இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை போர்க்குற்ற விசாரணை மன்றம் அமைத்திடுக; தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்குப் பொது வாக்கெடுப்பு நடத்திடுக!
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களின் ஆய்வுக்கு, வைகோ வேண்டுகோளை ஐ.நா. மன்றம் சுற்று அறிக்கையாக முன்வைத்துள்ளது!
ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டம், பிப்ரவரி 27 ல் தொடங்கி, மார்ச் 24 ஆம் நாள் நிறைவுபெற்றது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் ஆண்டு அறிக்கை மற்றும் மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் ஐ.நா.பொதுச்செயலரின் ஒப்புதலோடு, அந்தக் கூட்டத்தின் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் விடுத்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஐ.நா. மன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக பொருளாதாரக் குழுவின் 1996/31 தீர்மானத்தை ஒட்டிய, திரு வைகோ அவர்களின் கோரிக்கை விண்ணப்பம் குழு உறுப்பினர்களின் ஆய்வுக்காக சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோ விடுத்த கோரிக்கை விண்ணப்பத்தின் சுருக்கம், அந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
வைகோவாகிய நான், இந்தியாவில், ஏழரைக் கோடித்தமிழ் மக்கள் வசிக்கின்ற தமிழ்நாட்டில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகிக்கின்றேன். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 24 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ள நான், தமிழ் ஈழம் அமைவதற்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டு வருகின்றேன்.
எங்கள் தொப்புள் கொடியாகிய, இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்கள் உறவுகள் தொடர்கின்றன.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழர்களே அந்த நாட்டின் பூர்வகுடி மக்கள் ஆவர். அவர்கள் பல ஆண்டுகளாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
எங்களுடைய வேதனையும், கண்ணீரும் கவனிப்பார் இன்றிப் புறக்கணிக்கப்பட்டு விட்டது. இன்று உலகில் தமிழர்கள் அநாதைகள் ஆக்கப்பட்டு விட்டோம்.
கடுந்துயரோடும் தாங்க முடியாத வேதனையோடும், இந்தக் கோரிக்கை விண்ணப்பத்தினைத் தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
என்றேனும் ஒரு நாள், எங்களுடைய தாய்மார்கள், சகோதரிகளின் அழுகையும் கண்ணீரும், வயது முதிர்ந்தோர் குழந்தைகளின் வேதனையும், உலக நாடுகளின் மனசாட்சியின் கதவைத் தட்டித் திறக்கும்; உதவி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரையிலும், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஈழத்தமிழர்கள் ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்பட்டபோது, உலக நாடுகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதற்காக, அன்னைத் தமிழகத்தின் 19 இளைஞர்கள், தங்கள் உடலுக்கு நெருப்பு வைத்துத் தங்களைக் கருக்கிக் கொண்டு மடிந்தனர்.
ஈழத்தமிழ் மக்களின் தனிப்பெரும் தலைவர், ‘ஈழத்துக் காந்தி’ என்று அழைக்கப்படுகின்ற தந்தை செல்வா என்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் தலைமையில் தமிழர்கள் ஒருங்கிணைந்தனர்.
இலங்கை அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைகளை எதிர்த்து, உத்தமர் காந்தி அடிகளின் வழியில் ஈழத்தமிழர்கள் அறப்போராட்டங்களை நடத்தினர்; உண்ணாநிலை, ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் அணி திரண்டனர்.
இலங்கையின் இனவெறி அரசு, காவல்துறையைக் கட்டவிழ்த்து விட்டது; அமைதிவழி அறப்போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்கள் மீது குண்டாந்தடிகள் கொண்டு தாக்கியது; தமிழர்களின் மண்டைகள் பிளக்கப்பட்டன; பல தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அடுத்த கட்டமாக, இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழித்து ஒழிக்கின்ற வகையில் இனப்படுகொலைத் தாக்குதல்கள் தீவிரம் அடைந்தன. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள், கோவில்கள், தேவாலயங்கள் சிங்களக் காடையர்களால் தகர்த்துத் தரை மட்டமாக்கப்பட்டன. காவல்துறையும், இராணுவமும் இந்தத் தாக்குதலுக்குத் துணையாக இருந்தன.
சிங்களர்கள் எப்போதும் தமிழர்கள் மீது வெறுப்புணர்வைக் காட்டியதுடன், தமிழர்களின் சமய, பண்பாட்டுத் தளங்கள் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தனர்.
வட்டுக்கோட்டைத் தீர்மானம்; ஈழத்தமிழர்களின் மேக்னா கார்ட்டா:-
1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் வரலாற்றுத்திருப்புமுனையாக அமைந்தது. தந்தை செல்வா தலைமையில் வட்டுக்கோட்டை பண்ணாகம் என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனைத்துத் தமிழ் அமைப்புகளும் பங்கேற்றன. தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து, தங்களுக்கென ஒரு தனி நாட்டை அமைப்பது எனத் தீர்மானித்தனர்.
அதன்பிறகு, சிங்கள இனவெறி அரசு, தமிழர்களுக்கு எதிராக இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அறப்போராட்டங்களில் பங்கேற்றோரின் உடல்களைக் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன; பயனைட்டுகளால் குத்திக் கிழித்தனர்.
தமிழர்களின் உடைமைகளைக் கொள்ளை இடுவது, சொத்துகளைச் சூறையாடுவது, பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் அன்றாட நிகழ்வுகள் ஆகின.
பச்சிளம் குழந்தைகளைக் கொதிக்கின்ற தாரில் தூக்கி வீசினர். நெஞ்சைப் பிளக்கும் இத்தகைய கொடூரச் செயல், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பார்வதி அம்மையாரின் 15 வயது மகன் பிரபாகரன் நெஞ்சில் ஆவேசக் கனலை மூட்டியது; கொடுமைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார். உலகின் பல நாடுகள், ஆயுதப் போராட்டங்களின் வழியாகவே, அடிமைத்தளையில் இருந்து விடுபட்டன என்பது உலகம் அறிந்த உண்மை ஆகும். அந்த வழியில், முன் எப்போதும் கண்டிராத ஒரு வீரஞ்செறிந்த ஆயுதப் போராட்டத்தைப் பிரபாகரன் முன்னெடுத்தார். தமிழ் இனத்தின் தன்னிகர் இல்லாத் தலைவர் ஆனார்.
தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. தமிழர்களின் கருவூலமாகத் திகழ்ந்த புகழ் பெற்ற யாழ்ப்பாண நூலகத்தை 1981 ஆம் ஆண்டு தீ வைத்து எரித்து அழித்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம், கோரமான தமிழ் இனப்படுகொலை அரங்கேறியது. பல்லாயிரக்கணக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உச்சகட்டமாக, குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட, வெளிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 58 தமிழர்கள், கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இந்தப் படுகொலைகள், உலகம் முழுமையும் வாழ்கின்ற தமிழர்களின் உள்ளங்களில் ஆவேசத்தீயாக எழுந்தது.
இந்தப் பின்னணியில், பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, தமிழ் இளைஞர்களுக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இராணுவப் பயிற்சி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கியது. அரசியல் தொலைநோக்கோடு, தமிழ் ஈழம் அமைத்திட பிரதமர் இந்திரா காந்தி விழைந்தார். எதிர்பாராத வகையில் ஆனால் 1984 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது ஈழத்தமிழர்களுக்குப் பேரிடியாக அமைந்தது.
திம்பு பேச்சுவார்த்தை:-
1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்திய அரசின் ஏற்பாட்டில், இலங்கை அரசுக்கும், தமிழர் குழுக்களுக்கும் இடையில், பூடான் நாட்டின் தலைநகர் திம்புவில் அமைதிப்பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
கீழ்காணும் நான்கு அடிப்படைக் கொள்கைகளை மையமாகக் கொண்டே, ஈழத்தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனத் தமிழர் குழுக்கள் வலியுறுத்தின.
1. ஈழத்தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம்
2. தமிழர்களுக்கான தாயகம், அவர்களது இறையாண்மை
3. தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்
4. தமிழர்கள் அனைவருக்கும் குடி உரிமை
ஆனால், இலங்கை அரசு இந்தக் கொள்கைகளை ஏற்கவில்லை. எனவே, பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவுற்றன. தமிழ் ஈழத்தை அமைப்பதற்கான இயக்கத்தை உலகம் முழுமையும் வாழ்கின்ற தமிழர்கள் ஆதரித்தனர்.
இலங்கையில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. தமிழர்களுக்குப் போலியான வாக்குறுதிகளை வழங்கிய சந்திரிகா குமாரதுங்க, தமிழர்களுடைய ஆதரவுடன் 1994 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் குடியரசுத்தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.
உலகின் பல நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்தார். அந்த ஆயுதங்களைக் கொண்டு, இலங்கை இராணுவம் தமிழர்களின் தளங்களைத் தாக்கியது. அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஐந்து இலட்சம் தமிழர்கள் தங்கள் வீடு வாசல்களைக் கைவிட்டு வெளியேறினர். அவர்கள் காடுகளுக்குள் துரத்தப்பட்டனர். புகலிடம் தேடி அலைந்தனர்.
அந்த வேளையில் போப் இரண்டாம் ஜான் பால் அவர்கள், பன்னாட்டுச் சமுதாயத்துக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு ஆதரவுக் கரம் நீட்ட அழைப்பு விடுத்தார்.
அதேபோன்று, அப்போதைய ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளர் புத்ரோஸ் புத்ரோஸ் காலி அவர்களும் வேண்டுகோள் விடுத்தார்.
அமைதிப் பேச்சு:-
2002 ஆம் ஆண்டு, நோர்வே நாட்டின் ஒருங்கிணைப்பின் பேரில், தாய்லாந்து நாட்டில் அமைதிப் பேச்சுகள் நடைபெற்றன. இதில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பினரும், இலங்கை அரசுத் தரப்பும் பங்கேற்றன. ஆனால், இலங்கைக் குடியரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க, அமைதிப் பேச்சுகளைக் குலைத்தார். அதன்பின், இலங்கையின் விமானப்படை விமானங்கள் தமிழர்கள் மீது குண்டுகளை வீசின.
2006 ஆகஸ்ட் 8 ஆம் நாள், பிரெஞ்சு நாட்டுத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட சுனாமி மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டுஇருந்த 17 தமிழ் தன்னார்வத் தொண்டர்களை, இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றது. ஆஸ்திரேலிய அரசுதான் இந்தப் படுகொலைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
அடுத்து ஒரு மிகக் கொடூரமான தாக்குதல் அரங்கேறியது. 2006 ஆகஸ்ட் 14 ஆம் நாள், தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்த ‘செஞ்சோலை’ மீது இலங்கை இராணுவம் குண்டுவீசித் தாக்கியதில், 61 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்; 170 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட, இலங்கை நாடாளுமன்றத்தின் நான்கு தமிழ் உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்தால் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழ்நாட்டில் முத்துக்குமார் என்ற இளைஞன் நெருப்புக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தான். அவன் எழுதிய மரண சாசனத்தில் விடுத்த வேண்டுகோள், தமிழகத்தின் இளைஞர்கள் மாணவர்களைத் தட்டி எழுப்பியது; ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கவும் இனவாத சிங்கள அரசைத் தண்டிக்கவும் உறுதி பூண்டனர்.
ஈழத்தமிழ் இனப்படுகொலை குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. மன்றம் மூவர் குழு ஒன்றை அமைத்தது.
1. இந்தோனேசிய நாட்டின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் திரு மார்சுகி தாருஸ்மன்
2. அமெரிக்காவின் முன்னாள் துணை அட்டர்னி ஜெனரல் திரு ஸ்டீவன் ராட்னர்
3. தென்னாப்பிரிக்காவின் முன்னணி வழக்குரைஞர், மனித உரிமை ஆர்வலர் திருமதி யாஸ்மி சூகா ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றனர்.
இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே, இந்தக் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்தும், ஐ.நா. மன்றத்தின் அறிவிப்பைக் கண்டித்தும் பேசினார்.
ஐ.நா. மன்றத்திற்கு எதிராக வன்முறைப் போராட்டங்களை இலங்கை அரசே தூண்டிவிட்டது; ஐ.நா. பொதுச்செயலாளரை இழிமொழிகளில் தரக்குறைவாக வசை பாடினர்.
ஐ.நா. மன்றத்தின் மூவர் குழு இலங்கைக்குள் நுழையவும் அனுமதி தரவில்லை. ஆனால், பன்னாட்டு வற்புறுத்தல்களின் காரணமாக நீண்ட தாமதத்திற்குப் பிறகு அனுமதித்தனர்.
2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் நாள், ஐ.நா. மூவர் குழு தனது பணிகளைத் தொடங்கியது; 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் தங்களது ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தது;
2011 ஏப்ரல் 25 ஆம் நாள் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்த அறிக்கையை வெளியிட்டார்.
ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக எங்களது கோரிக்கைகள்:-
1. தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
2. பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. அரசு நடத்தும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு, அவர்களுடைய வாழ்விடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும். அவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்.
4. ஐ.நா. மன்றத்தால் போர்க்குற்ற விசாரணை மன்றம் அமைக்கப்பட்டு, இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட, இனப்படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் விசாரிக்கப்பட வேண்டும்.
5.பன்னாட்டுப் பார்வையாளர்களின் கண்காணிப்பில், இலங்கையில் ஈழத்தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகளில், தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; தமிழ் ஈழத்தில் இருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே பொதுவாக்கெடுப்பில் பங்கேற்க வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ வேண்டுகோள் விடுத்து இருப்பதாக, ஐ.நா. செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
இந்த செய்தியை மதிமுக தலைமை நிலையமான தாயகம் 28-04-2017 அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி