Sunday, May 10, 2015

ஆவடி பாதுகாப்புத் துறைத் தொழிற்சாலைகளில் பணியாளர் தேர்வுகளில் முறைகேடு! வைகோ கண்டனம்!

ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலை (HVF), படை உடைத் தொழிற்சாலை (OCF) மற்றும் எஞ்சின் தொழிலகம் (EF) உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணிக்கு ஆட்களை எடுப்பதில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஜூலை 2010-இல் வாகனத் தொழிற்சாலையில் நடைபெற்ற தொழிற் பழகுநர் (Trade-Apprentice) பயிற்சிக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகத் தகவல் வந்தபோது “தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் இதற்காக விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் கோரிப் பெறப்பட்டன.
98 பேர்களது விண்ணப்பங்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும், படை உடைத் தொழிற்சாலை, எஞ்சின் தொழிலகங்களுக்கு விண்ணப்பித்தவர்களை கனரக வாகனத் தொழிற்சாலைக்குத் தேர்வு செய்து இருப்பதும் தெரிய வந்தது. எனவே, ஊழல் தடுப்பு ஆணையருக்கு ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாகச் சில விளக்கங்கள் கேட்டு, கனரக வாகனத் தொழிற்சாலையின் தலைமையகத்தில் இருந்து (AVHQ), செங்கொடி சங்கத்தின் தலைவர் ஆவடி அந்திரிதாஸ் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்திற்கு, கடந்த 14.11.2014 அன்று முறையாக பதில் கடிதம் எழுதியும், இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கனரக வாகனத் தொழிற்சாலையில் Semi-skilled Technician பணிக்கு 399 பேர்களைத் தேர்ந்து எடுப்பதற்காக கடந்த 01.03.2015 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்று இருக்கின்றன.
அதில் தெரிவு செய்யப்பட்டவர்களுள் 45 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அதுபோலவே, கடந்த 12.04.2015 அன்று நடைபெற்ற தொழிற் பழகுநர் பயிற்சிக்கான எழுத்துத் தேர்வில், வட மாநிலங்களில் இருந்து பங்கேற்றவர்கள் தேர்வு மையங்களில் “ஆள் மாறாட்டம்” (Impersonation) நடந்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அதில் மூன்று தேர்வு மையங்களில் இரண்டு மையங்களில் சிலரைப் பிடித்தபோதிலும், வட மாநில அதிகாரிகளின் அழுத்தத்தால் அவர்களை விடுவித்து விட்டார்கள்.
இது சம்பந்தமாகப் பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டன; தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.
எனவே, இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என செங்கொடி சங்கத்தின் சார்பில், கனரக வாகனத் தொழிற்சாலையின் பொது மேலாளர், தலைவர் OFB, DIR/IR கொல்கத்தா ஆகியோருக்குக் கடந்த 15.04.2015 அன்று புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சங்க நிர்வாகிகள் கடந்த 24.04.2015 அன்று கனரக வாகனத் தொழிற்சாலையின் பொது மேலாளரைச் சந்தித்து நிலைமைகள் மோசம் அடைவதற்குள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியபோது, ‘தேர்வு செய்யப்பட்டவர்களின் விண்ணப்பத்தில் உள்ள கைரேகையினையும், நுழைவுத் தேர்வின்போது பெறப்பட்ட கைரேகையினையும் நிபுணர்கள் மூலம் ஒப்பீடு செய்து, அதில் வித்தியாசம் இருந்தால் உடனே சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக’ எழுத்துமூலமாக் கடிதம் கொடுத்து இருக்கிறார்.
அவ்வண்ணமே 02.05.2015 அன்று நடைபெற்ற சரிபார்த்தலின்போது வட மாநிலத்தைச் சேர்ந்த (1) பிரணப்குமார் (2) சஞ்சீவ் குமார் மற்றும் (3) சந்தன்குமார் ஆகியோர் பிடிபட்டு கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். அதைக் கண்ட பிற வட மாநிலத்தவர்கள் ஓடி விட்டார்கள்.
பொதுவாக, 1983 ஆம் ஆண்டு பணிக்கூடச் சட்டத்தின்படி (Workshop Act) பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு ஆட்களை எடுக்கும்போது, 50 விழுக்காடு இடங்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள தகுதியுள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை தரப்படுவது காலம் காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், 2010-இல் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
“பொது அறிவிப்பாணை” மூலம் பணிக்கு ஆட்கள் எடுப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்பது அனைத்துச் சங்கங்களின் கோரிக்கை ஆகும்.
வட மாநிலங்களில் உள்ள பாதுகாப்புத் துறைத் தொழிற்சாலைகளில் இவ்வாறு பணிக்கு ஆட்களை எடுக்கும்போது மற்ற மாநிலங்களில் இருந்து எழுத்துத் தேர்வு எழுதச் சென்றவர்களைத் தேர்வு எழுத விடாமல் தடுத்து, அராஜகமாகத் தாக்கி விரட்டி உள்ளனர்.
எனவே, மேற்கூறிய முறைகேடுகள், ஆள் மாறாட்டங்களைக் கண்டறிய உடனே ஓர் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும், அதுவரை பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை குறிப்பாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்


No comments:

Post a Comment