Thursday, September 3, 2015

திருவைகுண்டம் அணை தூர்வாரும் பணி - தீர்ப்பாய ஆணையை செயல்படுத்துக! வைகோ அறிக்கை!

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் 140 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. இதனால் அணையில் 8 அடி உயரம் தேங்க வேண்டிய தண்ணீர் 1 அடி மட்டுமே தேங்கியதால், 20 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்குப் போய்ச் சேருகிறது. 25,560 ஏக்கர் நஞ்சை நிலங்கள் முப்போக சாகுபடி பாசன வசதியை இழந்து உள்ளதால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

தாமிரபரணி பாசன விவசாயிகளின் நலனுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ள முதியவரும் தியாகியுமான நயினார் குலசேகரன் அவர்கள் என்னைச் சந்தித்து, நாங்கள் தொடர்ந்து போராடியும் இன்று வரை இருக்கும் அரசுகள் திருவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணியை மேற்கொள்ளவில்லை. நீங்கள்தான் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர ஏற்பாடு செய்து, இந்த விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் அவர்கள் மூலம் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடரச் செய்தேன்.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்தது. பின்னர் டெல்லியில் உள்ள தலைமை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்கு நடந்தது. மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் அணையைத் தூர்வார அனுமதி கொடுக்கவில்லை என்று தமிழக அரசு தீர்ப்பாயத்தில் கூறியது. ஜூலை 10 ஆம் தேதிக்குள் மத்திய அரசு அனுமதி வழங்காவிட்டால், ஜூலை 11 ஆம் தேதி அன்று தமிழக அரசு திருவைகுண்டம் அணையில் தூர் வாரும் வேலையை உடனே தொடங்க வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி அவர்கள் ஆணை பிறப்பித்தார். மத்திய அரசு ஜூலை 10 ஆம் தேதி அன்று அணையைத் தூர் வாரலாம் என ஆணை பிறப்பித்தது.

ஆனாலும், தமிழக அரசு வேலையைத் தொடங்கவே இல்லை. இந்த நிலையில், ஜூலை 27 ஆம் தேதி அன்று திருவைகுண்டம் அணைக்குச் சென்று தாமிரபரணி ஆற்றில் இறங்கி பார்வையிட்டதோடு, ஆகÞடு 6 ஆம் தேதிக்குள் தூர் வாரும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளாவிட்டால், தாமிரபரணி பாசன விவசாயிகளையும், தமிழகத்தில் உள்ள விவசாயிகளையும் திரட்டி பத்தாயிரம் பேரோடு நானே அணையில் தூர் வாரும் வேலையை மேற்கொள்வேன். கட்சி, ஜாதி, மதம் கடந்து விவசாயிகளின் வீட்டு வாலிபர்கள் மண்வெட்டி, கடப்பாறை, இரும்புக் கூடை, அரிவாளுடன் தூர் வார வரவேண்டும். பொக்லைன் இயந்திரங்களும் ஏற்பாடு செய்யப்படும். காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் விவசாயிகள் களம் இறங்குவோம் என்று அறிக்கை தந்ததோடு, விவசாயிகளைத் திரட்டுகிற வேலையிலும் ஈடுபட்டேன்.

முல்லைப் பெரியாறு போராட்டம் போல, திருவைகுண்டம் அணை பிரச்சினையும் போராட்டமாக வெடிக்கும் என்று புரிந்துகொண்ட தமிழக அரசு, ஜூலை 30 ஆம் தேதி அன்று பூமி பூஜை செய்து, தூர் வாரும் பணியைத் தொடங்கிவிட்டதாக மறுநாள் தீர்ப்பாயத்தில் தெரிவித்தது.

தூர் வாரும் பணியை அணைக்கட்டு பகுதியிலிருந்துதான் தொடங்க வேண்டும். பக்கவாட்டில், நீள வாட்டில் தூர் வாராமல், அகல வாட்டில்தான் தூர் வார வேண்டும் என்று தீர்ப்பாயத்தில் நான் வலியுறுத்தியதால் நீதியரசர் ஜோதிமணி அவர்கள் என் வாதத்தை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசு பொதுப் பணித்துறையினரும் அவ்விதமே வேலையைத் தொடங்க வேண்டும் என ஆணையிட்டார். பொதுப் பணித்துறையின் அதிகாரிகளும் அப்படியே நடந்துகொள்வோம் என உறுதி அளித்தனர்.

இந்நிலையில், அணைப் பகுதியில் அந்நியர்கள் உள்ளே வரக்கூடாது என்று பொதுப் பணித்துறையினர் வைத்திருந்த அறிவிப்புப் பலகைகளை உடனே அகற்ற வேண்டும் என்று நான் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கூறியவுடன், அவற்றை அகற்றவும் செய்தனர். இந்த நிலையில், அணைக்கட்டுப் பகுதியிலிருந்துதான் வேலையைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மறியலும், கடை அடைப்பும் ஆகஸ்டு 31 ஆம் தேதி அன்று நடத்திடத் தேவை இல்லை என்று அறிக்கை தந்தேன்.

ஆனால், இந்த மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிÞட் கட்சியின் மூத்த தலைவர் அண்ணன் நல்லகண்ணு அவர்கள் கலந்துகொண்டபோது, இதுபற்றி நான் அங்குள்ள நிலைமை குறித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியின் படி நடக்கிறார்களா? என்பதையும் விசாரித்தேன்.

வனத்துறையிடமிருந்து அனுமதி வராததால், அணைக்கட்டுப் பகுதியிலிருந்து வேலை தொடங்கவில்லை என்றும், ஒரு வாரத்திற்குள் அனுமதி கிடைத்தவுடன், அணைக்கட்டிலிருந்து தூர் வாரும் பணி நடைபெறும் என்றும் அதிகாரிகள் கூறினர். அண்ணன் நல்லகண்ணு அவர்கள் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவன். எந்தப் பிரச்சினையிலும் மக்கள் நலனை மட்டுமே கருதி நான் செயல்படுவேன் என்பது அனைவருக்கும் தெரியும்

நாசகார ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து அகற்றுவதற்கு கடந்த 19 வருடங்களாக நான் போராடி வருவதை அனைவரும் அறிவர். உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வெள்ளமாக பணத்தை பாய விட்டதால், தொடக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த சில கட்சிகளும், சில அமைப்புகளும் பின்னர் காணாமலே போய்விட்டார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை அதிபர் என்னை சந்திப்பதற்கு எத்தனையோ வழிகளில் முயன்றும், நான் சந்திக்க மறுத்துவிட்டேன் என்பதையும் மக்கள் நன்றாக அறிவார்கள்.

உயர்நீதிமன்றத்தில் நானே வாதாடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தீர்ப்பைப் பெற்றேன். உச்ச நீதிமன்றத்தில் 33 வாய்தாக்களில் நான் கலந்துகொண்டேன். ஆனால், உச்ச நீதிமன்றம் கடைசியில் ஆலையை நடத்தலாம் என தீர்ப்பளித்த போதிலும், அந்தத் தீர்ப்பில் எனது பொதுநல நோக்கையும், போராட்டத்தையும் நீதிபதிகள் பாராட்டினர்.

இதே திருவைகுண்டத்திலிருந்துதான் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடைப்பயணத்தைத் தொடங்கினேன். திருவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணியில் என்னிடம் கொடுத்த வாக்குறுதியின்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடந்துகொள்ள வில்லை. தூர் வாரும் வேலையை அணைக்கட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். 18 மணல்வாரி சட்டர்களையும் சீரமைக்க வேண்டும். தூர்வாரும் பணிகளை அகல வாக்கில்தான் மேற்கொள்ள வேண்டும். மழைக் காலமானாலும் தகுந்த இயந்திரங்களோடு தூர் வாரும் பணியைத் தொடருவோம் என்று தீர்ப்பாயத்தில் அதிகாரிகள் கூறி உள்ளார்கள்.

நீள வாட்டில் தூர் வாரும் பணியை நிறுத்திவிட்டு, அணைக்கட்டுப் பகுதியிலிருந்து அகல வாட்டில் பணியை மேற்கொள்ள வேண்டும். தூர் வாரும்போது அமலைச் செடிகளையும், மண்ணையும் அகற்றுவதோடு, எந்த விதத்தில் தூர் வாரினால் அணையில் தண்ணீர் கொள்ளளவு அதிகமாக தேக்க முடியும் என்பதை அனுபவம் வாய்ந்த விவசாயிகளே நன்கு அறிவார்கள்.

இந்தப் பிரச்சினையில் நான் கவுரவம் பார்க்கவில்லை. பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று சொல்பவனும் அல்ல நான். விவசாயிகளின் நலன்தான் எனது குறிக்கோள். மணல் கொள்ளை நடத்தி வரும் அண்ணா தி.மு.க. அரசும், முன்பு நடத்திய தி.மு.க. அரசும் இயற்கை வளங்களைச் சுரண்டி, கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதை கடுமையாக எதிர்க்கிறவன் நான். ஊழலை வேருடன் களைய வேண்டும் என்று போராடி வருகிறவன் நான் என்பதை நடுநிலையாளர்களும், கட்சிகளுக்கு அப்பாற்ப்பட்ட பொதுமக்களும் நன்றாக அறிவார்கள்.

31 ஆம் தேதி மறியல் போராட்டத்தில் கைதானவர்களில் சிலர் எங்கள் இயக்கத்தையும் சேர்த்தே பழி தூற்றினர் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. கற்புக்கரசி வீதியில் நின்றுகொண்டு நான் கற்புள்ளவள் என்று கூற வேண்டியதில்லை.

தூர் வாரும் பணியை அணைக்கட்டிலிருந்து தொடங்க வேண்டும். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். நயினார் குலசேகரன் போன்ற விவசாய சங்கத் தலைவர்களுக்கு சுயநலம் இருக்காது. அப்படிப்பட்டவர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்.

இந்தத் தூர் வாரும் பணியில் தவிர்க்க முடியாமல் மணலையும் அள்ள வேண்டும் என்றால் கண்காணிப்புக் குழுவினரின் மேற்பார்வை அவசியமாகும். நாடெங்கும் நடத்தப்படும் மணல் கொள்ளையைப் போல, திருவைகுண்டம் அணைப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெறாமல் நம்பிக்கையும், உத்தரவாதமும் ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

அண்ணன் நல்லகண்ணு அவர்கள் பங்கேற்றுள்ளதால், அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் நியாயம் இருக்கும். எனவே, தமிழக அரசு சந்தேகங்களுக்கு இடம் அளிக்காத வகையில் அணைக்கட்டிலிருந்து அகல வாட்டில் தூர் வாரும் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment