Monday, March 7, 2016

ரவீந்திரன் தற்கொலை; உலக அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர்! வைகோ வேதனை!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் உச்சப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், வருவாய் ஆய்வாளரின் மிரட்டலால் ரவீந்திரன் என்ற ஈழத்தமிழர் அலைபேசிக் கோபுரத்தில் ஏறிக்குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றது.

ரவீந்திரனின் மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றாரா என்பதைச் சரிபார்க்க வேண்டிய அதிகாரி, ‘எங்களிடம் சொல்லாமல் எப்படி வெளியே போகலாம்?’ என அதை ஒரு கௌரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு வசை பாடியது மனிதாபிமானம் அற்ற செயல்.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் அடைக்கலம் பெற்ற ஈழத்தமிழர்களை அந்த நாடுகள் உரிய மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்துகின்ற நிலையில், தாய்த்தமிழகத்தில் அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கருதி அதிகாரிகள் அச்சுறுத்தி மிரட்டுகின்ற கொடுமைகள் எல்லை மீறிச் சென்ற நிலையில்தான், ரவீந்திரன் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழ் அகதிகள் முகாம்களை நான் பார்வையிட்டு, அங்கே உள்ள நிலைமைகளை விளக்கி அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அங்கே அவர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்து விட்டு, உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தஞ்சம் கேட்டுத் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களைத் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கருதுகின்ற அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும். இதுகுறித்துத் தமிழக அரசு உரிய வழிகாட்டுதலை அறிவிக்க வேண்டும்.

தமிழக அரசு அதிகாரி ஒருவரின் கெடுபிடியால் ஈழத்தமிழர் ஒருவரின் உயிர் பறிபோனது என்ற செய்தி, உலக அளவில் தமிழகத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கின்றது. ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற நிலை மாறி, வந்தாரைச் சாக வைக்கும் தமிழகம்’ என்ற அவப்பெயர் ஏற்பட்டு இருக்கின்றது.

அந்த அவப்பெயரை நீக்குகின்ற வகையில் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்திட வேண்டும். வருவாய் அதிகாரி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரவீந்திரனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளித்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment