Monday, March 21, 2016

ஈழத் தமிழ் அகதியை கொலைக்களத்துக்கு அனுப்புவதா? மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ கண்டனம்!

இந்தியாவில் இலங்கை கொலைகார அரசின் ஆதிக்கம்தான் இன்னும் செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தயன்ராஜ் என்ற ஈழத் தமிழ் இளைஞர் மீது இலங்கையில் சில குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று மைத்ரிபால சிறி சேனாவின் சிங்கள அரசு, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு ஜெயலலிதா அரசும் உடந்தையாகச் செயல்படுகிறது.

ஈழத் தமிழ் இளைஞர் தயன்ராஜ் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி, அவரை சித்ரவதை செய்து உயிரைப் பறிக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது. தன்னை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தி, திருச்சி முகாமில் ஐந்தாவது நாளாக அவர் உண்ணாவிரத அறப்போர் நடத்துகிறார். அவரது மனைவியும், மகளும் மண்டபம் அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

முன்னைய மத்திய அரசைப் போலவே தற்போதைய நரேந்திர மோடி அரசும் கொலைகார சிங்கள அரசுடன் கைகோர்த்துக்கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிராக வஞ்சகம் செய்கிறது. இதற்கு ஜெயலலிதா அரசும் ஆதரவாகச் செயல்படுவதோடு, மத்திய அரசின் உளவுத்துறையும், தமிழக அரசின் உளவுத் துறையும் கூட்டுச் சதி செய்கின்றன. ஈழத்து இளைஞர் தயன்ராஜை இலங்கைக்கு அனுப்புகின்ற முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி வெடிக்கும் என எச்சரிக்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment