Monday, March 7, 2016

பெண்மை வாழ்க! உலக மகளிர் நாள் - வைகோ வாழ்த்து!

சங்கத் தமிழகத்தில் கல்வியில் வீரத்தில் அறிவாற்றலில் முத்திரை பதித்த மகளிர் மீது இடைக்காலத்தில் பல்வேறு அடிமைத் தளைகள் பூட்டப்பட்டன. அவைகளை அடித்து நொறுக்கி, பெண்களை வீரத் தமிழச்சிகளாக உயர்த்திட்ட பெருமை திராவிட இயக்கத்தைச் சாரும்.

வாரிசு உரிமை, மணவிலக்கு, மறுமணம், வரதட்சணை ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு என அடுக்கடுக்கான மகளிர் நலச் சட்டங்களை இயற்றிய திராவிட இயக்க ஆட்சிதான், தேர்தலில் வாக்கு அளிக்கவும், வேட்பாளர்களாகப் போட்டியிடவும் பெண்களுக்கு வாய்ப்புத் தந்து பெருமைப்படுத்தியது.

இன்றைய 21 ஆம் நூற்றாண்டு கணினி யுகத்தில் பெண்கள் எல்லா நிலைகளிலும் முன்னேறிப் பாய்ந்து செல்வதைக் கண்டு அகிலம் வியக்கின்றது.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்,
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்,
எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்.

என்ற முண்டாசுக் கவிஞனின் முழக்கம் உலகெங்கும் எதிரொலிப்பதன் அடையாளம்தான் மார்ச் 8 உலக மகளிர் நாள் ஆகும்.

ஆயினும் கூட, இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இழுபறியாக நீடித்துக் கொண்டு இருப்பது வேதனை அளிக்கின்றது. மது அரக்கனின் தாக்குதலால் பெண்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிர வைக்கின்றன. அலுவலகங்களில், அரசியலில் மட்டும் அன்றிச் சகல துறைகளிலும் பெண்கள் பல்வேறு இடையூறுகளைச் சந்திப்பதை நாம் பார்க்கின்றோம்.

இந்த நிலை மாற வேண்டும். தாயாக, சகோதரிகளாக, மகளாகப் பாவிக்கும் நிலை வர வேண்டும்; அவர்களுக்குச் சம வாய்ப்புகளும், சம உரிமைகளும் கிடைத்திட வேண்டும்.

‘பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா’ என்ற பாரதியின் வாக்குக்கு ஏற்ப, புது யுகத்தை பெண்மை யுகத்தை தாய்மை யுகத்தை அடைவோம் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துவதில் மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கின்றேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment