Tuesday, November 17, 2015

வைகோவின் வாதத்தை ஏற்று அணையின் முதல் இரண்டு பகுதிகளில் தூர்வாரி முடிக்க தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவு!

திருவைகுண்டம் அணையில் தூர் வாருவதற்காக தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க.செயலாளர் ஜோயல் அவர்கள், தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், நீதிபதி ஜோதிமணி அவர்களும், தொழில்நுணுக்க நிபுணர் பேராசிரியர் நாகேந்திரன் அவர்களும், தூர் வாருவதற்கான ஆணையைப் பிறப்பித்து இருந்தார்கள்.

திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதல் இரண்டு பகுதிகளில் தூர் வாரி முடித்தபின்னரே, அடுத்த பகுதிகளில் தூர் வாரும் வேலையைத் தொடங்க வேண்டும் என்று, இந்த வழக்கில் வாதாடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டதன் பேரில், அதனை ஏற்றுக் கொண்டு, அவ்விதமே ஆணை வழங்கினர்.

இன்று (17.11.2015) நடைபெற்ற விசாரணையில்...

முதல் இரண்டு பகுதிகளில் தூர் வாரி முடிப்பதற்கு முன்பே, மூன்றாவது நான்காவது பகுதிகளில் தூர் வார அனுமதி கேட்டு தமிழக அரசு பொதுப்பணித் துறை சார்பில், தீர்ப்பு ஆயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைக் கடுமையாக எதிர்த்து வைகோ முன்வைத்த வாதம் பின்வருமாறு:-

நீதிபதி அவர்கள் தூர் வார ஜூன் 2 ஆம் தேதி ஆணை பிறப்பித்தும், மத்திய அரசு 10 ஆம் தேதி அனுமதி கொடுத்தபின்னரும் தமிழக அரசு வேலையைத் தொடங்கவில்லை. நாங்கள் போராட்டத்தை அறிவித்தபின்னரே ஜூன் கடைசியில் பூமி பூசை நடத்தினார்கள். அதன்பின்னரும், அணையை அடுத்த முதல் பகுதியில் வனத்துறையைக் காரணம் காட்டி, இரண்டு மாத காலம் வேலை தொடங்கவே இல்லை.

எவ்வளவு வெள்ளம் வந்தாலும் மழை பெய்தாலும் தூர் வாருவதற்கான இயந்திரங்களும், கருவிகளும் தங்களிடம் இருப்பதாக பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் தீர்ப்பு ஆயத்தில் கூறினார். இப்போது முதல் இரண்டு பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் தூர் வாரும் பணியைச் செய்ய முடியவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. முதல் இரண்டு பகுதிகளில் 30 சதவீத தூர் வாரும் பணிதான் நடந்து இருக்கிறது. தீர்ப்பு ஆயத்தில் உறுதி அளித்தபடி அங்கு எடுக்கப்பட்ட அமலைச் செடிகளை முறையாகக் கொண்டு போய்க் கொட்டவில்லை என்பதை அண்ணன் நல்லகண்ணு அவர்கள் தெரிவித்தார்கள். அணையின் மூன்றாம் நான்காம் பகுதிகளில் தூர் வார அரசாங்கம் இவ்வளவு துடிப்பது ஏன்? அங்கே மணலை அள்ளுவதற்காகத்தான் என்ற சந்தேகம் எழுகிறது.

அரசாங்க வழக்கறிஞர்: உள்நோக்கம் கற்பித்துக் குறை சொல்ல வேண்டாம்.

வைகோ: வழக்கறிஞரைச் சொல்லவில்லை. நான் அரசாங்கத்தைத்தான் குற்றம் சாட்டுகிறேன். திருவைகுண்டம் அணையில் முதல் இரண்டு பகுதிகளில் தூர் வாரி முடித்தபின்னரே, அடுத்த இடங்களில் தூர் வார தீர்ப்பாயம் மீண்டும் ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தீர்ப்பு ஆய நீதிபதி இதனை ஏற்றுக் கொண்டு, மூன்றாம் நான்காம் பகுதிகளில் தற்போது தூர் வாரக் கூடாது; முதல் இரண்டு பகுதிகளில் வேலையை முடிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து, வழக்கு விசாரணையை நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

வைகோ அவர்களுடன் வழக்கறிஞர் ஜோயல், வழக்கறிஞர் நன்மாறன், வழக்கறிஞர்கள் தங்கவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment