Wednesday, April 26, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-2, நினைவூட்டும் இரத்தத் துளிகள், பாகம்-1

இமைப்பொழுதும் நீங்காது, என் இதயத் துடிப்போடும், இரத்தச் சுழற்சியோடும், கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

17.04.2017 அன்று காலை 10.30 மணி அளவில் புழல் மத்தியச் சிறையில் இருந்து எழும்பூர் அல்லிக்குளம் நீதி மன்றத்திற்குக் காவலர்கள் வாகனத்தில் அழைத்து வரப்பட்டேன். சிறை வாயிலில் காத்திருந்த கழகக் கண்மணிகள் விண் முட்டும் வாழ்த்தொலிகள் எழுப்பினர். இரு சக்கர வாகனங்களில் கழகக் கொடிகள் காற்றில் படபடக்கப் பக்கவாட்டில் வந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் கணக்கற்ற கண்மணிகளின் கூட்டம். கழக அவைத் தலைவர் ஆருயிர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்களும், ஆருயிர்ச் சகோதரர்களான பொருளாளர் கணேசமூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், அ.க.மணி ஆட்சி மன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் தேவதாசு, அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் நன்மாறன், வழக்கறிஞர் சின்னப்பா, கொள்கை விளக்க அணிச் செயலாளர் வழக்கறிஞர் அழகு சுந்தரம், இளைஞர் அணிச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன், தொண்டர் அணிச் செயலாளர் பாஸ்கர சேதுபதி, மாவட்டச் செயலாளர்கள் என்.சுப்பிரமணி, சு.ஜீவன், சைதை ப.சுப்பிரமணி, கே.கழககுமார், க.ஜெயசங்கர், ஆரணி டி.இராஜா, கோ.உதயகுமார், பி.என்.உதயகுமார், டி.டி.சி.சேரன், வ.கண்ணதாசன், டி.சி.இராஜேந்திரன், ஆ.தங்கராஜி, ஆர்.எஸ்.இரமேஷ், மா.வை.மகேந்திரன், ஆர்.இ.பார்த்திபன், கே.ஏ.எம்.குணா, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் சி.கிருஷ்ணன், பெல் இராஜமாணிக்கம், அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர் மைக்கேல்ராஜ், சட்டதிட்ட திருத்தக்குழுச் செயலாளர் வழக்கறிஞர் இரா.அருணாசலம், தீர்மானக்குழுச் செயலாளர்கள் ஆவடி இரா.அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், மகளிர் அணிச் சகோதரிகள், மாவட்டக் கழகங்களின் நிர்வாகிகள், பகுதிக் கழக, ஒன்றியக் கழக, நகரக் கழக, வட்டக் கழகச் செயலாளர்கள், எண்ணற்றோர் அன்பு முகம் காட்டி வரவேற்றனர். அனைவர் மீதும் என் கண்கள் பரிவுடன் சுழன்றன. இம்மடலில் பெயர்கள் விடுபட்டு இருந்தால் பொறுத் தருள்க.

நீதிமன்றத்தில்...

நீதிமன்ற அறைக்குள் ஆர்வத்துடன் நமது தோழர்கள் கூட்டமாக வந்ததால் நீதிபதி என்னை அழைத்து அதனைக் குறிப்பிட்டவுடன், எனது ஒரு சொல்லில் அனைவரும் வெளியேறினர். அதுதானே நம் இயக்கத்தின் தனித்துவமான கண்ணியம்!

வழக்கு செசன்சு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு, ஏப்ரல் 27 ஆம் நாள் அங்கு நான் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறினார். நீதிமன்ற வளாகத்தில் நடந்து வெளியே வரும்போது வாழ்த்து முழக்கம் எழுப்ப வேண்டாம் என்று கூறியதைத் தோழர்கள் ஏற்று அமைதி காத்தனர். உங்களில் பலரை நேரில் கண்டதில் என் மனம் மிகவும் மகிழ்ந்தது.

ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவரோ, அடுத்த கட்டத் தலைவர்களோ சிறை சென்றால் ஆர்ப்பாட்டம், மறியல், கல் வீச்சு, காவல்துறை மீது கடும் அர்ச்சனை போன்ற காட்சிகள்தான் தமிழகம் இதுவரை கண்டவை. இந்த வழக்கில் ‘பிணை விடுதலை’ வேண்டாம் என்று கூறிவிட்டு நானாகவே சிறை ஏகினேன். அதனால் எந்த ஆர்ப்பாட்டமும் எங்கும் தோழர்கள் நடத்தக்கூடாது என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தேன்.

நமது கழக அவைத்தலைவர் அவர்களும் அதனையே வலியுறுத்தி அறிக்கை தந்தார்கள். நீங்களும் அதனையே கடைப் பிடித்தீர்கள்.

“வைகோ கைதால் எந்தக் கொந்தளிப்பும் ஏற்படவில்லையே? நெருப்பு இருந்தால் தானே உலையில் அரிசி வேகும்?” என்று ஒரு வார ஏடு விமர்சனம் செய்துள்ளது.

தமிழகத்தின் பொதுவாழ்வு மட்டும் அல்ல, சில ஏடுகளின் ‘பத்திரிகா தர்மம்’ பாதாளத்தில் புதைந்து விட்டது என்பது தான் இன்றைய நிதர்சனம். இதெல்லாம் எனக்குப் பழகிப் போய்விட்டது. பாராட்டி எழுதினால்தான் ஆச்சரியப்படுவேன்.

சீமைக்கருவேலச் சீரழிவு:-

ஏப்ரல் 3 ஆம் நாள் சிறை வாயிலுக்குள் நுழையும் முன்பு செய்தியாளர்களிடம், “கழகத் தோழர்கள் சீமைக் கருவேலம் எனும் வேலிக்காத்தானை அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள்” என்று கூறினேன். தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் நமது தோழர்கள் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் வேலையில் திட்டமிட்டு ஈடுபட்டு வருவதைப் படங்களுடன் சிறைச்சாலை முகவரிக்கு எனக்கு அனுப்பி வருகின்றார்கள்.

1960 களில் தவறான தகவலின் பேரில் இந்த நச்சு மரங்களின் விதைகள் தமிழ்நாடு முழுவதும் தூவப்பட்டன. சிறிது காலம் விறகாகப் பயன்பட்டு, ஏழைகளுக்கு வருவாய் தந்தது. ஆனால், நிலைமை இன்று முற்றிலும் மாறிவிட்டது. இதனை விறகாக்கி வருவாய் காணும் நிலைமையும் இல்லை.

இந்த சீமைக் கருவேல மரங்கள் 100 அடி ஆழம் வரை வேர் பாய்ந்து நிலத்தடி நீரை அடியோடு உறிஞ்சிக் கொள்கின்றன. அதனால்தான் எந்த வறட்சியிலும் பசுமையாய் நிற்கின்றன. சுற்றுச் சூழல் ஈரப்பதத்தையும் முற்றிலும் உறிஞ்சிக்கொள்கின்றது. இதன் நிழலில் நிற்கும் ஆடு, மாடுகள் சினை பிடிப்பது இல்லை. நாம் அதன் அருகில் நின்றால் நமது உடலின் ஈரப்பதத்தையும் உறிஞ்சும். கரிக்காற்றை வெளியிட்டு, உயிர்க் காற்றை உறிஞ்சிக் கொள்கின்றது. இதன் அபாயம் குறித்து தினத்தந்தி நாளேடு தலையங்கம் தீட்டியது. இம்மரங்களின் கேடுகள் குறித்து நிறைய ஆய்வு செய்த பின்னர்தான் நான் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தேன்.

சாராயப் பாட்டிலின் சோகப் புலம்பல்?-

நல்லவேளை. தமிழ்நாட்டின் நிலத்தடி நீரைக் காக்கவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் விவசாயத்தைப் பாதுகாக்கவும் ‘வரப்பிரசாதமாக’ உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாண்புமிகு செல்வம் அவர்களும், மாண்புமிகு பொன்.கலையரசன் அவர்களும் தீர்க்கமான ஆணை பிறப்பித்தனர். அவர்களே களம் இறங்கினர். பல உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவர்களுடன் கரம் கோர்த்தனர். இல்லையேல் என் மீது கொண்ட வன்மத்தால், காரணம் இல்லாத வெறுப்பால் “சீமைக் கருவேல ஆதரவுக் கட்டுரைகள், அறிக்கைகள் இந்நேரம் அல்லோலகல்லோலப் படுத்தியிருக்கும்.” இருந்தாலும் வாரம் இருமுறை ஏடு ஒன்று “சீமைக் கருவேல மரம் நாதியற்றுப் புலம்பி அழுவதாக இரண்டு பக்கக் கட்டுரையும் எழுதிவிட்டது.

“ஒரு சாராயப் பாட்டிலின் சோகப் புலம்பல்” என்று எழுதுவதுதானே?

தமிழகத்தின் எதிர்காலம் அச்சம் ஊட்டு கிறது என்பதற்கான காரணங்களைக் கடந்த மடலிலேயே எழுதி இருந்தேன். அண்டை மாநிலங்கள் நீதிவழி நடக்கும் என்றோ, நமது நதிநீர் உரிமையை மைய அரசு பாதுகாக்கும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் இருந்து நாம் சில படிப்பினைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும் யுத்த காலங்களில் மக்கள் எப்படித் தங்கள் நாட்டைக் காப்பாற்றினார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நிலத்தடி நீரைக் காக்க வேண்டும்; அதற்குச் சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும். அதற்குப் பிறகும் முளைத்தால், அப்போது முளையிலேயே இரண்டு விரல்களால் கிள்ளி எறிந்துவிடலாம். இந்த விழிப்புணர்வை மக்களிடம் குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் நாம் ஏற்படுத்த வேண்டும். ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், நீரோடைகளைத் தூர் வார வேண்டும். குடி மராமத்துத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும். கண்மாய், குளங்கள், பாசன பட்டாதாரர்கள் “குளத்து மண்ணை எடுத்து வண்டலாக தங்கள் நிலங்களில் பயன் படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இருக்கக்கூடாது.”

தண்ணீரைச் சுமக்கும் மடியாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் திகழ்ந்த ஆற்று மணல் படுகைகள் இரண்டு கழகத்தவர்களாலும் சுரண்டப்பட்டு, கோடி கோடியாகக் கொள்ளையடித்துத் தமிழ் நாட்டுக்கு மன்னிக்க முடியாத, ஈடு கட்ட முடியாத பெரும் தீங்கு இழைத்து விட்டனர். இன்றளவும் திருந்திய பாடில்லை. நினைத்தாலே நெஞ்சம் கொதிக்கின்றது.

“நேர்மையான அரசியல் என்பது, முறையாகப் பயிர் செய்யும் விவசாயம் போன்றது.

ஊழல் அரசியல் என்பது, சீமைக் கருவேல மரங்கள் போன்றது.”

‘ஊழல்’ எனும் பிசாசு தமிழ்நாட்டையே கபளீகரம் செய்கிறது. இதற்கு விமோ சனமே இல்லையா? என்ற ஆதங்கம் நியாயமாக எழுகிறது அல்லவா?

நான் கடந்த சில ஆண்டுகளாகக் கிராமத்து விவசாயிகளிடம் சொல்கிறேன். “நாம் நெல் பயிர் நட்டாலும், பருத்திச் செடி வளர்த்தாலும், மிளகாய்த் தோட்டம் பராமரித்தாலும், வாழை போட்டாலும், எந்தப் பயிர் விளைவித்தாலும் பூச்சி கடித்துப் பாழாகிறது. நீர் இன்றிக் கருகி விடுகின்றது. பெரும் காற்று பேய்மழையால் வாழைத் தோட்டங்கள் நாசமாகின்றன. நாம் என்ன பாடு பட்டாலும் எதிர்பார்க்கின்ற மாதிரி பயிர்கள் வளர்வது இல்லை. இந்தச் சீமைக் கருவேல மரங்களைப் பாருங்க, உரம் வைக்க வேண்டாம், தண்ணீர் பாய்ச்ச வேண்டாம், எந்த நிலையிலும் இப்படி செழித்து வளர்ந்து நிற்கின்றன. இதுதான் நம்மைப் போன்ற விவசாயிகளின் நிலைமை” என்று சொல்வேன்.

அப்படித்தான், “நேர்மையான அரசியல் என்பது முறையாகப் பயிர் செய்யும் விவசாயம் போன்றது. ஊழல் அரசியல் என்பது சீமைக் கருவேல மரங்கள் போன்றது.” இதனை அடிக்கடி சொல்வேன்.

இப்போது, “சீமைக் கருவேல மரங்களை வேருடன் பிடுங்கி, அடியோடு ஒழிக்க ஒரு அறப்போரில் ஈடுபடுகிறோம்” அல்லவா! இந்தப் பணியில் பொதுமக்கள், நடுநிலையாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் அனைவரும் நம்முடன் காரம் கோர்ப்பர்; வெற்றி பெறத்தான் போகிறோம்.

இதே போன்ற நிலைமை அரசியல் களத்திலும் ஏற்படும்.

ஊழலின் உச்சகட்டத்திற்குத் தமிழகம் சென்று விட்டது. இதில் அதிமுக - திமுக என்ற வேறுபாடு கிடையாது. அறம் வளர்த்து நெறி வளர்த்த தமிழ் மக்கள், வாக்காளர்கள் மனநிலையும் தற்போது கெட்டு இருக்கின்றது. “கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வதில் என்ன தவறு? கொள்ளையடித்த பணத்தைத் தானே கொடுக்கின்றார்கள்? கொடுக்கின்ற பணத்தைப் பொறுத்துக் கட்சிக்கு இத்தனை ஓட்டு” என்று குடும்பத்திலேயே பிரித்துப் போட்டு விடலாம் என்ற மனோபாவம் சர்வசாதாரணமாகக் காணப்படுகின்றது. நான் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த காலத்தில் இப்படி ஒரு நிலைமையைக் கற்பனைகூடச் செய்தது இல்லை.

அண்ணா மறைவும் அரசியல் கேடுகளும்:-

அனைத்துக் கட்சிகளிலும் நேர்மையான தலைவர்களே இருந்தார்கள். பேரறிஞர் அண்ணா மறைந்து, 1970க்குப் பின்னர் தான் தமிழக அரசியல் சீர்கெடத் தொடங்கிற்று. மலர்க் கிரீடங்கள், தங்கச் சங்கிலிகள், கட் அவுட்கள், போலி விளம்பரங்கள், ஊழல், சொந்தக் குடும்பத்தையே கொலுபீட மாக்குதல் ‘கமிஷன்’, லஞ்சம், அரசுப் பணிகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை அனைத்திலும் அரசு ஒதுக்கும் கோடானு கோடி பணத்தில் இத்தனை சதவீதம் என்று கொள்ளை.

இப்படிக் குவியும் பணத்தைக் கொண்டு “வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்கு ரேட், மதுபான உற்பத்தித் தொழிற் சாலைகள்; அதில் கிடைக்கும் கோடானு கோடிப் பணம், நியமனங்களுக்கான கல்வித்துறைக் கொள்ளை - துணை வேந்தர்கள் பதவி ஏலம்” என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

A Point of no Return - இனி திருத்தவே முடியாத நிலைதானோ? என்ற கவலையும் எழுகின்றது.

இல்லை; எந்தக் கேட்டுக்கும் ஒரு முடிவு உண்டு. வளரும் இளைய சமுதாயம், மாணவ சமுதாயம் புரையோடிப் போன ஊழலை ஒழிக்கும் ஆவேசத்துடன் எழுவார்கள் ஒருநாள். இளைய உள்ளங்கள் ஒரு கந்தகக் கிடங்கு. ஒரு தீப்பொறி விழுந்தால் போதும் எரிமலை யாய் வெடிக்கும். அது எப்போது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முழுத் தகுதியுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் களத்தில் கம்பீரமாகப் பணியாற்றும்.

““If not We, then who? நாம் இல்லா விட்டால் வேறு யார்? நாம்தான். முழுத் தகுதி உள்ளவர்கள் நாம்தான்.

பஞ்சணையும் பாறாங்கல்லும் ஒன்றுதான்:-

இந்தச் சிறை வாசத்தை நான் பயனுள்ள தாக்கிக் கொள்கிறேன். ஆழ்ந்து தனிமையில் சிந்திக்கின்றேன்.

நெருப்பு வெயில்தான். குளிர்சாதன வசதியை மனம் தேடவே இல்லையே?

பஞ்சணை மெத்தையிலும் தூங்குவேன்; பாறாங்கல்லிலும் படுத்து உறங்குவேன். சுவையாக விரும்பி உண்பேன்; எந்தச் சுவையும் இல்லாத உணவையும் அருவெறுக்காமல் விழுங்குவேன். இதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

மத்தியப் பிரதேசத்தில் சாஞ்சி - பட்சி சோலையில் மூன்று நாள் கட்டாந்தரையில் கொளுத்தும் வெயிலிலும், இரவிலும் படுத்துக் கிடக்கவில்லையா?

நான் இதுவரை மேற்கொண்ட 5,000 கி.மீ. நடைப்பயணங்களில் வெயிலிலும் நடந்தேன்; கொட்டும் மழையிலும் நடந்தேன்; ரோட்டோரத்தில் துண்டை விரித்துப் படுத்தேன். எனக்குள்ள ஒரு நல்ல இயல்பு இதுதான். அதனை எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் நிறைவுப் பிரச்சாரக் கூட்டம். பாளைத் தொகுதி வேட்பாளர் கே.எம்.ஏ. நிஜாமை ஆதரித்து ஜவகர் மைதானத்தில் பேசத் தொடங்கியவுடன் வானமே பிளப்பதைப் போல் மின்னல்கள் பாய்ந்தன; இடியோசை செவிகளை நடுங்கச் செய்தன. ‘50’ நிமிடம் மேற்கூரை அமைக்காத மேடையில் நான் பேசினேனே? மின்சாரம் பாய்ந்து விடும் என்று வேட்பாளரே பயந்து நிறுத்தச் சொன்னாரே?

அவ்வளவு ஏன்? பூவிருந்தவல்லியில் நாம் நடத்திய பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்தநாள் விழா மாநாட்டு மேடையில் மழை கொட்டிற்று; மின்னல்கள் பாய்ந்தன. இடியோசை ஒரு புறம். மின் விளக்குக் கம்பங்கள் வளைந்து ஆடின. நான் பேச்சை நிறுத்தவே இல்லையே? சீறி வந்த இயந்திரத் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையில் வன்னிக்காட்டில் புலிகளுடன் சென்றவன் தானே! எனவே, என்னைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் 2,000 கடிதங்கள் புழல் மத்தியச் சிறையில் இருந்து அனுப்பி இருக்கின்றேன்.


தொடருகிறது...

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment