அரசியல் களத்தில் நடப்பது எல்லாம் நன்மைக்கே!
‘பாசமலர்’ திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் “எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே.” இப்பாடல் வரிகள் நம் இயக்கப் பயணத்தில் பலிக்கத்தான் போகின்றன. அதனை உருவாக்க வேண்டிய பொறுப்பு கிளைக் கழகம் முதல் நிர்வாகிகள் கைகளில்தான் உள்ளது. அதற்கு உரிய சூழ்நிலையை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்துத்தான் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றேன்.
ஏப்ரல் 8 ஆம் நாளிட்ட ஆங்கில ‘இந்து’ ஏட்டில் சுகாசினி ஹைதர் எழுதிய ‘வங்க தேசம் 1971’ என்ற கட்டுரை என் மனதில் துக்கமும் கோபமும் கலந்த உணர்வுகளை எழுப்பியது. அவற்றை இம்மடலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
சில தினங்களுக்கு முன்னால் வங்கதேச அதிபர் திருமதி ஷேக் ஹசீனா அவர்கள் இந்தியாவுக்கு வந்த செய்திகளை அறிவீர்கள்.
1947-இல் இந்தியத் துணைக்கண்டம் இரு நாடுகளாகப் பிரிந்தன. காயிதே ஆஜம் முகம்மது அலி ஜின்னா “பாகிஸ்தான்” நாட்டை அமைத்துக் கொள்ளப் பிரிட்டனும் இசைந்தது. இதை நினைக்கும் போது வழக்கறிஞர் வீரபாண்டியன் ஒரு கட்டுரையில் எழுதிய கருத்து சரியாகப் பட்டது. இலங்கைத் தீவின் விடுதலைக்காக ஈழத் தமிழர் தலைவர்களும் கடுமையாகப் போராடி னார்கள். ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் தங்களுக்கென்று தனியான ‘தமிழர் நாடு’ இருந்ததை எண்ணி இலங்கைத் தீவில் ஈழத் தமிழர் தாயகத்தைத் தனி நாடாகப் பெறத் தவறி விட்டார்கள். சிங்களர்கள் கைகளில் பிரித்தானிய அரசு அதிகாரத்தை ஒப்படைத்தபோது சம உரிமையுள்ள மக்களாக வாழ்வோம் என நம்பி ஏமாந்தனர்; நான்காம்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டார்கள்.
சரி. மீண்டும் பாகிஸ்தானுக்கு வருகிறேன். மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மீது அதிகாரம் செலுத்தி வருகையில் வங்க மொழி இரண்டாம் தர மொழியாக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் மக்கள் உரிமைகள் இழந்தனர்.
பல்கலைக்கழகத்தில் விடுதலை கீதம்:-
பாகிஸ்தான் பெரும்பாலும் இராணுவ சர்வாதிகார ஆட்சி நாடாகவே திகழ்ந்து வந்தது. மேற்குப் பாகிஸ்தானின் அசுரப் பிடியில் இருந்து மீள வேண்டும்; வங்க மொழியே ஆட்சி மொழியாக வேண்டும்; மாநில சுயாட்சி வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி, பின்னர் ‘வங்கதேச விடுதலைதான் எங்கள் தாகம்’ என வங்க மக்கள் முதலில் அறவழியில் போராடினர். மேற்கு பாகிஸ்தான் காவல்துறையும், இராணுவமும் கொடுமையான அடக்கு முறையை ஏவின. அதிபர் இராணுவத் தளபதி யாஹ்யாகான் மூர்க்கத் தனமான தாக்குதலைத் தொடங்கினார்.
தங்கள் உரிமைகளைக் காக்க வங்க தேச வாலிபர்கள் ‘முக்தி வாகினி’ என்ற அமைப்பின் மூலம் ஆயுதப் புரட்சிக்கும் ஆயத்தமானார்கள். இலட்சக் கணக்கான அகதிகள் மேற்கு வங்கத்திலும், வடகிழக்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் வந்தனர். இந்தக் கால கட்டத்தில் விடுதலைக்கனல் டாக்கா பல்கலைக் கழகத்தில் எழுந்தது. மாணவர்கள் விடுதலை கீதம் இசைத்தனர்.
1971 மார்ச் 25 - டாக்கா பல்கலைக் கழக வளாகத்தினுள் இராணுவம் அதிரடியாக நுழைந்தது. பேராசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கண்ணில் தென்பட்ட மாணவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர். ஒவ்வொரு வகுப்பு அறையும் மாணவர்களின் பிண அறையாயிற்று. விடுதிகளுக்குள் இராணுவச் சிப்பாய்களின் துப்பாக்கிகள் வெடித்தன. எங்கும் இரத்த வெள்ளம். மாணவர் சமூகம் அஞ்சிப் பதுங்கி ஓடவில்லை.
மூன்றாம் நாள் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குவிந்தனர். ‘மதுவின் கேண்டீன்’ என்ற மையத்தைச் சூழ்ந்து “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களே! வங்க தேசத்தில் இருந்து வெளியேறுங்கள். பாகிஸ்தான் பிசாசுகளே! எங்கள் தேசத்தை விட்டு ஓடுங்கள்,” என்ற முழக்கம் கட்டிடங்களில் மோதி எதிரொலித்தது.
மண்ணை நனைத்த மதுசூதன் இரத்தம்:-
மதுசூதன் டே என்பவர் அப் பல்கலைக் கழகத்தில் சிற்றுண்டி விடுதி - கேண்டீன் - நடத்தி வந்தார். அந்தக் கேண்டீன் தான் வங்கதேச விடுதலையின் தொட்டில் ஆயிற்று. அங்குதான் பாகிஸ்தான் எதிர்ப்பாளர்கள் தினமும் கூடுவார்கள். தேநீர் அருந்திக் கொண்டே கலந்துரையாடுவார்கள். வங்கதேசத் தந்தையான ஷேக் முஜிபூர் ரகுமான் மாணவராக இருந்த காலத்திலிருந்தே இங்குதான் வந்து உரையாடுவார். அவர் சிற்றுண்டிக்குச் செலுத்த வேண்டிய கடன் பாக்கிப் பணம் கூட ‘மது’வின் கணக்கு நோட்டில் இருந்ததாம்.
இராணுவத் துருப்புக்கள் மதுசூதனையும் அவரது மனைவியையும் மகனையும் விளையாட்டு மைதானத்துக்கு இழுத்துக் கொண்டு வந்தனர். முதலில் மதுவின் மகனையும் மனைவியையும் சுட்டுக் கொன்றார்கள். பின் மதுசூதனையும் மாணவர்களையும் குண்டுகளுக்குப் பலியாக்கினார்கள். இரத்தத் துளிகள் மண்ணை நனைத்தன.
இந்தக் கோரப் படுகொலைகளால் மாணவர் சமுதாயம் அஞ்சிப் பதுங்கவில்லை. பாகிஸ்தான் எதிர்ப்பு - விடுதலைக் கிளர்ச்சி தீவிரமாகியது. மசூசூதன் இந்து மதம்தான். ஆனால், வங்க விடுதலைக்காகத் தன் ஆவியைத் தந்தார்.
“நாங்கள் முஜிபூர் ரகுமானின் விடுதலைப் படை” என வீர முழக்கம் செய்தான் லிபி அக்தர் எனும் 19 வயது மாணவன்.
‘முஜிபூர் ரகுமான்’ மேற்கு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தூக்குமரம் அவருக்காகக் காத்து இருந்தது. இரண்டு இலட்சம் பெண்கள் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்டனர். 1971 மார்ச் முதல் 1971 டிசம்பர் வரை இலட்சக் கணக்கானோர் படுகொலை செய்யப் பட்டனர்.
வங்கதேசம் மலர்ந்தது:-
“பாகிஸ்தானில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை அல்ல; பன்னாட்டுப் பிரச்சினை; மனித உரிமைப் பிரச்சினை; பொது மக்கள் கொல்லப்படுகின்றார்கள். இந்தியா வேடிக்கை பார்க்கக் கூடாது,” என நாடாளுமன்ற மேலவையில் கர்ஜித்தார் மேற்கு வங்கம் தந்த கம்யூனிஸ்டுத் தலைவர் பூபேஷ் குப்தா. பிரதமர் இந்திரா காந்தி அதனையே மிக அழுத்தமாக முழங்கினார் ‘நடப்பது உள்நாட்டுப் பிரச்சினை’ அல்ல என்றார். ஜெனரல் மானெக்ஷா தலைமையில் இந்திய இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் போர் மூண்டது . ‘இது ஆயிரம் ஆண்டுப் போராக நடக்கும்’ என ஆவேசக் குரல் கொடுத்தார் பாகிஸ்தானின் ஜூல் பிகர் அலி பூட்டோ. 90,000 பாகிஸ்தான் படையினர் ஜெனரல் நியாஜி தலைமையில் சரண் அடைந்தனர். அவர்கள் மனித நேயத்துடன் நடத்தப்பட்டனர்.
முஜிபூர் ரகுமான் விடுதலை செய்யப் பட்டார். உலக வரைபடத்தில் ‘வங்க தேசம்’ என்ற புதிய நாடு மலர்ந்தது. ‘வங்கத் தந்தை’ ஷேக் முஜிபூர் ரகுமான் அதிபர் ஆனார். ஆனால், நான்கு ஆண்டுகளில் இராணுவத்தின் ஒரு பிரிவினர் நடத்திய கோரமான படுகொலைக்கு முஜிபூர் ரகுமானும் அவர் குடும்பத்தினரும் பலியானார்கள். உலகத்தின் மனசாட்சி குலுங்கியது.
முஜிபுர் ரகுமான் படுகொலை; மன்னிப்பு கிடையாது; மரண தண்டனைதான்:
.
இப்படுகொலை நடந்த தேதி என்ன தெரியுமா? இந்தியாவின் விடுதலைத் திருநாள். ஆம்; ஆகஸ்டு 15, 1975. டாக்கா நகரில் மூன்று வீடுகளில் வசித்த முஜிபூர் ரகுமானின் குடும்பத்தினர் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இராணுவத்தின் இயந்திரத் துப்பாக்கி ரவைகள் சல்லடைக் கண்களாகத் துளைத்தன தேசத் தந்தையின் குடும்பத் தினர் உடல்களை.
முஜிபூர் ரகுமானின் மகள் - இன்றைய அதிபர் ஷேக் ஹசீனா வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினார். முஜிபூர் ரகுமானின் கடைசி மகன், ஹசீனாவின் தம்பி - பத்து வயது நிரம்பிய ரஸ்ஸல் சுட்டுப் பொசுக்கப் பட்டான். இராணுவ மிருகங்கள் அப்பச்சை மதலையையும் பலியாக்கின. இக்கொடிய படுகொலை செய்த மாபாவிகள் வங்க தேசம் அமைத்துள்ள பன்னாட்டு நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரணை நடந்தது; மரண தண்டனை விதிக்கப்பட்டது; கொலைகாரர்கள் தப்ப முடியவில்லை.
2015-இல் குற்ற இயல் தீர்ப்பாயத்தில் “என் தந்தை வங்கதேசத்தில் சட்ட சபை சபாநாயகராக இருந்தவர். விடுதலைப் போரின்போது மாணவராக இருந்தார். அவரை மன்னித்து விட்டு விடுங்கள்,” என்ற வாதத்தை தீர்ப்பு ஆயம் ஏற்கவில்லை. தனது 172 பக்கத் தீர்ப்பில், “பாகிஸ்தான் தேசியக் கட்சியின் அமைச்சராகவும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த சலாவுதீன் குவாதிர் சௌத்ரி மீது 41 சாட்சிகள் குற்றங்களைக் கூறியுள்ளனர். 200 இந்துக்கள் படுகொலைக்குக் காரணமானவர்” எனக் குற்றம் நிரூபிக்கப்பட்டது எனக் கூறி மரண தண்டனையை உறுதி செய்தது. 2015-இல் அவர் தூக்கில் இடப்பட்டார்.
பாகிஸ்தான் அரசு தான் நடத்திய இனப் படுகொலையைக் கடைசி வரை மறுத்தது. 2002-ஆம் ஆண்டு டாக்காவுக்குச் சென்ற பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் “சில மீறுதல்கள் நடந்து விட்டன. பழையனவற்றை மறப் போம்” என்றார். ஆனால் வங்க தேசம் ஏற்கவில்லை.
“1975-இல் அதிபர் முஜிபூர் ரகுமானின் பத்து வயதுப் பாலகன் ரஸ்ஸல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டான். இருபது முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் குற்ற வாளிகள் கூண்டில் நிறுத்தப்பட்டு முக்கியமானவர்கள் தூக்குக்கயிற்றில் தொங்க விடப்பட்டனர்.
ரஸ்ஸல் சிந்திய இரத்தத் துளிகளை அவர்கள் மறக்கவும் இல்லை; கொடியோரை மன்னிக்கவும் இல்லை.
மனிதகுல மனசாட்சியின் முன் நாம் எழுப்பும் கேள்வியும் அதுதான். எப்போது கணக்குத் தீர்ப்போம்?
எட்டுத் தமிழ் இளைஞர்களைச் சிங்கள இராணுவம் கைகளைப் பின்புறமாகக் கட்டி, கண்களைக் கட்டி, நிர்வாண நிலையில் இழுத்து வந்து கால்களால் மிதித்து மண்டியிட்டு அமர வைத்து உச்சந்தலையில் சுட்டு, கபாலம் சிதற இரத்தம் பீறிட்டு அடிக்க உடல்கள் துடிக்கத் துடிக்கக் கொன்ற சிங்களப் பாவிகளுக்குத் தண்டனை தரும் நாள் என்று வரும்?
ஈழத்தமிழ் மகள், யாழிசைக்கும் வல்லபி இசைப்பிரியாவை 16 சிங்கள இராணுவ மிருகங்கள் குதறி நாசப் படுத்தி (வார்த்தைகளால் விவரிக்க இயல வில்லை என்று சேனல் 4 - ஒலிப்பதி வாளர் கூறினார்.) கற்பழித்து சின்னா பின்னமாக்கிக் கொன்று நிர்வாண உடலை மண்ணில் வீசிய கொடூரத்தைச் செய்த அரக்கர்களுக்குத் தண்டனை தரும் நாள் என்று வரும்?
ஒன்றரை இலட்சம் தமிழர்கள் - ஆயுதம் ஏந்தாத அப்பாவிகளை - வயதில் முதிர்ந்தோரை - தாய்மார்களை - சின்னஞ்சிறு பிள்ளைகளை - கர்ப்பிணிப் பெண்களை - மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோரை - குண்டு வீசியும், செல் அடித்தும் கொன்று குவித்தார்களே, இந்த இனப் படுகொலைக்குக் கணக்குத் தீர்க்கும் நாள் என்று வரும்?
நமது தேசியத் தலைவரின் தலைமகன் சார்லஸ் அந்தோணி, போர் முனையில் முன்னின்று மார்பில் குண்டுகள் பாய்ந்து மடிந்தாரே!
தலைவரின் தந்தையார் வேலுப்பிள்ளை, இராணுவ முகாமில் வதைபட்டு மடிந்தாரே!
அவரது அருமை அன்னையார் மரண வாசலில் நின்றபோது சிகிச்சை பெறத் தமிழகம் வந்த அந்த அன்புத் தாயை, தமிழ்நாட்டில் கால்படக் கூடாது என்று திருப்பி அனுப்பச் செய்த அன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் துரோகத்தை இன உணர்வுள்ளோர் மறந்திடக் கூடாது என்றுதான் நான் சிறைக்கு வந்தேன்.
அந்த வீரத்தாய் யாழ் மருத்துவமனையிலேயே மடிந்தார்.
மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம்:-
தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வன் 9 வயது பாலகன் பாலச்சந்திரனின் விழிகளை மனக் கண்ணில் கொண்டு வாருங்கள் ஒரு கணம். இதயம் துடிப்பைச் சில வினாடிகள் நிறுத்திக் கொள்ளும். தீர்க்கமான விழிகள். வீரமும் ஒளியும் நிறைந்த பார்வை. அக்கண்கள் ஆயிரம் வீரக் கதைகளைச் சொல்லுமே! அப்பிள்ளையின் கண் முன்னாலேயே அவனின் மெய்க்காவலர்களான ஐந்து விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அந்தப் பிள்ளையின் நெஞ்சம் தன் உயிரைப் பற்றி அஞ்சி இருக்காது. பிரபாகரனின் இரத்தம் அல்லவா? அந்த ஐவருக்காகத் துடிதுடித்து நடுங்கி இருக்கும். பின்னர் அந்த வீரப் பிள்ளையின் மார்பில் ஐந்து தோட்டாக்கள் பாய்ந்தன; இரத்தத் துளிகள் அம்மண்ணில் சிதறின.
அந்தக் குருதித் துளிகளை மறக்க மாட்டோம். இக்கோரமான இனப் படுகொலை செய்த சிங்களக் கொடியோரை அதற்கு முழுமுதற் காரணமான அன்றைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை, அதில் பங்கேற்ற தி.மு.க.வை, தமிழ் நாட்டில் கோலோச்சிய கலைஞர் கருணாநிதியை ஒருக்காலும் மன்னிக்க மாட்டோம்.
ஈழத் தமிழ் இனப் படுகொலைக் குற்றவாளிகளைச் சர்வதேசக் குற்றக் கூண்டில் நிறுத்தும் காலம் வரவேண்டும்; வரச் செய்ய வேண்டும். அவ்வீரர்கள் சிந்திய இரத்தத் துளிகள் மீது ஆணை. சுதந்திரத் தமிழ் ஈழம் அமைக்கப் பொது வாக்கெடுப்பு நடத்தச் சூளுரைப்போம்.
(நேர்காணலில் நான் சொல்லச் சொல்ல செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன் இம்மடலை எழுதிக் கொண்டார்.)
எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்,
வைகோ
என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது 2 ஆம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment