Thursday, November 19, 2015

ஈழத்தமிழர் படுகொலைக்குப் புதிய சான்றுகள்! வைகோ அறிக்கை!

இலங்கைத் தீவில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காகச் சென்ற ஐ.நா.வின் விசாரணைக்குழு நேற்று வெளியிட்டு இருக்கின்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கிழக்கு மாகாணத்தில் திரிகோணமலை கடற்படைத் தளத்தில் சித்திரவதைக் கூடங்கள் இருந்தன;  

2010 க்குப் பிறகும் ஈழத்தமிழர்கள் அங்கு தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன; சுவர்களில் படிந்துள்ள இரத்தக்கறைகள், கை ரேகைகள், ஈழத்தமிழர்கள் தொடர்ந்த அந்த அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கின்றார்கள்; இதுபோல இன்னும் பல இடங்களில் சித்திரவதை முகாம்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளன என்றும், அந்தக் குழு தெரிவித்து இருக்கின்றது.   

இம்மூவர் குழுவின் தலைவரான கனடாவின் பெர்னார்டு துஹைம் மற்றும் அர்ஜென்டைனா நாட்டின் ஏரியல் துருட்ஸ்கி, தென்கொரியாவின் தவ்-உவ்-பெய்க் ஆகியோர், இதுகுறித்து மேலும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேலும், ‘நாங்கள் அறிந்த மட்டிலுமே 20,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியில் காணாமல் போயிருக்கின்றனர்’ என்றும் அவர்கள் கூறி உள்ளனர். இலங்கைத் தீவில் இனப்படுகொலை தொடர்ந்து நடைபெறுகிறது என்பதற்கு மேலும் ஒரு ஆதார சாட்சியாக மூவர் குழுவின் தகவல்கள் அமைந்துள்ளன.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா? இலங்கைக் கொலைக்களத்திற்கு ஆதாரங்களைத் தேட வேண்டுமா? 

இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டுப் புலன் விசாரணையும், நீதி விசாரணையும்தான் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியும் என்று  நாம் தொடர்ந்து கோரி வந்த போதிலும், கொலைகார சிங்கள அரசைப் பாதுகாக்கும் நோக்கத்தில் அந்த இனக்கொலைகள் 2008-2009 இல் நடைபெற்ற இனக்கொலைக்குக் கூட்டுக் குற்றவாளியாக இருந்த இந்திய அரசு இன்றளவில் அதே அடிப்படையில் செயல்பட்டு வருவதற்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, உலகெங்கும் வாழும் தமிழர்கள், நீதி கிடைக்கவும், விடியல் காணவும் தொடர்ந்து அந்தந்த நாடுகளிலும் அறப்போராட்டங்கள் மூலம் அழுத்தம் தர வேண்டியது முக்கியமான கடமை என வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment