தமிழ்நாட்டில் சுற்றுச் சூழலை நாசமாக்கி, கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்குக் கேடு செய்து, விவசாய நிலங்களை அடியோடு பாழாக்கி வரும் சீமைக் கருவேல மரங்கள் உயிர்க்காற்றை உறிஞ்சிக்கொண்டு, கரிக்காற்றை வெளியிடுகின்றன; வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சிக் கொள்கின்றன; இதனால், மனித வாழ்க்கைக்கும் கால்நடைகளுக்கும், பெரும் கேடு விளைவதால் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2015 செப்டெம்பர் 9 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது, தொடர்ந்து பல அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது.
நிறைவாக, 2017 ஜனவரி 10 ஆம் தேதியன்று நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அமர்வில், 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
அதுபோலவே, தமிழ்நாட்டின் இதர 19 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி வைகோ அவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது, அதற்குத் தனியாக ரிட் மனு தாக்கல் செய்யுமாறு, நீதியரசர் செல்வம் அறிவித்தார். அதன்படி, வைகோ அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு, 10.2.2017 நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
19 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் தாக்கீது அனுப்ப நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவையும் அமைத்தது. தற்போது அந்தப் பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிக்குத் தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடருமானால், தனது தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த கேவியட் மனு நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
என மதிமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment