தாமிரபரணி ஆற்றில், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அணையின் மூலமாக 25,560 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதிலும் உள்ள மக்களுக்குக் குடிநீரும் கிடைக்கின்றது.
இந்த அணையில் பொதுப்பணித்துறையின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் எட்டு அடி ஆழம் நீர் தேங்கி நிற்க வேண்டிய இடத்தில் மணல் குவிந்து மேடு ஆகி விட்டது. அதில் அமளை, வேலி காத்தான் செடிகள் படர்ந்து நீரை உறிஞ்சுவதால், தற்போது அங்கே ஒரு அடி தண்ணீரே தேங்கி நிற்கிறது. சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று வீணாவதால், மூன்று போக விவசாயம் நடைபெற்ற பகுதி, கடந்த ஆண்டுகளில் ஒரு போகமாக மாறிவிட்டது. குடிதண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிட்டது.
விவசாயிகள் பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க திருவைகுண்டம் அணையைத் தூர்வார ஆணையிடக்கோரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 9, 30, மே மாதம் 8, 13, 28,30 ஆகிய நாள்களில், சென்னையில் விசாரணை நடைபெற்றது.
இறுதி விசாரணை ஜூன் 5 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் நீதி அரசர் ஜோதிமணி, தொழில்நிபுண உறுப்பினர் பேராசிரியர் யூசுப் அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.
முடிவில், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் திட்டவட்டமான தீர்ப்பைத் தந்தது.
பருவ மழையைக் கருத்தில் கொண்டு ஜூன் 10 ஆம் தேதிக்குள் மத்திய சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகம், திருவைகுண்டம் அணையைத் தூர் வாருவதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும். தவறினால், தமிழக அரசு மத்திய அரசின் அனுமதிக்குக் காத்திராமல் ஜூன் 11 ஆம் தேதி அணையை தூர்வாரும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு ஆகும்.
இந்நிலையில், தீர்ப்பு ஆயத்தினுடைய ஆணையை ஏற்று மத்திய சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகம் அணையைத் தூர் வாருவதற்கான அனுமதியை ஜூன் 10 ஆம் தேதி வழங்கி விட்டது. எனவே, ஜூன் 11 ஆம் தேதி அன்று தமிழக அரசு அணையைத் தூர்வாரும் பணிகளை தொடங்கும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். பணிகள் தொடங்கப்படவில்லை.
ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜோயலும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் ஜூன் 22 ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து தூர்வாரும் பணியைத் தொடங்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
8 கிலோ மீட்டர் நீளத்திற்கு மணலும், அமளிச் செடிகளும் தாமிரபரணி ஆற்றில் குவிந்து கிடக்கின்றன. இங்குள்ள மணலை எடுத்து அரசாங்கமே ஏலம் விட்டு பல கோடிக்கணக்கான ரூபாய் வருவாயும் பெறலாம்.
மழைக்காலம் தொடங்கி விட்டால், தூர்வாரும் பணியைக் கிடப்பில் போட்டுவிடலாம் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் ஆகும். ஏறத்தாழ 20 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், தூர்வாரும் பணியைத் தமிழக அரசு மேற்கொள்வதற்கான நடவடிக்கை எதுவும் தெரியவில்லை.
எனவே, குடிமராமத்து வேலையாக, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி, ஜூலை 6 ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் திருவைகுண்டம் அணைப் பகுதியில் தூர்வாரும் பணிகளை என்னுடைய தலைமையில் தொடங்குவோம் என்று, இரண்டு நாட்களுக்கு முன்னர் திருவைகுண்டம் அணையைப் பார்வையிட்டு அறிவித்தேன்.
இது அறப்போராட்டம். விவசாயிகளுக்கான போராட்டம். மக்களுக்காக மக்களே முன்நின்று மக்கள் நலன் காக்கும் அறப்போராட்டம். எனவே, தாமிரபரணி பாசனப் பகுதி விவசாயிகள் அனைவரும் வீட்டுக்கு ஒருவர் தவறாது மண் வெட்டி, இரும்புச் சட்டி மற்றும் தேவையான கருவிகளுடன் அறப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.
முல்லைப் பெரியாறு அணையைக் காக்க எட்டு ஆண்டுகள் போராடிய உணர்வோடு, காவிரி அமராவதி பாசனப் பகுதியைக் காக்கப் போராடிய உணர்வோடு தமிழகம் எங்கும் உள்ள கழகத் தோழர்கள் திருவைகுண்டம் அணை அறப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
காவல்துறை அடக்குமுறையை ஏவுமானால், அறவழியில் எதிர்கொள்வோம் எனத் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார் வைகோ.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment