சிறைவாழ்க்கை:-
சிறை வாழ்க்கை எனக்குப் பழகிப் போனதாகும். இங்கே இந்தத் தொகுப்பில் 28 பேர் சிறைவாசிகள் என்னையும் சேர்த்து. 17 பேர் ஓரளவு மன நோய்க்கு ஆளானவர்கள். அவர்கள் சாப்பிடும் நேரம் தவிர முழு நேரமும் கொட்டடியில் பூட்டப்படுகின்றார்கள். வேலூர் சிறை அறையை விடச் சிறிய அறைதான். ஒரு கட்டில் இருக்கிறது. எழுதுவதற்காக சிறிய மேசை, நாற்காலி உள்ளது. அறையில் டி.வி. கிடையாது. தற்போது சிறைச்சாலைகளில் அனைவருக்கும் மின்விசிறி தரப்பட்டு விட்டது. சிறையில் நான் முட்டை சாப்பிடுது இல்லை. மூன்று நாள் அசைவம் அனுமதி உண்டு. அதையும் நான் தவிர்த்து விட்டேன். காலையில் உப்புமா. பகலில் சோறு சாம்பார், ஒரு கூட்டு, ரசம், மோர். இரவில் மூன்று சப்பாத்தி. பழகிவிட்டது.
வேலூர் சிறை அறையை விட சிறிய அறைதான்.
தொலைக்காட்சி கிடையாது.
நான் முட்டை சாப்பிடுவது இல்லை. மூன்று நாள் அசைவம்; அனுமதி உண்டு.
அதையும் தவிர்த்து விட்டேன்.
மாலை 6 மணிக்குக் கொட்டடியைப் பூட்டிக் காலை 6 மணிக்கு திறப்பார்கள். நான் 50 நிமிடம் நடைபயிற்சி செய்வேன். இத்தொகுப்பு சுற்றுச்சுவர் ஓரமாகவே நடக்கலாம். இரண்டு ஈரானியர்கள். ஒருவர் ருசியாக்காரர். இரண்டு பேர் பம்பாய் வாசிகள். நெல்லை மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியம் வன்னிக் கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நம் இயக்கத்தின் தூணாக விளங்கும் பொதுக்குழு உறுப்பினர் வேலுச்சாமியின் நெருங்கிய உறவுக்கார இளைஞர் அமிர்தராஜ் - சிறப்புக் காவல்படையில் பணியாற்றுகிறவர் - டில்லி திகார் சிறைக் காவலராக 5 ஆண்டுகள் பணி - பின்னர் சென்னைக்கு மாற்றம். “மது போதையில் நால்வர் (காவல்துறையைச் சேர்ந்தவர்கள்) இந்தத் தம்பியைக் கொலை செய்ய முயன்றபோது அவர்களை எதிர்த்துப் போராடியதில் ஒருவன் இறந்து விட்டான். கொலைக்குற்றம் சாட்டப்பட்டதால் மனம் உடைந்த அந்தத் தம்பிக்கு தைரியம் ஊட்டியுள்ளேன்.
சிறைக்கு யாரும் என்னை நேர்காணல் பார்க்க வர வேண்டாம் என்று நமது அவைத்தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் கூறி விட்டேன். ஒருவரைப் பார்த்தால் அனைவரையும் பார்க்க வேண்டும். வருகிறவர்களுக்கும் சிரமம். என் கொட்டடிக்கும் நேர்காணல் அறைக்கும் நான் அலைவதற்கே நேரம் போதாது. தினமும் மாலை 4.30 மணிக்கு நமது சட்டத்துறைச் செயலாளர் உள்ளிட்ட நான்கு வழக்கறிஞர்கள் பெயரை மட்டும் எழுதிக் கொடுத்து உள்ளேன். நேர்காணலுக்கு - தகவல் தெரிந்து கொள்ள - அனுப்பி வைக்க.
“சாத்தான் வேதம் ஓதுகிறது!”
தமிழ்நாட்டு அரசியலில் பல காட்சிகள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களம் அனைத்திந்திய பார்வைக் களம் ஆயிற்று. அண்ணா தி.மு.க.வில் இரு பிரிவினர் தங்கள் தரப்பு வாதங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் முன் வைத்தனர். புரட்சித்தலைவர் தேர்ந்தெடுத்த இரட்டை இலைச் சின்னம் யாருக்கு உரியது என்பதே மையக் கேள்வியாகும். நாம் எந்தத் தரப்புக்கும் ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை.
இடைத்தேர்தல் குறித்து நான் ஏன் கருத்துத் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். தமிழக அரசியலைப் போல் கேடுகள் மலிந்த நிலை வேறு எங்கும் இல்லை. நல்லவர்களையும், நாணயமானவர்களையும், நேர்மையானவர்களையும் களங்கப் படுத்தி - அரசியலில் அனைவரும் அயோக்கியர்கள் என்ற கருத்தைத் திணிக்க அக்கறையுள்ள சக்திகளை “சமூக வலைதளம்” என்ற இன்றைய காலக்கண்ணாடி பிரதிபலிக்கின்றது.
‘நல்லவன்’ என்று கருதப்படுவோனையும் கேடானவன் என்று காட்ட முயலும் வக்கரித்த மனம் கொண்டோர் ஒரு பக்கம்; எந்தக் கவசம் ஒருவனைக் காக்கிறதோ அதனையே உடைத்து விட்டால் பின்னர் களத்தில் வீழ்த்துவது சுலபம் என்ற கணக்குப் போட்டுப் பணத்தை வாரி இறைத்து, “லைக்”குகள், “மீம்ஸ்”கள் போடுவதற்கே தனித்திட்டம் தீட்டிச் செயல்படும் வீணர் கூட்டம் ஒரு பக்கம்.
“காவேரி மருத்துவமனைக்குத் தன் தகப்பனைப் பார்க்க வருவான் என்று ஊகித்து இரண்டு நாட்கள் அவசியம் இல்லாத நிகழ்ச்சிகளை நாமக்கல்லிலும், நாகையிலும் (அண்ணன் கோ.சி. மணி அவர்களுக்கு இரங்கல் கூட்டம் அவர் இறுதிச் சடங்கில் நடத்த வேண்டாம் என்று தடை செய்தவர்) ஏற்பாடு செய்து கொண்டு, ‘வைகோ வருவான்; செருப்பால் அடியுங்கள், கல்லால் அடித்துத் துரத்துங்கள்’ என்று ஓரிரு கைக்கூலிக் கைத்தடிகள் மூலம் சில போக்கிரிகளைக் கொண்டு அராஜகம் நடத்த வைத்து விட்டு, அடுத்த பத்தாம் நிமிடம் ‘வருத்த அறிக்கை’ தரும் மேதாவி கட்டளையிட்டால் ‘புத்திரன்கள்’ முகநூல், டுவிட்டரில் விஷத்தைக் காக்குவார்கள்”
“சிறுதாவூர் பங்களாவில் இரண்டு கன்டெய்னர்கள், கோடானுகோடி கள்ளப் பணம். கலெக்டர், எஸ்.பி.யை நம்பாதே - மத்திய அரசே, தேர்தல் ஆணையமே உடன் நடவடிக்கை ஏன் இல்லை?” என்று முதல் குரல் எழுப்பியவன் இந்த வைகோ என்பதை நாடு அறியும். காசு வாங்கிக் கொண்டு எழுதும் ‘மீம்ஸ்’ பாய்சுக்குப் புரியாது.
“சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு (Secret Ballot) என்பது ரகசிய வாக்கு அல்ல என்று கடந்த கால நிகழ்வுகளை, நாடாளுமன்ற நிகழ்வுகளை நிரல்படுத்தி அறிக்கை தந்தேன்.
இந்த உண்மை தெரிந்தும் பல அறிவு ஜீவிகள் “இதுபற்றி தொலைக்காட்சிக் கச்சேரிகளில் வாய் திறக்கவே இல்லை.” தோட்டத்தில் இருந்து மேலும் பணம் வந்தது போலும்” என்று “புதல்வன்” நஞ்சைக் கொட்டினான். யாராவது கண்டித் தார்களா? வைகோ ஏன் இப்படிச் சொன்னார் என்று வாதிடும் உட்கட்சி ஜனநாயகம் நமது கட்சிக்குப் பெருமை தானே?” நாலாத் திசைகளில் இருந்தும் என் மீது பாயும் நச்சுப் பாணங்களை தாங்கிக் கொள்ளும் நெஞ்சுரம் எனக் குண்டு.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:-
சரி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு வருவோம். “அதிமுக தரப்பும், திமுக தரப்பும் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகித்தன என்ற செய்தி ‘தினத் தந்தி’ ஏட்டிலும், ‘தினமலர்’ ஏட்டிலும் பிரசுரமாயின. அதிமுக தரப்பு ஓட்டுக்கு 4000 ரூபாய், திமுக தரப்பு ஓட்டுக்கு 2000 ரூபாய் என்று தினமலரிலேயே செய்தி.
“4000 ரூபாய்” தந்ததாகச் சொல்லப்படும் அதிமுகவினருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்று “நிதி அமைச்சகத்தின் வருமான வரித்துறை ‘என்போர்ஸ்மென்ட்’ அதிகாரிகள் அமைச்சர் வீட்டுக்குப் பாய்ந்தனர். பல இடங்களில் சோதனை. தங்களுக்குக் கிடைத்தாக சொல்லும் சாட்சியங்கள் - விசாரணை : இடைத் தேர்தல் ரத்து” - தேர்தல் ஆணையம் அதிரடி - அதன் உண்மை என்ன என்ற ஆராய்ச்சிக்கு நான் செல்ல இயலாது.
“திமுக தரப்பு 2000 ரூபாய் என்றார்களே, அந்தப் பணம் கோடிகள் கொண்ட பணம் எங்கிருந்து புறப்பட்டது என்று துப்பு துலக்க ‘அதே என்போர்ஸ்மெண்ட் துறை முயன்றதா?’ ஏன் இல்லை.”
“வாக்காளர்களுக்கு அதிமுக, திமுக பணம் கொடுப்பது என்பது புதிய செய்தி அல்ல. தமிழக வாக்காளர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாகப் பழகிப்போன அனுபவத்தால் கண்ட செய்தி ஆகும். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் “காங்கிரஸ் வேட்பாளருக்காக திமுக போலீசைக் கொண்டே வீடு வீடாகப் பணம் விநியோகித்தது.” 15000 வாக்குகளில் நான் தோற்றேன். அப்போது திமுக ஆட்சி. 2014 அதே தொகுதியில் அதிமுகவும், திமுகவும் வீடு வீடாக பணம் விநியோகத்தன. நான் தோற்றேன். திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.
“திருவாளர்” திமுக செயல் தலைவர் புதிய உபதேசியாக புறப்பட்டு இருக்கின்றார். தயாரித்துக் கொடுக்கப்படும் அறிக்கைகளை, செய்தியாளர்கள் சந்திப்புக்கும் சொல்ல வேண்டிய பதில்களை திருவாய் மொழியாக அருள்கிறார்.
“இடைத் தேர்தல் நடந்திருந்தால் வெற்றி முகட்டில் கொட்டி முழக்கி இருப்பாராம்!”
‘மந்திரி’ வீட்டில் ரெய்டு என்பது தமிழ் நாட்டுக்கே கேவலம். அவமானம், ஊழல் பண விநியோகத்தால் தமிழகம் தலை குனியும் வெட்கம் - அனைத்து மந்திரிகளையும் விட்டு வைக்கக்கூடாது” பொரிந்து தள்ளுகிறார்.
தமிழ்நாட்டின் மானத்தைக் கப்பல் ஏற்றிய தி.மு.க.,
செயல் தலைவர் அல்லவா? அவர் உதிர்க்கும் ஒவ்வொரு முத்துக்களையும் பக்கம் பக்கமாக்கும் “நடுநிலை” ஏடுகள் தங்கள் கட்சி அலுவலகத்தில் “கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் இருக்கும் போதே” இன்னொரு பக்கம் CBI விசாரணை நடந்ததே? தலைவர் குடியிருக்கும் வீட்டுக்கு உள்ளேயே CBI விசாரணை நடந்ததே? இதை விட வெட்கக்கேடும் அவமானமும் இருக்க முடியுமா?
இதெல்லாம் போகட்டும். “தமிழ்நாட்டில் வாக்குகள் விலைக்கு விற்கப்படுகின்றன” என்ற தகவலை தனது அறிக்கையில் அமெரிக்கத் தூதரகம் வாசிங்டனில் உள்ள ஸ்டேட் டிபார்ட்மெண்ட் எனப்படும் அரசியல் கேந்திர மையத்துக்கு அனுப்பி வைத்தது. அதில் குறிப்பிடப்பட்ட வாசகம் “THIRUMANGALAM FORMULA” திருமங்கலம் பார்முலா. தமிழ்நாட்டின் மானத்தைக் கப்பல் ஏற்றி அட்லாண்டிக் கடல் தாண்டி அனுப்பி வைத்த அசகாய சூரத்தனம் திமுக தலைமைக்குத்தானே வரும்? இதனை ‘துக்ளக்’ தலையங்கம் கூடச் சுட்டியுள்ளதே?
திருமங்கலம் தொகுதியில் 2006 சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக வென்றது. என் ஆரூயிர்ச் சகோதரர் நினைவில் வாழும் தியாக வேங்கை வீர.இளவரசன் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2008 ஆம் ஆண்டு இதே புழல் சிறையில் “அன்றைய தேசத்துரோக வழக்கில் அடைபட்டு இருந்தேன் - அக்டோபர் 27 ஆம் தேதி என்னை நேர்காணலில் சந்தித்த வீர.இளவரசனிடம், ‘அக்டோபர் 30 இல்’ பசும்பொன்னுக்கு தேவர் திருமகனார் புகழ் விழாவிற்கு சென்று வாருங்கள்” எனச் சொல்லி அனுப்பினேன். அவ்விதமே சென்று வந்தார்.
நவம்பர் 4 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல். அந்த ஆண்டு ஜூலை 12 இல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமாவைச் சந்தித்து ‘Yes; We can’ என்று அவர் பற்றி நான் எழுதிய புத்தகத்தில் அந்த சொற்களையே அவர் எழுதி கையொப்பம் இட்டதும் உங்களுக்கு நினைவு இருக்கும். நவம்பர் 5 ஆம் தேதி பகலில் வானொலியில் “பாரக் ஒபாமா வெல்கிறார்” என்ற தித்திப்பான செய்தியால் மகிழ்ந்தவன் நான்.
வீர. இளவரசன் மறைவும், திருமங்கலம் இடைத்தேர்தலும்:-
மாலை 5 மணிக்கு வழக்கறிஞர் தேவதாஸ் குழுவினரிடம் இத்தேர்தல் முடிவு குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட போது, “பேரதிர்ச்சியாக இளவரசனுக்கு மாரடைப்பு. நிலைமை மோசம். மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை” என்று புழல் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.ராஜன் தகவல் அனுப்ப, “உள்ளம் உடைந்து நொறுங்கினேன்.” இரவெல்லாம் தூக்கம் இன்றித் தவித்தேன். நீதிமன்றத்தில் இருந்து மீனாட்சி மிசன் சென்றேன்.
“பெயிலிலா?” என்று எழுதிக் காட்டினார் இளவரசு. ‘இல்லை, நீதிமன்றமே அனுப்பி விட்டது’ என்று கூறினேன். மருத்துவக் கோப்புகளுடன் சென்னை வந்து டாக்டர் தணிகாசலம் அவர்கள் ஆலோசனை பெற்ற அன்று இரவே இளவரசு காலமானார். அந்தத் தொகுதிக்குத்தான் இடைத்தேர்தல்.
அதிமுக பொதுச்செயலாளர் சகோதரி ஜெயலலிதா, “நாங்கள் இத்தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம். நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும்” என்று கடிதம் அனுப்பினார். இசைந்தேன். ‘தேர்தல் களத்தில் நீங்கள் முழு அளவில் எங்களுக்கு உதவ வேண்டும்’ என்றார். அப்படியே களத்தில் நின்றேன். போலீஸ் உதவியுடன் திமுக வாக்காளர்களுக்கு வீடு வீடாகப் பணத்தை வாரி இறைத்தது.
தொகுதி முழுக்க அமைச்சர்கள் முற்றுகை. தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன் “அதிமுவும் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தரப்போகிறார்களாம்” என்ற செய்தியைத் திமுகவே பரப்பியது. அதிகாலை 4 மணி அளவில் தொகுதி நெடுகிலும் அண்ணா திமுகவினர் திமுக குண்டர்களால் கொடுமையாகத் தாக்கப்பட்டனர். பலர் மண்டை உடைந்தது. எம்.எல்.ஏ.க்கள் பலர் காயமுற்றனர். பல் உடைந்தோர், கரம் ஒடிந்தோர் பலர். கார்கள் நொறுக்கப்பட்டன. மேலூர் எம்.எல்.ஏ. சாமி கை ஒடிக்கப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். எங்கும் அராஜகம். திமுக நடத்திய ரணகளம். அதிமுக தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் முக்கியமானவர்கள் யாரும் இல்லை. எங்கும் அச்சம் பீதி. நான் 20 கார்களில் தோழர்களுடன் அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு விரைந்தேன். மாலை வரை அங்கேயே இருந்தேன். மாலை 5 மணிக்கு பிரச்சாரத்துக்குப் புறப்பட்டேன். “எந்த இடம் திமுக ரௌடிகளின் கேந்திரம் எனப்பட்டதோ? அங்கே கொண்டுபோய் பிரச்சார வேனை நிறுத்தினேன்.
வேன் மீது ஏறி நின்று, “திமுக காலிகளைக் கடுமையாக எச்சரித்தேன். கொலைகாரர்கள் கூட்டமே என்றேன்; ஒலிபெருக்கியில். என்னைத் தாக்குவதற்கு தயாராக ஆயுதங்களுடன் வந்தனர் திமுகவினர். நமது சகோதரர்கள் அனைவர் கைகளிலும் திருப்பாச்சேத்தி அரிவாள் மின்னியது. பின்வாங்கிப் போனார்கள் திமுகவினர். அன்று மட்டும் 42 இடங்களில் பிரச்சாரம் செய்தேன். ஒவ்வொரு இடத்திலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முன்ணியினர், நிர்வாகிகள் என்னைக் கட்டித் தழுவி கண்களில் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள்.” கை கால் முறிக்கப்பட்ட அதிமுகவினர் அனைவரையும் மருத்துவமனைகளில், அவர்களது வீடுகளில் போய்ப் பார்த்துத் தைரியமும், ஆறுதலும் கூறினேன். மத்தியச் சிறைச்சாலையில் மேலூர் சாமி எம்.எல்.ஏ.வைப் பார்த்து ஆறுதல் கூறினேன்.
திருமங்கலம் நிறைவுப் பிரச்சாரக் கூட்டத்தில் சகோதரி ஜெயலலிதா எனக்கு நன்றி சொன்னார்.
கடைசி இரண்டு நாட்கள் திமுக பண விநியோகம் உச்சகட்டத்தில் நடந்தது. ஓட்டுக்கு 5000 ரூ தந்தனர். அத்துடன் மிக்சி, கிரைண்டர், வாசிங் மெசின்களை வாரி இறைத்தனர். பெருவாரியான வித்தியாசத்தில் “வெற்றியை விலைக்கு வாங்கியது தி.மு.க.”
எனது கேள்வி, “திமுக அமைச்சர்கள், முன்னணியினர் மீது மத்திய அரசு நிதித் துறை அமைச்சகம் பாய்ந்ததா? ஆர்.கே. நகரில் பண விநியோகம் மட்டும் தான் - அதுவும் அதிமுக மீது மட்டும் தான் குற்றச்சாட்டு. ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலில், “திமுக ஓட்டுக்களை 5000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது மட்டும் அல்ல, எதிர்க்கட்சியான அண்ணா திமுகவினரை கொடூரமாகத் தாக்கி, கைகளை, மண்டையை உடைத்தார்களே? இப்படி ஒரு அராஜகம் தமிழ்நாட்டில் எந்த இடைத்தேர்தலிலாவது நடந்தது உண்டா?”
“இன்றைய செயல் தலைவர் அப்போது வேறு கிரகத்தில் வாழ்ந்தாரா?” அவரும் சேர்ந்துகொண்டுதானே அட்டூழியம் நடத்தினார்? அதன் தொடர் விளைவுதான் சென்னை மாநகராட்சித் தேர்தல். வாக்குச் சாவடிகளுக்குள் திமுகவினர் ஆயுதங்களுடன் புகுந்து எதிர்க்கட்சி வேட்பாளர்களையும், நியாயம் கேட்ட அதிகாரிகளையும் தாக்கி, வாக்குச் சாவடிகளையே கைப்பற்றிக்கொண்டு ‘வெற்றி’ என்றனரே? அதனால்தான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் “நரகத்தை சென்னை மாநகரத்திற்கே திமுக கொண்டு வந்தது” என்று சாட்டையடி தந்தனர். அந்தத் தேர்தலையும் ரத்து செய்தனர்.
இவ்வளவு அராஜகத் தாண்டவம் ஆடச் செய்த கூட்டத்தின் ‘செயல் தலைவர்’ ‘ஆர்.கே. நகர் தேர்தல் ரத்தால் தமிழ் நாட்டின் மானமே போய்விட்டது’ என்கிறார். நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டுமாம். உபதேசம் செய்கிறார். இவரைப் போன்றவர்களுக்காகவே ஒரு சொற்றொடர் அமைந்துள்ளது. ஆம், “சாத்தான் வேதம் ஓதுகிறது.”
தொடரும்...
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment