Sunday, November 22, 2015

மலேசிய உரையின் சுருக்கம் இலங்கை மனித உரிமை மீறல் கருத்தரங்கில்!

மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் தலைநகரில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் உரையாற்றிய தமிழின முதல்வர், மக்கள் தலைவர் வைகோ அவர்களின் உரை சுருக்கம் பின் வருமாறு
இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கை வெகு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி இருக்கின்ற, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ் ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் தமிழர்கள் வசிக்கின்றார்களோ, அவர்களுடைய குரல்களையும் ஒடுக்குகின்ற முயற்சிகளில் இலங்கை அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான், இந்தக் கருத்தரங்கில் நான் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, என் வருகையைத் தடுப்பதற்கான
அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டார்கள். மலேசிய அரசுக்கு எதிர்ப்புக் கடிதம் எழுதியதுடன், எனக்கு மலேசிய நுழைவு உரிமை மறுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள்.
ஆனால் அதன்பிறகு, அவர்களுடைய முயற்சிகளை முறியடிக்கின்ற வகையில், பேராசிரியர் இராமசாமி அவர்கள் நமது சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்சல் இருவரையும் கோலாலம்பூருக்கு அனுப்பி, துணைப் பிரதமர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து, நிலைமையை எடுத்துக் கூறச் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர் நமது அன்பிற்குரிய குலசேகரன் பெருந்துணை புரிந்தார்கள். அதன் விளைவாகத்தான் இங்கே உங்கள் முன்னால் நான் நின்று கொண்டு இருக்கின்றேன்.
ஹோமர் எழுதிய உலிஸ்ஸஸ் காவியத்தில் ஒரு பொன்மொழியை இங்கே மேற்கோள் காட்ட விழைகிறேன்.
To Strike, to strive, to Preserve, not to yield, come what may
எத்தனைத் தடைகள் வந்தாலும் எதிர்கொண்டு முன்னேறு, வளைந்து கொடுக்காதே; தொடர்ந்து போராடு.
இன்றைக்கு எப்படி இலங்கை அரசின் முயற்சிகள் தோற்றுப் போனதோ, அதேபோல ஈழத்தமிழர் படுகொலைகளை மூடி மறைக்க அவர்கள் மேற்கொள்கின்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போகும்; ஐ.நா. முன்றிலில் தமிழ் ஈழத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன்.
மக்கள் ஆட்சி, மனித உரிமைகள் என்றெல்லாம் மூச்சுக்கு மூச்சு முழங்கிக் கொண்டு இருக்கின்ற சில நாடுகள், இரத்த வெறி பிடித்த இலங்கை அரசோடு கை கோர்த்துக் கொண்டு, ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற, மனித உரிமைகளை முடக்குகின்ற முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டு, உலகத் தமிழர்கள் வேதனை அடைந்து இருக்கின்றார்கள்.
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் பிரகடனம் செய்யப்பட்ட மனித உரிமைகள் ஆவணம், உலக மாந்தர்கள் அனைவருக்கும் நம்பிக்கையைத் தருகிறது. இந்த உலகத்திற்கே நாகரிகத்தைக் கற்றுத் தந்த தொல்குடிகள் தமிழர்கள். அத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் இனத்திற்கு, ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைகளைப் பற்றிப் பேசி, நமது கவலையைப் பகிர்ந்து கொள்வதற்காக நாம் இங்கே கூடி இருக்கின்றோம்.
ஈழத்தமிழர்கள்தாம் இலங்கை மண்ணின் பூர்வ குடி மக்கள். அவர்கள் தங்கள் தாயகத்தின் உரிமைக்காக, தமிழ் ஈழத்திற்காக, தன்னாட்சிக்காகப் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஐ.நா.மனித உரிமைகள் ஆவணம் வரையறுத்து இருக்கின்ற கோட்பாடுகளின்படித்தான் அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
அதன் 15 ஆவது பிரிவு என்ன சொல்லுகிறது?
ஒவ்வொரு இனமும் தங்களுக்கான தனித்தேசிய அடையாளங்களைக் கொண்டு இருப்பதற்கான உரிமை உண்டு; அவர்களது தன்னாட்சி உரிமையை எந்தவிதத்திலும், எந்தச் சட்டங்களாலும் மறுக்க முடியாது என்று வரையறுத்துக் கூறுகிறது.
இந்தக் கருத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டு ஐ.நா.மன்றம் பொதுப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. 1960 ஆம் ஆண்டு, ஐ.நா.மன்றத்தில் 15 கூட்டத் தொடரில், 947 ஆவது அமர்வின்போது நிறைவேற்றப்பட்ட 1514 ஆம் எண் தீர்மானம் அதைக் குறிப்பிடுகிறது. அனைத்து இனங்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு உறுதிப்படுத்துகிறது.
மனித உரிமைகளை ஆயிரம் அடி ஆழத்தில் குழிதோண்டிப் புதைக்கின்ற வகையில் இலங்கை அரசு மேற்கொண்டு வந்த அடக்குமுறைகள், படுகொலைகளின் விளைவாகத்தான், தமிழ் ஈழத்தின் இளைய தலைமுறை, குறிப்பாக மாபெரும் தலைவன் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.
அத்தகைய ஆயுதப் போராட்டத்தை ஐ.நா. மன்றம் பிரகடனம் செய்த மனித உரிமைகள் சாசனமே ஆதரிக்கின்றது. அந்தப் பகுதியை மட்டும் நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
Whereas it is essential, if man is not to be compelled to have recourse, as a last resort, to rebellion against tyranny and oppression, that human rights should be protected by the rule of law.
இன்றைக்கு மனித உரிமைகள் ஆணையம் எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதைப் பட்டியல் இட்டுக் காட்ட விரும்புகிறேன்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழத்தில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின்போது, இரண்டு நாட்களில் ஒன்றரை இலட்சம் பேர்களைக் கொன்று குவித்தது சிங்கள இராணுவம். ஆனால், அடுத்த சில நாட்களில், அதாவது மே 27 ஆம் தேதி நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தின் 11 ஆவது சிறப்புக் கூட்டத்தில் இலங்கை அரசைப் பாராட்டித் தீர்மானம்
நிறைவேற்றுகிறார்கள். அந்தத் தீர்மானத்தை எழுதிக் கொடுத்ததே இலங்கைதான். அப்போது அந்த அவையில் இலங்கை ஒரு உறுப்பு நாடு அல்ல.
இந்தத் தீர்மானத்தை, இந்தியா உட்பட 29 நாடுகள்ஆதரித்தன; 12 நாடுகள் எதிர்த்தன; 6 நாடுகள் வாக்கு அளிக்கவில்லை.
ஆனால் பின்னர் தங்களுடைய தவறுகளை உணர்ந்து கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன், இலங்கைப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக மார்சுகி தாருஸ்மன், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்தார்.
அந்தக் குழு நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் அளித்த அறிக்கையை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது.
எந்த ஒரு பன்னாட்டு விசாரணைக் குழுவையும் இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று மகிந்த ராஜபக்சே ஆணவத்தோடும், திமிரோடும் சொன்னான்.
மனித உரிமைகள் ஆணையம் நிறைவேற்றுகின்ற எல்லாத் தீர்மானங்களிலும், இலங்கையின் இறையாண்மையை, ஒருமைப்பாட்டை, தன்னாட்சி உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்கள்.
சரி. இறையாண்மை என்றால் என்ன?
ஒவ்வொரு தேசிய இனமும், தங்களுக்கான தன்னாட்சி அரசை அமைத்துக் கொள்ளவும், தங்கள் நாட்டு எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் அதைப் பாதுகாப்பதற்குமான உரிமை உண்டு. அதுதான் இறையாண்மை.
ஆனால், தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்து இருப்பதுதான் சிங்களர்களின் இறையாண்மையா? ஐரோப்பியர்கள் அந்த மண்ணில் கால் வைப்பதற்கு முன்பு, இலங்கை ஒரே நாடாக இருந்ததா?
வரலாற்றுக் காலந்தொட்டு அங்கே தமிழர்கள் தனி அரசு அமைத்து ஆண்டு வந்தார்கள். அது அவர்களது தனி நாடு, தமிழ் மக்களுக்கான அரசு. தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம். தங்கள் தேசிய இனத்தின் இறையாண்மையைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை அவர்களுக்கும் உண்டு.
அதற்காகத்தான் தலைவர் பிரபாகரன் படை நடத்தினார்; விடுதலைப் புலிகள் போராடினார்கள்.
சிங்களர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கு இல்லை. ஆனால், மனித உரிமைகள் ஆணையம் அதைத்தான் வலியுறுத்துகிறது; உலக நாடுகள் நமக்கு அறிவுரை சொல்லிக் கொண்டு இருக்கின்றன.
இதைத் தகர்த்துத் தரை மட்டமாக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. அதற்காகத்தான் இங்கே இந்தக் கருத்தரங்கத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மனித உரிமைகள் கவுன்சில் ஆண்டுதோறும் நிறைவேற்றுகின்ற தீர்மானங்களில் இலங்கையில் நல்லிணக்கம் (Reconciliation) மறுசீரமைப்பு என்பதை வலியுறுத்திக் கொண்டு வருகிறார்கள்.
இந்தக் கருத்தை முதலில் சொன்னது யார்?
ராஜபக்சே. அவன்தான், உலக நாடுகளை ஏமாற்ற, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (Lessons Learned and Re conciliation Commission-LLRC) என்ற ஒரு போலி ஆணையத்தை அமைத்தான். அதைத்தான் இப்போது மனித உரிமைகள் ஆணையம் வழிமொழிந்து கொண்டு இருக்கின்றது.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நல்லிணக்கத்தோடு வாழ முடியுமா?
ஒரு கொலைகாரனும், அவனால் கொல்லப்பட்டவனின் குடும்பத்தாரும் நல்லிணக்கத்தோடு வாழ முடியுமா?
இத்தகைய நல்லிணக்கத்திற்கு நாங்கள் தயாராக இல்லை. இதை எங்கள் மீது திணிக்காதீர்கள்.
தனி இறையாண்மை கொண்ட தமிழ் ஈழம். அதுதான் எங்கள் குறிக்கோள்.
2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்த படுகொலைகளைப் பற்றி விசாரிப்பதற்காக, 2014 ஆம் ஆண்டு ஐ.நா. மன்றம் மற்றொரு விசாரணைக் குழுவை நியமித்தது. பின்லாந்து நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் மார்ட்டி அட்டிசாரி, நியூசிலாந்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்
அஸ்மா ஜகாங்கீர் அம்மையார் ஆகியோர் இதன் உறுப்பினர்கள்.
இந்தக் குழுவையும் அவர்கள் இலங்கைக்கு உள்ளேயே அனுமதிக்கவில்லை. நல்லிணக்கம் குறித்து நமக்கு அறிவுரை சொல்லுகின்ற உலக நாடுகள் இலங்கையின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான போக்கைக் கண்டிக்கவே இல்லை.
இருந்தபோதிலும், பாலச்சந்திரன் படுகொலை, இசைப்பிரியா பாலியல் வன்கொடுமைக் கொலை, எட்டுத் தமிழ் இளைஞர்கள் அம்மணமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை போன்ற அசைக்க முடியாத ஆவணங்களின் அடிப்படையில் இந்தக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.
அதற்குப் பிறகும் கூட, இந்த மனித உரிமைகள்ஆணையம் இப்போது என்ன தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள் தெரியுமா? விடுதலைப்புலிகள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் விசாரிக்க வேண்டுமாம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முதலாக இந்தத் தீர்மானத்தில்தான் இப்படிச் சொல்லுகிறார்கள்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்துக் காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் குறிப்பிடுகிறது. அந்த அமைப்பின் தலைவராக இருப்பது இலங்கைக் குடியரசுத் தலைவர். அதன் முதன்மை உறுப்பினர்களாக இருக்கின்ற இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் கூட்டுக்
குற்றவாளிகளே.
இப்போது அந்த அமைப்பின் தலைவர் பொறுப்பை வகிக்கின்ற சிறிசேனா என்ன சொல்லுகிறார்?
எந்த ஒரு வெளிநாட்டு நீதிபதியும் இலங்கையில் விசாரணை நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லுகிறார். அதாவது, ஆள்தான் மாறி இருக்கிறாரே தவிர, அந்த ஆணவக்குரல் மாறவில்லை.
2015 அக்டோபர் 18 ஆம் நாள் அவர் சொல்லுகிறார்:
இலங்கைப் போரில் போர்க்குற்றவாளிகளின் பெயரை ஐ.நா. மன்றம் வெளியிடாதபடி நான் தடுத்து நிறுத்தி விட்டேன். ஆனால் இப்போது ராஜபக்சே இந்தப் பதவியில் இருந்திருந்தால், ஐ.நா.மன்றம் போர்க்குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட்டு இருக்கும். அதை அவரால் தடுத்து இருக்க முடியாது என்கிறார்.
ஐ.நா. மன்றம் வெளியிட இருந்த போர்க்குற்றவாளிகளின் பட்டியலில், இந்த மைத்திரிபால சிறிசேனா, கோத்தபய ராஜபக்சேவின் பெயர்கள் இருந்ததாகத் தெரிய வருகிறது.
இரண்டாம் உலகப் போரில் இழைத்த கொடுமைகளுக்காக நாஜி தளபதிகள் மீது நூரெம்பர்க் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால், இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் சரத் பொன்சேகாவுக்கு, அந்த நாட்டு இராணுவத்தின் மிக உயரிய விருதான ஃபீல்டு மார்ஷல் விருது வழங்கிப் பெருமைப்படுத்தி இருக்கின்றார்கள்.
இந்தக் கருத்து அரங்கம், இரண்டு தீர்மானங்களை அடிப்படையாகக் கொள்கிறது. ஒன்று, இலங்கையின் வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம்; மற்றொன்று தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம்.
ஐ.நா. பாதுகாப்பு சபை, இலங்கையில் நடந்த தமிழ் இனப் படுகொலைகள் குறித்து பன்னாட்டு நீதிமன்றம் விசாரணை நடத்தப் பரிந்துரைக்க வேண்டும் என விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. 2015 செப்டெம்பர் 16 ஆம் நாள் தமிழகச் சட்டமன்றமும், அதே அடிப்படையில் தீர்மானம்
நிறைவேற்றி இருக்கின்றது.
தமிழ் ஈழத் தாயகத்தை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டு நிற்கிறது. நாள்தோறும் பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. தமிழ் ஈழத்தில் தற்போது 90,000 இளம் விதவைகள் இருக்கின்றார்கள்.
இப்போது இலங்கை அரசு ஒரு விசாரணைக் குழுவை நியமித்து இருக்கிறதாம். அந்தக் குழுவின் தலைவர் சந்திரிகா குமாரதுங்கே.
யார் அந்த சந்திரிகா? அவரும் ஒரு இனப்படுகொலைக் குற்றவாளிதான். அவரது ஆட்சியில்தான் செம்மணியில் 400 தமிழர்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டார்கள். அந்தப் புதைகுழிகளைத் தோண்டி எடுத்து விசாரிக்க வேண்டும் என்று, 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நான் ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணையத்தின் துணைத்தலைவர் ஹோர்ஸ்ட் அவர்களைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்தேன். அதன்படி, கொசோவா நாட்டில் புதைகுழிகளைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்த அதே குழுவை அவர் செம்மணிக்கு அனுப்பினார்.
அப்படிப்பட்ட சந்திரிகா ஒரு குழுவுக்குத் தலைவர். மற்றொருவர் மேக்ஸ்வெல் பரணகம. இராஜபக்சேவால் நியமிக்கப்பட்டவர். அவர் இலங்கை இராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்களை மேலுக்கு ஒப்புக்கொண்டு விட்டு, முழுக்கமுழுக்கப் புலிகள் மீது பழி சுமத்துகிறார்.
தமிழர்கள், சிங்களர்களின் நாட்டைத் துண்டாடும்படிக் கேட்கவில்லை. 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களிடம் இழந்த தங்கள் தாயக மண்ணின் உரிமையை, தன்னாட்சியை மீட்பதற்காகப் போராடுகிறார்கள்.
1956,57,65 ஆம் ஆண்டுகளில் தமிழர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் இலங்கை அரசு குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டு விட்டது.
எனவேதான், 1976 ஆம்ஆண்டு தந்தை செல்வா அவர்கள் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றிய தீர்மானத்தில் தனித் தமிழ் ஈழமே தீர்வு என அறுதியிட்டுக் கூறி இருக்கின்றார். இந்தப் பின்னணியில்தான், 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மசா சூசெட்ஸ் மாநிலச் சட்டமன்றம் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்து, தனித் தமிழ் ஈழமே தீர்வு எனத் தீர்மானம் நிறைவேற்றியது; 1979 மே 22 ஆம் நாளை, ஈழம் நாள் என, அம்மாநில ஆளுநர் எட்வர்டு ஜே. கிங் அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டாடினார்கள்.
இந்தக் கருத்தரங்கத்தின் வாயிலாக, கீழ்காணும் கோரிக்கைகளை நாம் வலியுறுத்துகின்றோம்.
1. தமிழ் ஈழத் தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும்.
2. ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள், சித்திரவதைகள் நிறுத்தப்பட வேண்டும்.
3. உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்த தமிழர்கள், அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீளக் குடி அமர்த்தப்படவேண்டும்.
5. இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்படுகின்ற தமிழர்களை விடுவிக்க வேண்டும்.
6. செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் தமிழ் ஈழப் பகுதிக்குள் தங்கு தடையின்றிச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
7. தமிழ் ஈழத்தில் சிங்களர்களைக் கொண்டுவந்து குடியேற்றும்முயற்சிகளை நிறுத்த வேண்டும்.
இதற்காக, அறவழியிலான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ் ஈழம் அமைவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்; உலகின் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்ற ஈழத்தமிழர்கள் அனைவரும் அந்தப் பொது வாக்கெடுப்பில் பங்குபெற வழிவகை செய்ய
வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துவோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment