Thursday, April 20, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம் (1) பாகம் - 3!

எப்படி மீள்வது?

தமிழ்நாட்டில் அதிமுக - திமுக இரண்டு கட்சிகளும் தேர்தல் களத்தில் ஊழல் பணத்தால் வாக்குகளை விலைக்கு வாங்குகின்றன என்பது ஊர் அறிந்த உண்மை. இதிலிருந்து எப்படி மீள்வது?

தலைமைத் தேர்தல் ஆணையர்களாக சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. கோபால்சாமி அவர்கள் ஆலோசனைகளையும், திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கருத்துக்களையும் மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் பரிசீலனை செய்து, “இந்தப் புதைகுழியில் இருந்து தமிழகத்தை மீட்க முயல வேண்டும்”.

முன் ஏர் நாம்தான்,

கண்ணின் மணிகளே, உங்கள் கடமை என்ன?

“தமிழகத்தின் எதிர்காலம் மிகுந்த அச்சத்தையும், கவலைகளையும் தருகின்றது. அண்டை மாநிலங்கள் நதிநீர்ப் பிரச்சினைகளில் சர்வதேச நெறி, விதிமுறைகளுக்கும் நீதிக்கும் புறம்பாக வஞ்சிக்கின்றன”. மத்திய அரசும் பச்சைத் துரோகம் செய்கிறது. “வடதிசை வென்ற தமிழ்குலத்தின் வீரப் புதல்வர்களான விவசாயிகள் நீதி கேட்டுத் தலைநகர் டில்லியில், இதுவரை அந்நகர் கண்டிராத அறப்போர் நடத்துகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியாருக்கு இவர்களுக்கு பேட்டி கொடுக்க மனம் இல்லை. அகந்தை, ஆணவம், ‘வெறும் 200’ அரை நிர்வாணத் தமிழர்கள்தானே என்ற திமிர். கோடானு கோடி விவசாயிகளின் பிரதிநிதிகள்தான் வீரப்போராளி அய்யாக்கண்ணு தலைமையிலான உழவர்கள். அவர்களை அறப்போர்க்களத்தில் சந்தித்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அவர்களுடன் இருந்தேன். நாளை முதல் தமிழகத்தில் இருந்து தலைவர்கள் இங்கு படையெடுத்து வருவார்கள் என்று சொன்னேன். அப்படியே நடந்தது. எதற்கும் ஒருவன் Sapprsand minors ஆக முன் ஏர் பிடிப்பது பாக்கியம்தானே!

மத்திய அரக்கு என்ன மமதை இருந்தால் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக ஜெம் எனும் கம்பெனி (பா.ஜ.க.காரர்கள்)யுடன் ஒப்பந்தம் போடுவார்கள்?

ஒரு நாளேட்டில், “ஹைட்ரோ கார்பனை” ஆதரித்து முழுப்பக்கக் கட்டுரை வந்து உள்ளது. எழுதிய மேதாவி, “போராடுகிறவர்களுக்கு, ஹைட்ரோ கார்பன் பற்றி ஒன்றும் தெரியாது” என்று தனது அறியாமையைக் கொட்டி இருக்கிறார். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், சேல் எரிவாயு அனைத்தையும் ஒரே வளையத்துக்குள் சட்டம் ஆக்குகிறது மத்திய அரசு.

“மீத்தேன் எரிவாயு” குறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுடன் தமிழ் நாட்டில் போர்க்குரல் எழுப்பியவன் வைகோ. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஊர் ஊராகச் சென்று எரிவாயுத் திட்டத்துக்கு எதிராக மக்களைத் திரட்டினான் வைகோ. கட்சிக் கொடி கட்டாமல், வாகனப் பிரச்சாரம் செய்தவன் வைகோ. போராட்டம் நடத்தியவன் வைகோ. 158 விவசாய சங்கத்தினர்களைக் கொண்ட கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியவனும் இவனே.

அதோடு மட்டுமா? தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்து மீத்தேன், சேல் எரிவாயுத் திட்டங்களை தற்காலிகமாக விரட்டிய வனும் அடியேன்தான்.

இருட்டடிப்பு செய்யும் கட்டுரையாளர்கள்:-

மதுவிலக்குப் போராட்டமாகட்டும், தமிழர் நலன் காக்கும் எந்தப் போராட்டமாகட்டும் நமது பங்களிப்பை ஏடுகள் விளம்பரம் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல, ஆணித்தரமான ஆதாரம் கொண்ட நம் பங்களிப்பை இருட்டடிப்பு செய்வானேன் ஏடுகளில் கட்டுரை தீட்டுகிறவர்கள்?

மது ஒழிப்பு பற்றி ‘தமிழ் இந்து’ ஏடு பயனுள்ள கட்டுரைகளைப் பிரசுரித்தது. ஆனால், அதனை எழுதிய நண்பருக்கு ‘வைகோ’ என்ற பெயர் எட்டிக் காயாகக் கசக்கிறது. நான் பொருட்படுத்தவில்லை.

இன்றைய செய்திதானே நாளைய சரித்திரம்? வரலாற்றில் உண்மைகளை மறைக்கலாமா? புதைக்கலாமா? “எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம்” என்பர். அந்த உணர்வு ஏன் இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது?

ஒரு மாநில அரசே மதுவைத் திணித்தாலும் ஒரு ஊராட்சித் தீர்மானம் மதுவை ஒழிக்கும் என்பதை ‘கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடை ஒழிப்பு பிரச்சினை நிரூபிக்கும். என் வீரத்தாய் மாரியம்மாள் தனது 100ஆவது வயதில் 2015 ஆகஸ்டு 1 ஆம் நாள் டாஸ்மாக் கடையை அகற்ற நடத்திய உண்ணாநிலை அறப்போர். மறுநாள் கடை உடைப்பு - எங்கள் மீது காவல்துறை தாக்குதல் - என் மீதும், ஊராட்சிமன்றத் தலைவர் தம்பி வை.ரவிச்சந்திரன் மீதும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் பூமிநாதன் உள்ளிட்ட 56 பேர் மீது கொலை முயற்சி வழக்கு 307 பிரிவில். 60 ஆம் நாள் எனது தியாகத்தாய் மாரியம்மாள் மறைந்தார். உயிர் பிரியும்போது அவர் விழிகள் என்னைத் தேடியிருக்கும். நான் அங்கில்லை.

‘கலிங்கப்பட்டி ஊராட்சித் தீர்மானமே செல்லும் - மதுக்கடை நிரந்தரமாக மூடப்படும்’ என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதியரசர் நாகமுத்து, நீதியரசர் முரளிதரன் ஆகியோரின் வரலாற்றுத் தீர்ப்பால் மாநில அரசின் மூக்கு உடைபட்டது. இத்தீர்ப்பை எதிர்த்த தமிழக அரசு டெல்லியில் புகழ் பெற்ற பெற்ற வழக்கறிஞர்களைக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தது. அதுவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேகர், நீதிபதி சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிசன் கௌல் (சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்) அமர்வில் அறிமுக நிலை யிலேயே தமிழக அரசின் வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

இந்தியச் சட்ட வரலாற்றிலேயே திருப்பு முனையான தீர்ப்பு - ஒரு மாநில அரசின் அதிகாரத்தை நிராகரித்து ஊராட்சிமன்ற அதிகாரத்தை நிலைநாட்டிய தீர்ப்பு. “மதுக்கடைகளை அரசு மூடாவிட்டாலும், உள்ளாட்சி அமைப்புகள் மூடலாம்” எனத் தமிழ்நாட்டில் நிரந்தர மது ஒழிப்புக்கு நுழைவாயில் அமைத்தது கலிங்கப்பட்டி ஊராட்சிமன்றம்தான்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு நாளேடாவது இதனைப் பாராட்டியதா? தலையங்கம் தீட்டியதா? இல்லை, இல்லை.

“வைகோ என்பவன் அவர்கள் எழுத்துகளுக்குத் தீண்டத்தகாதவன்”. நான் கவலைப்படவில்லை. ஆனால், வரும் நாட்களில் மராட்டியத்திலோ, மேற்கு வங்கத்திலோ, பஞ்சாபிலோ ஒரு ஊராட்சி அமைப்பு தன் அதிகாரத்தை, உரிமையை நிலைநாட்ட “உச்ச நீதிமன்றம் தந்த வை.ரவிச்சந்திரன் -தமிழக அரசு வழக்குத் தீர்ப்பினைத்தானே மேற்கோள் காட்டும்.

அடுத்த கடிதத்தில் வை.ரவி தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு - தமிழக அரசின் முயற்சி அனைத்தையும் விரிவாக எழுதுகிறேன்.

“நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையைச் சொல்ல வந்த நான், “மது ஒழிப்பு பிரச்சினையில் நாம் சாதித்த வெற்றியின் பக்கம் போய்விட்டேன்.”

சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கடமை ஆற்றுங்கள்:-

சீமைக் கருவேல மரங்களை அகற்ற இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நான் தொடுத்த வழக்கில் நீதியரசர்கள் மாண்புமிகு செல்வம் அவர்களும், கலையரசன் அவர்களும் தொலை நோக்குடன் தமிழகத்தைக் காக்க தீர்ப்பளித்ததோடு, அதனைச் செயல்படுத்த நீதிபதிகளே களம் இறங்கி விட்டனர்.

என் வழக்கில் பதில் சொல்ல வேண்டியவர்களாக 741 பேரை நான் சேர்த்து இருக்கின்றேன். உயர்நீதிமன்ற சரித்திரத்தில் இது ஒரு சாதனை. புகழ் வாய்ந்த மதுரை வழக்கறிஞர் திருமிகு அஜ்மல்கான் அவர்களும், வழக்கறிஞர் சுப்பாராஜ் அவர்களும் எனக்கு இவ்வழக்கில் துணை நின்றனர்.

“தமிழ் நாட்டின் வருங்காலம் அபாயமாகத் தோன்றுகிறது’. நமது நிலத்தடி நீரைப் பாதுகாத்து, மழை வெள்ளத்தை அணைகள், தடுப்பு அணைகள், ஏரிகள், குளங்களில் தேக்கினால் மட்டுமே நாம் தப்ப முடியும்”.

சீமைக் கருவேலம் எனும் வேலிக்காத்தான், காற்றில் ஈரப்பதத்தை உறிஞ்சுவதோடு, 100 அடிக்குக் கீழ் வேர் பரப்பி நிலத்தடி நிரை மொத்தமாக உட்கொள்கிறது. இவற்றை அகற்றுவதைப் போர்க்கால நடவடிக்கையாக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, சில பேர்வழிகளின் துர்போதனைகளால் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு சீமைக் கருவேலம் ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கக்கூடும் என்ற செய்தி என் செவிகளில் விழுந்ததால் முன்னெச்சரிக்கையாக உச்சநீதிமன்றத்தில் டில்லி வழக்கறிஞர் சகோதரர் திரு ஜெயந்த் முத்துராஜ் அவர்கள் மூலம் சிறையில் இருந்தவாறே கேவியட் மனு தாக்கல் செய்து இருக்கின்றேன்.

அது மட்டுமா? கொடைக்கானல் பகுதி மக்கள் என்னைச் சந்தித்து, ‘யூக்லிப்டஸ்’ மரங்கள் தங்கள் வாழ்வை அழிப்பதால், அவற்றை நீக்க நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதனால் முதல் கட்ட நடவடிக்கையாக தமிழக அரசு அதிகாரிகளுக்கு சிறையில் இருந்தவாறே கோரிக்கைக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன்.

நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

பொதுநல உணர்வுடன் உங்கள் பகுதி விவசாயிகள், மாணவர்கள், நடுநிலையாளர்கள் அனைவரையும் திரட்டி சீமைக் கருவேல மரங்களை அகற்றும் வேலையில் ஈடுபடுங்கள். ஜே.சி.பி. இயந்திரம் கொண்டுதான் சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்ற முடியும். அந்த வேலையைச் செய்யுங்கள். வருகிற 2017 மே 6 நமது இயக்கம் பிறந்து 23 ஆண்டுகளைக் கடந்து 24 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போகுமானால்,

“கொடி ஏற்றும் வேலை, புதுக் கொடிகள் அமைக்கும் வேலை, கிளைக்கழகம் இல்லாத ஊர்களில் கிளைக் கழகம் அமைத்தல், மாநகரங்கள், நகரங்கள், பேரூர்களில் வட்டங்களில் கிளைக் கழகம் இல்லாவிடில் அவற்றை அமைத்தல் ஆகிய ஆக்க வேலைகளில் ஈடுபடுங்கள்.”

இம்முறை என்னை ஏமாற்ற முடியாது. ‘மே 6’ என்ன செய்தீர்கள் என்பதை ஆதாரங்களுடன் மே 15 ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு (தாயகத்துக்கு) அனுப்பி வைக்க வேண்டும். கடந்த பொதுக்குழுவிற்கு வராதவர்கள் (நியாய மான காரணம் இல்லையேல்) இனி எந்தப் பொதுக்குழுவுக்கும் வர முடியாது.

2003 இல் வேலூர் மத்தியச் சிறையில் இருந்து இதுபோன்ற கடிதம் அனுப்பினேன். செயல்படாதவர்களை நான் நீக்க வில்லை. அடுத்த அமைப்புத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார்கள். உங்களில் சிலர் சங்கொலி சந்தாதாரர்கள் ஆகவில்லை. அதுகுறித்துத் தனியாக எழுதுகிறேன்.

கடிதம் நீண்டுவிட்டது. அடுத்த வாரம் தொடர்கிறேன். சிறை நேர்காணலில் நான் சொல்லச் சொல்ல வழக்கறிஞர் நன்மாறன் இம் மடலை எழுதிக் கொண்டார்.

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்,
வைகோ

என சங்கொலி, 21.04.2017 பதிப்பில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment