும் கலந்துகொண்டது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது.

எங்கள் கலிங்கப்பட்டியில் 18 சாதிகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை சாதிச்சண்டை கிடையாது. இங்கே இருக்கின்ற இளவட்டங்களுக்குச் சொல்லுகிறேன். தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் இங்கே வந்திருக்கின்றார்கள். நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள். நம்ம ஊரில் சாதிச் சண்டை இதுவரை கிடையாது. இனியும் வராமல் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நாடு போகிற போக்கு சரியில்லை. கெட்டுக் கிடக்கிறது. என் காலத்திற்குப் பிறகும் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதுதான் எனக்கு மரியாதை.

1960 ஆம் ஆண்டு தெற்குத் தெரு மோசஸ் கல்யாணத்துக்குப் போய் நான் சாப்பிட்டேன். ‘என்ன கீழ வீட்டு முதலாளி அங்கே போய்ச் சாப்பிட்டாராம்ல’ என்று ஊருக்குள் பிரச்சினை ஆனது. அப்போது நான் பள்ளி மாணவன்தான். அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாது. அப்படி இந்த ஊருக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்திருக்கின்றோம். என் தாயார் மறைவுக்காக ஊரோடு திரண்டு எல்லோரும் வீர வணக்கம் செலுத்துகின்ற இந்த நேரத்தில் அந்த ஒற்றுமை என்றைக்கும் நிலவ வேண்டும் என்பதைத்தான் நான் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். கருமாதி அன்றைக்கும் அனைவரும் வந்து சாப்பிட்டு விட்டுப் போக வேண்டும். ஒரு ஆள் விட்டுப் போகக் கூடாது. எல்லோரும் வயிறாரச் சாப்பிட வேண்டும்.

என் தாயாரின் மறைவுக்கு இங்கே வந்து இரங்கல் தெரிவித்தவர்களுக்கு, அறிக்கைகள் தந்த தலைவர்களுக்கு, கேரள ஆளுநருக்கு, கவிஞர்கள், எழுத்தாளர்கள் செய்தியாளர்களுக்கு அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் ஒரு பகுத்தறிவாளன்தான். இருந்தாலும் சொல்லுகிறேன். என் தாயார் சாகவில்லை. என் நினைவு வானத்தில் அவர் இருந்து எந்நேரமும் என்னை இயக்கிக் கொண்டே இருப்பார். நான் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன். எனக்கும் வயதாகி விட்டது. கிராமங்களில் சொல்லுவது போல அடி திரும்பி விட்டது. குறைகள் இல்லாத மனிதன் இல்லை.யாருக்கும் ஒரு சிறிய கெடுதல் கூடச் செய்து விடாமல், இயன்றவரையிலும் உதவிகள் செய்து வாழ வேண்டும் என்பதற்கு என் தாயாரின் நினைவுகள் எனக்கு ஊக்கம் அளிக்கும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை என் தாயார் உயிராக நினைத்தார். அவைத்தலைவர் முதற்கொண்டு அனைத்து நிர்வாகிகளும் இங்கே வந்திருக்கின்றார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என வைகோ தனது இரங்கல் உரையில் தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment