Friday, August 7, 2015

ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை சசிபெருமாள் உடல் நல்லடக்கம்! வைகோ அறிக்கை!

மது ஒழிப்புப் போராளி உத்தமத் தியாகி சசிபெருமாள் அவர்களின் உடல் நல்லடக்கம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று மாலை 3 மணி அளவில் சேலம் மாவட்டம் .மேட்டுக்காடு கிராமத்தில் சசிபெருமாள் குடும்பத்தினரின் சொந்த நிலத்தில் நடைபெறும். மது அரக்கனை ஒழிக்கப் போராடும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகளைச் சார்ந்தவர்களும், நாட்டு நலனில் அக்கறையுள்ள பொதுமக்களும் அந்த மாமனிதருக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தவும், நல்லடக்கத்தில் பங்கேற்கவும் வருமாறு தேசிய மக்கள் கூட்டமைப்பின் சார்பிலும், மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பிலும் அன்புடன் வேண்டுகிறேன்.

அரசியல் கட்சிகள், மற்றும் பொதுநல அமைப்புகள் தங்களை அடையாளப்படுத்தும் கொடிகளைத் தவிர்க்குமாறு வேண்டுகிறேன்.

மாமனிதர் சசிபெருமாள் அவர்களின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இருந்து பெறுவதற்காக சசிபெருமாள் அவர்களின் உடன்பிறந்த தம்பி செல்வம் அவர்களும், தியாகியின் இளைய மகன் நவநீதன் அவர்களும், நானும், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியும் நாகர்கோவில் செல்கின்றோம். இரவு 11 மணி அளவில் ஆசாரிபள்ளத்தில் இருந்து நாங்கள் புறப்பட்டு, பொழுது புலரும் வேளையில் சேலம் மாநகர் வழியாக .மேட்டுக்காட்டுக்குக் கொண்டு செல்கிறோம்.

இறுதிச் சடங்குகளை முறைப்படுத்தும் பணிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் அவர்களும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி தோழர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் தாமரைக்கண்ணன் அவர்களும் மேற்கொண்டு வருகிறார்கள்.

வீரத் தியாகி சசிபெருமாள் அவர்களின் நல்லடக்க நிகழ்ச்சிக்கு வெள்ளமெனத் திரண்டு வருகின்ற பொதுமக்கள் மிகுந்த கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் கடைப்பிடிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment