Tuesday, March 29, 2016

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க வேண்டுகோளை ஏற்று ஏப்ரல் 5 ரயில் மறியல் போராட்டத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி பங்கேற்கும் என ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவிப்பு!

உலக மக்கள் அனைவரின் பசி போக்கிட, உழைத்து உணவு படைத்திடும் உழவர் பெருமக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காததால் நட்டப்பட்டு வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில், கூட்டுறவு மற்றும் வங்கிகளில் தாங்கள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு மௌனம் சாதிக்கின்றது.  கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகளின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.

இதைக் கருத்தில் கொண்டு அமையப் போகும் மக்கள் நலக் கூட்டணி அரசு, விவசாயிகளின் கூட்டுறவு மற்றும் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்யும் என ஏற்கனவே அறிவித்துள்ளோம். 

உல்லாச வாகனங்கள் வாங்க பெறும் வங்கிக் கடனுக்கு வட்டி வீதம் 7 விழுக்காடு தான். ஆனால் டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்களுக்கான வங்கி கடனுக்கு வட்டி விகிதம் 14 விழுக்காடு எனும் அவல நிலையிலும், பெற்ற கடனை பெரும் பகுதியை செலுத்திவிட்டு மீதமுள்ள இரண்டு தவணைகள் மட்டும் பாக்கி வைத்திருந்த தஞ்சை விவசாயி பாலனின் டிராக்டரை ஜப்தி செய்ததையும், அவர் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு காரணமானவர்களையும், ஜப்தி நடவடிக்கையில் கடைபிடிக்கப்பட்ட அவலம் தாங்காமல் விவசாயி அழகரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும், மேற்கொண்டு ஜப்தி நடவடிக்கையை நிறுத்தக் கோரியும், ஏப்ரல் 5 ஆம் தேதி, தமிழகம் எங்கிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததோடு, அந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தரவேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் அதனுடைய தலைவர்  தெய்வசிகாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, ஏப்ரல் 5  இல் நடைபெறும் இரயில் மறியல் போராட்டத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் - மக்கள் நலக் கூட்டணி ஆதரவு வழங்கும் என்பதோடு, அந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment