Wednesday, November 11, 2015

போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்குக:- தமிழக அரசுக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கனமழை காரணமாகவும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கில் வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

புயல், மழை குறித்து வானிலை மையம் முன்னெச்சரிக்கை செய்தும் தமிழக அரசு உரிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்காததால்தான் இந்த அளவு உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் மெத்தனப் போக்கை மக்கள் நலக்கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்ச ரூபாய் வழங்கவேண்டும் எனவும், பயிர் சேதமடைந்த நிலங்களின் பரப்பைக் கணக்கீடு செய்து நெல்லுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வாழை, கரும்புக்கு ஒன்றரை இலட்சமும் வழங்கவேண்டுமெனவும், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா இருபதாயிரம் ரூபாய் வழங்கவேண்டுமெனவும் பிற வீடுகளுக்கும் சேதத்தை மதிப்பிட்டு இழப்பீடு வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். இறந்துபோன மாடு ஒன்றுக்கு 50 ஆயிரம், ஆட்டுக்கு 10 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டுகிறோம்.

மழை வெள்ளத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளான கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை வெள்ளம் பாதித்த மாவட்டங்கள் என அறிவித்து, அந்த மாவட்டங்களில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தின்கீழ் ஒரு மாதத்துக்கு வேலை வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும்போது தமிழ்நாட்டிலேயே கடலூர் மாவட்டம்தான் அதிகம் பாதிக்கப்படுகிறது. அதைத் தடுப்பதற்கு நிரந்தர நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய்ப் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை மூலம் விரைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அந்தப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நலக் கூட்டணியின் தொண்டர்கள் ஏற்கனவே நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அந்தப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment