Wednesday, November 25, 2015

மக்கள் நலக் கூட்டணி மாவட்டச் செயலாளர்கள் கூட்ட தீர்மானங்கள்!

மக்கள் நலக் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சி நகரில் 25.11.2015 இன்று விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சமீபத்தில் வெள்ள சேதத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும், தமிழக சட்டமன்றத்தில் நீண்டகாலம் உறுப்பினராக பணியாற்றிய திருமதி எ.எஸ்.பொன்னம்மாள் அவர்களது மறைவிற்கும் கூட்டத்தின் துவக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் துவக்கவுரையாற்றிய பின்னர், தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணியின் எதிர்கால பணிகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர்களின் கருத்துறைகளுக்குப் பின்னர் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ நிறைவுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம்-1

தமிழக மக்களது வறுமைக்கும் வேதனைக்கும் காரணமான நாற்பது ஆண்டுகால திமுக, அதிமுக ஆட்சிக்கு மாற்றாகவும், நாசகர பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய காங்கிரஸ் மற்றும் மதவெறி சக்தியான பாஜக, சாதிவெறி அரசியல் நடத்தும் பாமக ஆகிய கட்சிகளை புறந்தள்ளி, ஊழலற்ற, வலிமையான, வளமான தமிழகத்தை உருவாக்கும் இலட்சிய நோக்குடன் மக்கள் நலக் கூட்டணி தமிழக மக்களின் விருப்பத்திற்கேற்ப காலத்தின் தேவையாய் அமைந்துள்ளது.

மத்தியிலும் மாநிலத்திலும் மேற்கண்ட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் மலிந்து விவசாயம், தொழில்துறை மலிந்து மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துவிட்டது.வாக்கு அறுவடைக்காக இலவலசங்களை வாரி வழங்கிட மதுக்கடைகளைத் திறந்து மக்கள் வாழ்வை சீரழிக்கும் கொடுமை தொடர்கதையாக உள்ளது.இயற்கை வளங்களும் கனிம வளங்களும் தங்கு தடையின்றி சூறையாடப்படுகின்றன.

சாதிய கொடுமைகள், ஆணவக் கொலைகள், பாலியல் வன்முறைகள், காவல்துறை அக்கிரமங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகள் அதிகரித்துவிட்டன.கல்வி, மருத்துவம் உள்ளிட்ட இன்றியமையாத துறைகள், தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பின்றி இளைய தலைமுறை வேதனையில் மூழ்கியுள்ளது.

மக்கள் நலனை மறந்து ஊழலில் திளைத்த கட்சிகளின் தலைவர்கள் நீதிமன்றங்களில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய பின்னணியில் பொது வாழ்வில் ஊழலை ஒழிக்கும் தகுதியோடும், மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்று தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தவும் மக்கள் நலக் கூட்டணி உறுதி கொண்டுள்ளது.

தமிழகத்தில் ஒளிமயமான மாற்றத்தை ஏற்படுத்திட மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து செயலாற்ற ஜனநாயக சக்திகள் முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசியல் வரலாற்றில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக மக்கள் பேராதாரவை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் - 2

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் தமிழ்நாட்டில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன.மழை தொடர்வதால் இதர மாவட்டங்களிலும் வெள்ள சேதம் ஏற்பட்டு வருகிறது.

இத்தகைய பேரிடர் ஏற்பட்டதை ஆய்வு செய்தால் கடந்த சில பத்தாண்டுகளாக ஏரிகள், கண்மாய்கள், பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரி பராமரிப்பு செய்ய தவறியதாலும், ஏரி குளங்களில் ரியல் எஸ்டேட் வியாபாரிகளின் தடையற்ற விற்பனையும், வசதி படைத்த பல நிறுவனங்களின் ஆக்கிரமிப்பும் இதற்கு முக்கிய காரணங்களாகும். சென்னை நகரில் மழை நீர், கழிவு நீர் வடிகால்கள் பராமரிப்பு புறக்கணிக்கப்படுவதுடன், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நகர விரிவாக்கத்திற்கான உரிய திட்டம் இல்லாததன் விளைவாக சென்னை நகரம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

பல்லாண்டுகளாக தமிழக ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுக - அதிமுக அரசுகள் மேற்கண்ட அடிப்படை கட்டமைப்புக்கான பணிகளை மேம்படுத்த தவறியதன் விளைவால்தான் தற்போது தமிழக மக்கள் பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளனர் என்பதை மக்கள் நலக் கூட்டணி சுட்டிக் காட்டுகிறது.

• தமிழக வெள்ள சேதங்களுக்கு ஒட்டுமொத்த நிதியாக மத்திய அரசு ரூ. 10,000 கோடி வழங்குவதுடன் உடனடி நிதியாக ரூ. 2000 கோடி வழங்கிட வேண்டும்.

• வெள்ள சேதம் மற்றும் முழுமையான நிவாரணப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்க உடனடியாக மாநில அளவிலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் அனைத்துக் கட்சி தலைவர்களது கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

• அனைத்துக் கட்சி குழு மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் மேற்பார்வையில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

• உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கிட வேண்டும்.

• முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 25,000/-, பகுதி சேதமடைந்த வீட்டுக்கு ரூ. 20,000/- மற்றும் வீட்டு பொருட்கள், மின்சாதனங்கள், துணிமணிகள் உள்ளிட்ட இழப்புகளுக்கு இழப்பிற்கேற்ப நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும். அரசு கட்டிக் கொடுத்துள்ள தொகுப்பு வீடுகள், தானே வீடுகள், பசுமை வீடுகள் மற்றும் சொந்தமாக கட்டியுள்ள ஓட்டு வீடுகளுக்கு இழப்பிற்கு ஏற்ப நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும். இதர வகைகளில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 5,000/- வழங்கிட வேண்டும். சென்னை மாநகரில் காலங்கடந்த குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடங்களை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும்.

• விவசாய பயிர் இழப்புக்கு நெல், மரவள்ளி போன்ற விளை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000/-, கரும்பு, வாழை, சவுக்கு உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 1.5 லட்சம் மற்றும் இதர பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.

• அனைத்து விவசாய பயிர்களுக்கும் இன்சூரன்ஸ் தொகைக்கான பிரிமீயம் அரசே செலுத்தி பயிர் காப்பீடு பெற வழி செய்ய வேண்டும்.

• ஆழ்குழாய் கிணறுகள், நீர்மோட்டார்கள், மண் படிந்துள்ளதை அகற்றுவது, கோழிப் பண்ணைகள், கால்நடைகள் உயிரிழப்பு போன்றவைகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.

• விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 30 கிலோ அரிசி மற்றும் நிவாரணமாக ரூ. 5,000/-மும், மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5,000/மும் சேதம் ஏற்பட்ட படகு வலைகளுக்கு முழுமையான நட்ட ஈடும் வழங்கிட வேண்டும்.

• தமிழக அரசு, மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியை சேர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கடந்த காலங்களைப் போல் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதாக அமைந்திடக் கூடாது.

• தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடிக்கடி இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சூழ்நிலையில் இப்பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும், இயற்கை இடர்பாடுகளை தடுக்கும் வகையில் நிரந்தர வெள்ளத் தடுப்பு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பேரிடர் மேலாண்மை நிர்வாக அமைப்பை உருவாக்கி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என மக்கள் நலக் கூட்டணி வற்புறுத்துகிறது.

தீர்மானம் - 3

மதுரை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கிரானைட் கனிமவளக் கொள்ளை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த சட்ட ஆணையர், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு 21 கட்டங்களாக நடத்திய விசாரணை அறிக்கையை கடந்த நவம்பர் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. கிரானைட் கனிமவளக் கொள்ளையால் அரசுக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் கொள்ளையடித்த குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டுமென்று மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்துகிறது.

சகாயம் தலைமையிலான விசாரணைக் குழு மதுரை மாவட்டத்தில் இரண்டு வட்டங்களில் மட்டும் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட், பாக்ஸைட் மற்றும் சுண்ணாம்புக்கல் போன்ற கனிமங்கள் வரைமுறையின்றி கொள்ளையடிக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

சகாயம் குழு அறிக்கை பரிந்துரையின்படி உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத் துறை தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து கனிமவளங்கள் கொள்ளை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி கேட்டுக் கொள்கிறது.

கிரானைட் ஊழல் குறித்த சகாயம் குழுவின் விசாரணை அறிக்கையை மக்கள் மன்றத்தில் முன் வைக்க வேண்டும் என்றும் மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 4

மது ஒழிப்புப் பிரச்சாரப் பாடலைப் பாடிய திரு. கோவன் அவர்கள் மீது பொய்வழக்கு புனைந்து கைது செய்ததையும், ஆட்சியாளர்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன் வார இதழின் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதுறு வழக்குகள், அந்த இதழின் முகநுலை முடக்கும் முயற்சி ஆகியவற்றையும் மக்கள் நலக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.

கருத்துரிமைப் பறிப்பில் மத்திய பாஜக அரசின் அணுகுமுறையையே தமிழ்நாட்டில் அதிமுக அரசும் பின்பற்றுகிறது என்பதை மக்கள் நலக் கூட்டணி சுட்டிக் காட்டுவதுடன் தமிழக அரசின் கருத்துரிமைப் பறிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது.

தீர்மானம் - 5

சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் ஐஎஸ் மத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 125க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் பயங்கரவாத செயலை மக்கள் நலக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.

2001 செப். 11ல் அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அரபு நாடுகளிலும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறை ஏவப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதைப் பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டில் மக்களை ஒடுக்குவதில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர்.இப்போதும் அதைப்போன்று பாரீஸ் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதத்துடன் இஸ்லாமியர்களை தொடர்புபடுத்தி அச்சுறுத்தும் சூழல் உருவாக்கப்படுகிறது.

பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதேவேளையில் பயங்கரவாதத்தின் பெயரால் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களையும், அவர்கள் மீது முன்வைக்கப்படும் அவதுறுப் பிரச்சாரத்தையும் மக்கள் நலக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. 

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment