கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழைக் கூலித் தொழிலாளர்களான 20 தமிழர்களை ஆந்திர மாநிலக் காவல்துறையினர் பலவந்தமாகக் கடத்திச் சென்று திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில் வனத்துறை சிறப்புக் காவல்படையினர் அவர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்து, கண்களைத் தோண்டி நாக்கையும், உயிர்த்தலத்தையும் அறுத்துப் பின்னர் சுட்டுக்கொன்று, அவர்களின் உடல்களைக் காட்டுக்குள் கொண்டு சென்று வீசினர். அவர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகவும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு காவல்துறையினரைத் தாக்கியதாகவும், அந்த மோதலில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அப்பட்டமான கட்டுக்கதையை ஆந்திர மாநில அரசு அவிழ்த்து விட்டது.
மனித உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு, வழக்கறிஞர் ஹென்றி திபேன் தலைமையிலான மக்கள் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள், மனித உரிமைக் காவலரும், மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் சுரேஷ் தலைமையில் உண்மை கண்டறியும் குழுவினரை அனுப்பி 20 தமிழர்களின் கோரப் படுகொலையின் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன.
இறந்தவர்களின் உடல்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து உடல்களைப் புதைக்கக் கூடாது, உடனடியாக எரிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி 14 பேர் உடல்களை எரிக்கச் செய்தனர். இயக்குநர் கௌதமனும், படவேடு கிராம மக்களும் காவல்துறையின் தாக்குதலையும் மீறிப் போராடியதால், 6 உடல்களை எரிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் ஆணையால் அந்த 6 உடல்களும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டன. ஆனால், இன்றுவரை பிரேத பரிசோதனை அறிக்கை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. படுகொலைகள் நடந்து 119 நாட்கள் ஆகியும் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு வார்த்தை அனுதாபம் தெரிவிக்கவில்லை. மாறாக ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு அரசைப் பாதுகாப்பதற்காக படுகொலைகள் குறித்த உண்மைகளை மூடி மறைக்க ஜெயலலிதா அரசு பலவழிகளில் முனைந்து வருகிறது. பாலச்சந்திரன், சேகர், இளங்கோ ஆகிய மூன்று சாட்சிகள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முன் சாட்சியம் அளித்ததால், குற்றவாளிகளைக் கண்டறிய மத்திய புலனாய்வுத்துறை சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது. அதனை எதிர்த்து ஆந்திர அரசு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தற்காலிகத் தடை ஆணை பெற்றுள்ளது.
இந்தப் பின்னணியில், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசும் தன்னை ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவும், 20 தமிழர்களின் படுகொலையில் நீதியை நிலைநாட்டவும் தமிழ முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனித உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு ஜூலை 15 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சருக்கு நான் கடிதம் அனுப்பினேன். 20 நாட்கள் ஆகியும் இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. நாங்கள் சந்திப்பதற்கு வாய்ப்புத் தரவில்லை.
இதே பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்திப்பதற்கு நான் நேரம் கேட்ட 24 மணி நேரத்தில் எனக்குப் பிரதமர் வாய்ப்பு கொடுத்தார். 20 தமிழர்கள் படுகொலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் கூறினார்.
இந்தச் சூழ்நிலையில், படுகொலையான 20 தமிழர்களின் குடும்பத்தினரைச் சென்னைக்கு அழைத்துவந்து முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க வைப்பதற்கு வருவாய் துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் அக்குடும்பத்தினருக்கு ஆசை வார்த்தை காட்டியும், எங்களுடன் சென்னைக்கு வராவிட்டால் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது என்று அச்சுறுத்தியும் கடந்த மூன்று நாட்களாக முயற்சித்தும் அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளாதபோதும், சித்தேரி மலையில் வசிக்கின்ற, படுகொலைக்கு உள்ளான பழங்குடியினரான 7 பேரின் குடும்பத்தினரை இன்று வலுக்கட்டாயமாகச் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். தாங்களாகத்தான் வந்தோம் என்றும், அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறும்படியும், இல்லாவிட்டால் பல இன்னல்களைச் சந்திக்க நேரும் என்றும் பயமுறுத்தி உள்ளனர்.
தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசுக்கு உதவுவதற்காகவே ஜெயலலிதா அரசுஇந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. அண்ணா தி.மு.க. அரசின் பாசிச நடவடிக்கைகளுக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, படுகொலையானவர்களின் குடும்பங்களை அச்சுறுத்தக் கூடாது என வலியுறுத்துகிறேன்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment