Wednesday, April 19, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம் (1) சங்கொலியில் பாகம் -1!

இமைப்பொழுதும் நீங்காது, என் இதயத் துடிப்போடும், இரத்தச் சுழற்சியோடும், கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

சென்னை புழல் மத்தியச் சிறை, அ.தொகுதி 18 ஆம் எண் கொட்டடியில் இருந்து, ஏப்ரல் 11 ஆம் நாள், செவ்வாய்க் கிழமை இரவு 8 மணிக்கு இதனை எழுதுகிறேன்.

கடந்த காலம் நிகழ்காலத்தில் ஊடுருவுவது போல ஒரு பிரமை ஏற்படுகிறது. ஆம்; வேலூர் மத்தியச் சிறை நினைவுக்கு வருகின்றது.

மார்ச் 30 ஆம் நாள், சென்னை காமராசர் அரங்கில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் நூற்றாண்டு விழாவை எவரும் கற்பனைகூடச் செய்யாத வகையில் மகோன்னதமாக நடத்தினோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் 1917 ஜனவரி 17 இல் பிறந்தார். இந்த ஆண்டு ஜனவரி 17 இல் நூறாண்டுகள் நிறைவுற்றதால், திராவிட இயக்கத்தின் சார்பாக நாம் நடத்திய சாதனை, வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

அடுத்த சில நாள்களிலேயே, ஏன் சிறைச் சாலைக்கு வந்தேன்? என்பதற்கான விளக்கத்தை நீதிமன்ற வளாகத்திலேயே நான் செய்தியாளர்களிடம் சுருக்கமாகக் கூறினேன். உலக வரலாற்றில் எந்த ஒரு தேசிய இனமும், பிறிதோர் இனத்தவரால் படுகொலைக்கு ஆளானால், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், மரண பூமியில் துடிதுடித்துப் பாதிக்கப்பட்ட இனம், நீதிக்குப் போராடுவதையும், ஐம்பது ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் வரலாறு பதிவு செய்து இருக்கின்றது.

நெஞ்சத்தை நடுநடுங்கச் செய்யும் கோரமான படுகொலைகளைத் தமிழ் இனத்தின் மீது ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசு ஏவியது. இலட்சக்கணக்கான தமிழர்கள் வதைக்கப்பட்டனர். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், மூதாட்டிகள் ஈவு இரக்கம் இன்றி அழிக்கப்பட்டனர்.

இந்தக் கொடிய இனக் கொலை புரிந்தோரைக் குற்றக் கூண்டில் ஏற்ற வேண்டாமா? சுதந்திரத் தமிழ் ஈழத்தை நிர்மாணிக்கும் கடமையில் இருந்து நம் கவனம் சிதறலாமா?

2009 ஜனவரி முதல் மே 18 வரை ஈழத் தமிழர்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்ட கொலைகார சிங்கள அரசுக்கு முழு உதவியும் செய்து ஆயுதங்கள் வழங்கி, தனது முப்படைத் தளபதிகளையும் அனுப்பி ஆலோசனைகள் தர வைத்து, அந்த யுத்தத்தைத் தானே இயக்கி வீராதிவீர விடுதலைப் புலிகளுக்குப் போரில் பின்னடைவையும் அழிவையும் ஏற்படுத்திய துரோகத்தைச் செய்தது தி.மு.க.வும், பா.ம.க.வும் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி தலைமை தாங்கிய இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அல்லவா?

இக்கொடும் துரோகத்தைச் செய்து, தமிழகத்தை ஆண்ட தி.மு.க. தலைமைக்கு வரலாற்றில் மன்னிப்பு கிடைக்காது.

ஆனால், அதனை மறக்கடிக்கச் செய்து விட்டு “ஈழ விடுதலைக் கனலையும் அணைத்து விடலாம் என்று தி.மு.க.வின் செயல் தலைமை பகல் கனவு காண்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை நான் முன்னெடுத்ததன் மூல நோக்கம் ‘எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களுக்குச் செய்த பேருதவிகளை நினைவூட்டுவதற்கும், தி.மு.க. தலைமையின் துரோகத்தைச் சொல்லாமலே விளங்க வைப்பதற்கும் தான்!’

திராவிட இயக்கத்தை அழித்து விடலாம் என்று ஜென்ம வைரிகள் திட்டமிடுகிறார்கள். பா.ஜ.க.வை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் தன் நச்சுக்கரங்களால் தமிழகத்தை வளைக்க முயல்கிறது. இதனை எதிர்கொள்ளக் கூடிய நெஞ்சுரமும் கொள்கைத் தெளிவும் போர்க்குணமும், தியாக சித்தமும் கொண்டுள்ள திராவிட இயக்கத்தின் ஒரே பரிமாணம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

அதனால்தான், என் மீது தி.மு.க. தலைமை, அதன் ஆட்சிக் காலத்தில் தொடுத்த தேசத் துரோக வழக்கை மக்கள் மன்றத்திற்குக் கவனப்படுத்தி, அதன் வஞ்சக முகத்திரையைக் கிழிப்பதற்காகத் தான் சிறை ஏகினேன்.

குற்றம் சாட்டுகிறேன்

2009 ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் சென்னை இராணி சீதை மன்றத்தில் கூட்டம். ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு செய்ய முனைந்த, செய்த உதவிகளைத் தடுக்கவும் அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து தந்த கோரிக்கை மடல்களையும், அஞ்சலில் அனுப்பிய கடிதங்களையும் இணைத்து, “குற்றம் சாட்டுகிறேன்” என்ற தலைப்பில் நூலாக்கினேன். ஆங்கிலத்தில் ‘I ACCUSE’ எனும் நூலாக்கினேன். இந்தத் தலைப்பு - பிரெஞ்சு நாட்டின் வரலாற்றில் மாபெரும் எழுத்தாளன் எமிலி ஜோலா பிரெஞ்சு மக்களிடம் பரப்பிய பிரசுரத்தின் தலைப்பு.

என் தலையில் இடி விழுந்த சம்பவம் 1993 அக்டோபர் 3-இல் நடந்தது. வைகோவின் அரசியல் உயர்வுக்காக தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியை தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் கொலை செய்யத் திட்டம் என்ற ஊர்ஜிதமாகாத தகவலை மத்திய அரசின் உளவுத்துறை தெரிவித்ததாகவும், அதனை அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்தின் அ.தி.மு.க. அரசுக்கு அனுப்பியதாகவும், அ.தி.மு.க. அரசு தி.மு.க. தலைவருக்கு அச்செய்தியை அனுப்பி, போலீஸ் பாதுகாப்பு தர முன்வந்ததாகவும் சொல்லி, அந்தத் தகவலை, அக்டோபர் 3-இல் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியூர் சென்று இருந்த வேளையில், செய்தியாளர்களைக் கூட்டி இச்செய்தியைத் தி.மு.க. தலைவர் தந்தார். ‘தன்னைக் கொலை செய்யப் புலிகள் திட்டமிட்டதற்கான காரணம் அத் தகவலிலேயே இருப்பதாகவும்’ கூறினார்.

என் உலகமே இருண்டு சூன்யமானது. ஓராயிரம் நச்சுப்பாம்புகள் என்னைக் கொத்தியதுபோல் துடிதுடித்தேன். அச்சமயம் ஓய்வு பெற்ற தமிழக காவல்துறை தலைமை ஆணையர் திரு. இலட்சுமி நாராயணன் அவர்கள் “தினமணி” ஏட்டில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.

“பிரான்சு நாட்டில் பிரெஞ்சு இராணுவத்தின் விசுவாசமிக்க தளபதியான டிரைபஸ் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி, ஜெர்மனிக்கு இராணுவ இரகசியங்களை அனுப்பியதாகக் குற்றக் கூண்டில் நிறுத்தி, பூதத் தீவில் ஆயுட் கைதியாக சிறை வைத்தனர். அன்று டிரைபஸ் மீது பழி சுமத்தியதுபோல், குற்றமற்ற கோவலன் மீது பழிசுமத்தியது போல் வைகோ மீது பழி சுமத்தப்பட்டுள்ளது” என அக்கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார் அப்பெருமகன்.

புகழ்மிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யரின் சகோதரர் தான் இப்படி எழுதியவர். அவர் எனக்குப் பரிச்சயமே கிடையாது. அந்த டிரைபசுக்காகப் போராடிய எழுத்தாளன் எமிலி ஜோலா, “உண்மையை ஊருக்குச் சொல்ல வெளியிட்ட பிரசுரம்தான் I Accuse.” அதே சொற்றொடரைத்தான் நான் பயன்படுத்தினேன் எனது நூலின் தலைப்பாக. இதனை அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள் வெளியிட்டார்கள். “ஒடுக்கப்பட்டவர்களின் விலங்குகளை உடைத்து எறியும் சம்மட்டியாகவும், தமிழ் ஈழ விடுதலைக்கனலைக் காலக் கடைத் தீயாகவும், கவிதைகளில் தொடுத்த இலட்சியக் கவிஞன், மண்ணை விட்டு மறைந்தாலும், தனது படைப்புகளால் வாழ்கின்ற கவிஞர் இன்குலாப் அவர்கள் நூலின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு ஆற்றிய உரை எனக்குக் கிடைத்த பட்டயம் ஆகும்.

திருவாளர் தேசியம்பிள்ளை தொடுத்த வழக்கு:-

இந்திய அரசு செய்த துரோகத்தை - ஆணித்தரமான ஆதார சாட்சியங்களுடன் என் உரையில் வெளிப்படுத்தினேன். “தனி நாடு கேட்ட இயக்கத்தில் வளர்ந்தவர், தன்னைத் தீவிரவாதியாகக் காட்டிக் கொண்ட கலைஞர் கருணாநிதி” 2009-இல் புதிய தேசியம்பிள்ளை ஆகிவிட்டார். சர்தார் வல்லபாய் படேலுக்குக் கூட ஏற்பட்டு இருக்க முடியாத தேசபக்த வெறியுடன், இந்தியத் துணைக்கண்டத்தின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்று வெகுண்டெழுந்த வேட்கையால் என்மீது ‘தேசத் துரோகி’ எனக் குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்க நான் முயன்று விட்டதாகவும், இறையாண்மையைத் தகர்க்க நான் போர்க்கோலம் பூண்டு விட்டதாகவும் என் மீது வழக்கு. ஆபத்தான பிரிவு “இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில் உயிர்ச் சேதமானால் மரண தண்டனையும், இல்லையேல் ஆயுள் தண்டனையும் வழங்கும் குற்றப் பிரிவு 124-A என் மீது வழக்கு.”

என்னுடைய உரையைக் காற்றலைகள் கொண்டு சென்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கல்லறையில் எதிரொலிக்கச் செய்தால், அக்கல்லறைகள் எனக்கு வாழ்த்துச் சொல்லும். நடேசனாரின் குரல், பிட்டி தியாகராயரின் குரல், டி.எம். நாயரின் குரலின் எதிரொலி தான் வைகோவின் குரல்.

சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் “ஈழத்தில் நடந்தது என்ன?” என்று நான் ஆற்றிய உரைக்காக இதே கொடிய சட்டப் பிரிவுகளில் “தேசத் துரோக வழக்கினை என் மீது ஏவிய பெரிய மனிதரும் இதே கலைஞர் கருணாநிதி தானே!”

அந்த வழக்கு நடந்தது. நாடு போற்றும் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்கள் கூட கவலைப்பட்டார். நமது சட்டத்துறைச் செயலாளர் உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தேவதாஸ்தான் அந்த வழக்கை நடத்தினார். நீதிபதியின் அனைத்துக் கேள்விகளுக்கும் நான் “ஆமாம்” என்றுதான் பதில் தந்தேன். மரண பூமியில் தேசியத் தலைவரிடம் பயிற்சி பெற்றவன். மரணத்தை மிக அருகில் கண்டு திரும்பியவன். காயம் பட்ட 37 விடுதலைப்புலிகளை என் வீட்டில் வைத்து என் வீரத் தாய் மாரியம்மாளும், வீரத் தம்பி வை. ரவிச்சந்திரனும் பராமரித்து, அதனால் ஓராண்டு சிறை பெற்றவன் என் தம்பி. இந்த வழக்கிலும் நான் பேசியது எதையும் மறுக்கப் போவது இல்லை. அதனால் சில ஆண்டுகள் சிறைவாசம் என்று தீர்ப்பு வந்தாலும் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னேன்.

இப்போது சிறை புகுந்தது ஏன்?

இப்போது நான் சிறைக்கு வந்ததன் நோக்கம் இதுதான். “கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும். கட்சி அரசியலைக் கடுகு அளவும் கூறாமல் “தமிழ் ஈழம்” பற்றிப் பேச வேண்டும். திலீபன்களைத் தயாரிக்க வேண்டும் - தங்களை அழிக்க அல்ல; ஈழ விடுதலை வேள்வியை வளர்க்க. முத்துக்குமார்களை இளையோர் நெஞ்சில் நிறுத்த வேண்டும். இரண்டு தேசத் துரோக வழக்குகளில் என் உரைகளையும், நீதிமன்றப் பதில்களையும் சிறு பிரசுரங்களாக்கி இளைய தலைமுறையிடம் சேர்ப்பிக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறவன்தான் இலட்சியத்தில் வெற்றி பெறுவான்.”

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விபரமே எனக்கு அண்மைக்காலம் வரை தெரியாது; நமது தேவதாசுக்கும் தெரியாது.

உங்களில் சிலருக்குத் தெரியுமே? நான் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது. 2008-க்குப் பின்னர், நான் அமெரிக்கா சென்று என் அருமைப் பேத்திகளைக் காண ஆசைப்பட்டாலும் எனக்கு விசா கிடையாது. சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரியாக 2008, 2009-இல் இருந்த ஹம்சா (தற்போது பிரிட்டனில் தூதராக உள்ளான்) நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று ஒரு கோப்பினைத் தயாரித்தான். கிளிநொச்சியில் புலிகளின் தளம் வீழ்த்தப்பட்டபின் சிங்கள இராணுவம் கைப்பற்றிய ஆவணங்களில், 1989 பிப்ரவரியில் நான் தலைவர் பிரபாகரன் அவர்களோடு இருந்த புகைப்படங்கள், பிஸ்டலைக் கையில் ஏந்திக் குறிபார்க்கும் புகைப்படம் உட்பட, வீடியோக்கள், எனது புலிச் சீருடை, அனைத்தையும் சேர்த்து நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று அனைத்து நாட்டுத் தூதரங்களுக்கும் அக்கோப்பினை அனுப்பி விட்டான்.

அதுகுறித்து அமெரிக்க அரசின் அதிகாரிகள் என்னிடம் இரண்டரை மணி நேரம் 2009-இல் விளக்கம் கேட்டனர்.

பாஸ்போர்ட் கிடையாது; பயணம் செல்லத் தடை:-

1989-இல் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை. நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அங்கம் அல்ல. ஆனால், அதன் தீவிரமான ஆதரவாளன் என விளக்கினேன். 1989-க்குப் பின் பலமுறை அமெரிக்கா சென்று உள்ளேன். 1998-இல் அமெரிக்க அரசின் அழைப்பால் சர்வதேசப் பார்வையாளராக 45 நாட்கள் அமெரிக்காவில் பங்கேற்றவன் என்று கூறியும் எனக்கு விசா கொடுக்கப்படவில்லை. கனடா மறுத்து விட்டது; சுவிட்சர்லாந்து இரண்டு முறை மறுத்து விட்டது; பிரிட்டன் இரண்டு முறை மறுத்து விட்டது. 2008-இல் நார்வே செல்ல அன்றைய அமைச்சர் எரிக் சோலேம் தலையிட்டதால் விசா கிடைத்தது. 2011-இல் பெல்ஜியம் செல்லத்தான் விசா கிடைத்தது. அதனால்தான் பிரெஸ்ஸல்சில் “ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடந்த “ஈழத் தமிழர் மாநாட்டில்” சுதந்திரத் தமிழ் ஈழம் காண பொது வாக்கெடுப்பு என்ற தீர்வினை முதன்முதலாக நான் பிரகடனம் செய்தேன்.” அதற்கு முன்னர் இந்தத் தீர்வினை எவரும் முன் வைத்தது இல்லை.

மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் இராமசாமி அவர்கள் நடத்திய உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்க இரண்டாம் முறை சென்றபோது கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்தே என்னைத் திருப்பி அனுப்ப அந்த அரசு முனைந்ததை முன்னரே கூறி இருக்கின்றேன்.

இம்முறை ஜெனிவாவுக்கு நான் வந்தால் மிகவும் பயன் தரும் என்று தம்பி திருமுருகன் காந்தி கூறினார். ‘எனக்கு விசா கிடைக்காது’ என்றேன். அந்தத் தம்பி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் மே 17 இயக்கத்தின் பிரதிநிதியாக ஜெர்மனியின் பிரெமன் தீர்ப்பு ஆயத்தில் சாதித்தது போல் இம்முறை ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலுக்குச் சென்று கடமை ஆற்றினார். எனது ஆங்கில உரையை வீடியோவில் பதிவு செய்து அங்கே ஒளிபரப்ப ஏற்பாடு செய்தார்.

இம்முறை “பாஸ்போர்ட்டுக்கு” விண்ணப்பித்த போதுதான் இப்படியொரு தேசத் துரோக வழக்கில் என்மீது 2010 ஆம் ஆண்டிலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட செய்தியே தெரிய வந்தது...


தொடரும்...

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment