இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும் இரத்த சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின் மணிகளே!
‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற மணிவாசகங்களைத் தம்பிமார்கள் சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய நெறியாக வழங்கிய தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவினை பெருஞ் சிறப்புடன் நடத்திடக் கடமை அழைக்கிறது.
இது ஆண்டுதோறும் வெறும் சம்பிரதாயத்திற்காக நாம் நடத்துகிற விழா அல்ல; உள்ளார்ந்த உணர்வோடு அண்ணாவின் வழி நடக்க நம்மைக் கூர்தீட்டிக் கொள்ள நடத்துகின்ற மாநாடு.
அறிஞர் அண்ணாவின் இலட்சியங்களை வென்றெடுக்க காலத்தின் அருட்கொடையாகப் பரிணமித்த இயக்கம்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா ஊட்டி வளர்த்த சகோதரப் பாசம் தான் நமது இயக்கத் தோழர்களை ஒரு குடும்பத்தினராகப் பின்னிப் பிணைத்து இருக்கின்றது.
திராவிட இயக்கத்தைச் சாய்ப் போம் என்றும், உருத்தெரியாமல் ஆக்குவோம் என்றும் எழுப்பும் வறட்டுக் கூச்சல் சூழ்ந்து இருக்கின்ற நேரம் இது. அண்ணாவின் இயக்கம் ஆயிரங் காலத்துப் பயிர். அதை அழித்திட முடியாது. அண்ணா விதைத்த நாற்றங்காலில் வளர்ந்தவர்கள் நாம். கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியினரால் பிரவாகமெடுத்த ஊழல் பணத்தால் வாக்குகள் விலை போனதால், நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எதையும் தாங்கும் இதயம் படைத்த கண்ணின் மணிகளே, நீங்கள் அதையும் தாங்கிக் கொண்டு, பூவிருந்தவல்லியில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டினை வெற்றி மாநாடு ஆக்கிக் காட்டினீர்கள்.
கரிய மேகங்களின் உரசலில் மின்னல்கள் பாய, இடிகள் முழங்க, பெருங்காற்று சூறைக்காற்றாய்ச் சுழன்றடிக்க, சடசடவென மழை சண்டமாருதமாய்ப் பெய்ய, அதற்கும் கலங்காமல், கொட்டக் கொட்ட மழையில் நனைந்து கொண்டே மாநாட்டை வெற்றி கரமாக நடத்திக் காட்டினோம். எந்தச் சோதனைக்கும் கலங்காத வீரர் பாசறை நமது இயக்கம் என்பதை நாடும் ஏடுகளும் உணர்ந்தன.
1949 இல் மழைத்துளிகளுக்கு மத்தியிலேதான் அறிஞர் அண்ணா அவர்கள் தி.மு. கழகத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய சரித்திரப் புகழ் பெற்ற நிகழ்வு நம் நினைவில் எழுந்தது. இந்த ஆண்டு அண்ணன் பிறந்தநாள் விழா மாநாட்டை இன்னமும் சிறப்பாக நடத்த எண்ணிய நான், அதுபற்றி நமது அவைத் தலைவர் ஆருயிர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்களிடமும், திருப்பூர் மாவட்டச் செயலாளர் நம் இயக்க முன்னோடிகளில் ஒருவரான ஆருயிர்ச் சகோதரர் ஆர்.டி.மாரியப்பன் அவர் களிடமும் கலந்துரையாடினேன்.
‘திருப்பூரில் நடத்தினால் சிறப்பாக இருக்குமே; அய்யாவும் அண்ணனும் சந்தித்த திருவிடமாயிற்றே என்று நான் மனதில் எண்ணிக் கொண்டு இருந்த வேளையில், ‘இந்த ஆண்டு மாநாட்டை திருப்பூர் மாவட்டத்தில் நடத்து கின்றோமே’ என்று அவர்கள் கூறியபோது, சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்ததைப் போல மகிழ்ந்தேன். ‘அதையேதான் நானும் எண்ணிக் கொண்டு இருந்தேன்’ என்றபோது, எங்களின் மகிழ்ச்சி இருமடங்காயிற்று.
ஜூன் திங்கள் முதல் நாளில் தாயகத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற கழகத்தின் உயர் நிலைக்குழுக் கூட்டத்தில் திருப்பூரில் மாநாடு என முடிவு எடுத்தோம். அதனை அடுத்து நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப் பினர்கள் கூட்டத்தில் அம் முடிவைத் தீர்மானமாக வைத்தோம். அனைவருக்கும் களிப்பு மேற்பட்டது. உவகை யோடு ஒப்புதல் அளித்தனர். ‘மாநாட்டை எழுச்சியோடு நடத்துவோம், அதற்குரிய பணிகளை இந்த மாதத்திலேயே துவங்குவோம்’ என்றனர். மாவட்டக் கழகக் கூட்டங்களை நடத்திடவும், அதனை அடுத்து ஒன்றிய-நகர வாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி மாநாட்டுப் பணிகளை முடுக்கிவிடப் போவதாகவும் உறுதி கூறினர். அதன்படியே மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
வரலாறு மீண்டும் திரும்புகிறது என்பார்களே, அந்த வகையில், ‘இதோ மீண்டும் 1994 சென்னை எழுச்சிப் பேரணி திரும்புகிறது. 1995 திருச்சி மாநில மாநாடு திரும்புகிறது. 1998 சென்னை மறுமலர்ச்சிப் பேரணி திரும்புகிறது’ எனும் விதத்தில் வருகிற செப்டம்பர் 15 இல் இலட்சக்கணக்கில் நம் தோழர்களும், ஆதரவாளர்களும் பங்கேற்கும் விதத்தில் மாநாட்டை நடத்துவோம்.
நான் பிறந்தநாள் விழா கொண் டாடுவது இல்லை என்பதை அனைவரும் அறிவர். எனது பொதுவாழ்வு 50 ஆண்டு நிறைவுற்று 51 ஆவது ஆண்டில் பயணமாகிறது. எனவே, என் பொதுவாழ்வுப் பணியை நினை ñட்ட பொன்விழா மாநாடு நடத்த வேண்டுமென்று தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், கழகத்தின் முன்னணியினரும் மிக்க ஆர்வத்தோடு முடிவு செய்தார்கள். ஆனால், ‘பொன் விழா மாநாடு நடத்த விருப்பம் இல்லை; எனக்காக எந்த விழாவும் நடத்தக்கூடாது’ என்று தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்குழுவில் அறிவித்து விட்டேன்.
சகாப்த நாயகன் அண்ணாவுக்கு விழா எடுப்போம். அவரது பிறந்த நாளை, தொடர்ந்து நாம்தான் வரலாறு போற்றும் மாநாடுகளாக நடத்தி வருகின்றோம்.
21 ஆண்டுகளாக அரும்பாடு பட்டு உழைத்த என் இனிய சகாக்களே, நேசத்துடன் உங்கள் கரங்களைப் பற்றிக்கொண்டு வேண்டுகிறேன். திரும்பும் திக்கெல்லாம், விழிப்பார்வை படும் இடமெல்லாம், ‘திருப்பூரில் அண்ணா பிறந்தநாள் மாநாடு’ என்ற வாசகங்கள் வழக்கம்போல சுவர்களில் பளிச்சிடட்டும். சக்திக்கு மீறி பொருள் செலவு செய்து கட்சியைப் பாதுகாத்திடும் தங்கங்களே, இந்த மாநாடு நம் இயக்க வரலாற்றில் மகோன்னதமான திருப்பமான எழுச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றேன். அண்மையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒரு கருத்தைச் சொன்னார். அவர் சொன்ன கோணத்தில் நானே யோசிக்கவில்லை.
‘கட்சி தொடங்கியபிறகு, அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்ட ம.தி.மு.க., 2011 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டபோது, இது எப்படிச் சாத்தியமாகும்? ஆங்காங்கு ம.தி.மு.க.வினர் சிலர் சுயேட்சையாகப் போட்டியிடு வார்கள் என்று எண்ணினேன். ஆனால் அதற்கு மாறாக, 234 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட ம.தி.மு.க. தொண்டர்கள் யாரும் சுயேட்சையாகப் போட்டி யிடவில்லை. இத்தகைய இராணுவக் கட்டுப்பாட்டை வேறு எந்தக் கட்சியிலும் பார்க்க முடியாது’ என்றார். நான் இறும்பூது எய்தினேன். நமது கழகத்தின் கட்டுப்பாடு கண்டு நாடே வியக்கின்றது.
எவரும் விரல் நீட்டிக் குற்றஞ்சாட்ட முடியாதவாறு நேர்மையோடும், நாணயத் தோடும், பொதுவாழ்வில் தூய்மையோடும் இயங்குவதால், தலைதாழாத கம்பீரத்தோடு நிற்கிறோம். இதுவே நமது சாதனை; இதுவே நமது வெற்றி!
அண்மையில் நமது இயக்கத்தின் செயல்வீரர், பஹ்ரைன் நாட்டில் உள்ள பாரதி தமிழ்ச் சங்கத் தலைவர் வல்லம் பஷீர் அவர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். ‘மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி பஹ்ரைன் வந்து இருக்கின்றார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு நானும் நண்பர்களும் சென்று இருந்தோம். அப்போது அவர் எங்களிடம், “வெளிநாடுகளில், தென்கிழக்கு ஆசியாவில், மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்கள் உயிர்த்துடிப்போடு செயல்படுகின்றார்கள் என்பதை நேரில் பார்க்கிறேன்” என்று பாராட்டியதாகச் சொன்னார். சிங்கப்பூர் கழகத் தோழர்கள் மாதந்தோறும் சந்தித்துக் கலந்துரையாடுகின்றார்களாம்.
போராட்டங்கள் நிறைந்த அரசியல் களத்தில், கூரிய கற்கள், குத்திக் கிழித்திடும் முட்கள் நிறைந்த பாதையைக் கடந்து வந்து இருக்கின்றோம். விடியல் தோன்றும், வெற்றித் திருமகளின் புன்னகை நம் மீது படியும். உண்மையான பாடு களுக்குப் பலன் இல்லாமல் போகாது என்பதுதான் வரலாறு!
தமிழ் மொழியின் உரிமை காத்திட, தமிழர் இனம் காத்திட, மரண பூமியிலே துடிக்கின்ற ஈழத் தமிழர்களின் கண்ணீர் அகன்று சுதந்திரத் தமிழ் ஈழம் மலர, தாய்த் தமிழகத்தின் உரிமை களுக்காக நம்மைப்போல அர்ப்பணிப் போடு போராடிய இயக்கம் எதுவும் கிடையாது. அதற்கு ஆணித் தரமான சான்றுகள் ஆயிரம் உள்ளன. ஆயினும், நாங்கள்தான் போராடினோம் என்று நாம் தம்பட்டம் அடித்துக் கொள்வது இல்லை.
தம்பிமார்களின் இதயத்தில் விடுதலை தாகத்தை, கொள்கை உணர்வை ஊட்டியவர் அறிஞர் அண்ணா. அந்த உணர்ச்சிதான் நமது உள்ளங்களிலும் உள்ளது. தமிழ் ஈழ விடுதலையே இலக்கு என்று, நமது இயக்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை சொல்லி வருகிறோம். அதற்காக, எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாமல் அனைத்துக் களங்களிலும் நின்று போராடிய ஒரே இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
மூன்று மாநிலங்களைக் கடந்து சென்று மத்திய பிரதேசத்தில் விந்திய மலைச் சரிவிலே அறப்போர் நடத்திடலாம் என்று கனவிலாவது வேறு எவரேனும் எண்ணியிருப்பார்களா? நாம்தான் சாஞ்சியில் அறப்போர்க்களத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம்.
தோழர்கள் திரட்டிக் கொடுத்த கழக வளர்ச்சி நிதியை, ஈழத் தமிழர்களின் உரிமை விடியலுக்காக நாம் அமைத்த களங்களுக்காக, பல்வேறு அமைப்புகளை இணைத்து நடத்திய நிகழ்ச்சிகளுக்காக, கணக்கிட முடியாத அளவிற்கு மகிழ்ச்சியோடு செலவிட்டு இருக்கின்றோம்.
கொடியவன் இராஜபக்சே இந்தியாவிற்குள் எங்கே வந்தாலும், அங்கெல்லாம் சென்று அவனை எதிர்த்துப் போராடிய ஒரே இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான். தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்து இருந்தபோதிலும், நரேந்திர மோடி தலைமை அமைச்சராகப் பதவி ஏற்கிற நாளிலேயே இராஜ பக்சே வருகையை எதிர்த்து டில்லியில் கறுப்புக் கொடி காட்டுகின்ற மனத் துணிவும், கொள்கைத் துடிப்பும், இலட்சியத் தாகமும் நம்மைத் தவிர வேறு யாரிடம் காண முடியும்?
இலட்சியங்களுக்காகப் போராடியதில் அதிகார அரசியலில் பல வாய்ப்புகளை இழந்து இருக்கிறோம். ஆனால் கொள்கை உரம் வைரமாகப் பாய்ந்த வார்ப்படம்தான் நமது இயக்கம். ஊழல் என்கிற கொள்ளை நோய் தமிழகத்தின் பொது வாழ்வைச் சூறையாடி வருகிறது. சதுப்பு நிலத்தில் புதைமணலில் தமிழக அரசியல் சிக்கி உள்ளது. தாய்த் தமிழகத்தை மீட்க வேண்டும்; அத்தோடு இயக்கத்தையும் பாதுகாத்திட வேண்டும்; கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும்.
நம் கடமையைச் செய்வோம். நாம் எதிர்பாராத நேரத்தில் அதனுடைய பலனும் விளைச் சலும் தாமாகத் தேடி வரும் என்பதனை நம் மனதில் பதிய வைக்க, சென்னையில் நடை பெற்ற பொதுக்குழுவில் நமது துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா இதிகாசப் பார்வையில் ஒரு கதையைச் சொன்னார். இங்கு அதில் சிறிது மாற்றம் செய்து தருகிறேன்.
நம்பிக்கை வெல்லும் அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்து இருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தார். யாருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை. முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு. ‘இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது; வானம் பொய்த்துவிடும்’ என்று.
இந்தச் சாபம் பற்றிக் கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரது காலடியில் அமர்ந்து மன்னிப்புக் கேட்டனர். ‘சாபத்திற்கு விமோசனம் கிடையாது’ என்று கூறிவிட்டார் முனிவர்.
மேலிருந்து இதனைக் கவனித்த பரந்தாமன், தனது சங்கினை எடுத்துத் தலைக்கு வைத்துப் படுத்து விட்டான். பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை. இன்னும் 50 ஆண்டுகளுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான்.
அப்போது அந்த ஊரில் ஓர் அதிசயம் நடந்தது. ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைத் தூக்கிக் கொண்டு போய் வயலுக்குள் உழுது கொண்டு இருந்தான். அனைவருமே அவனைப் பரிதாபமாகப் பார்த்தனர். மழையே பெய்யாது எனும்போது, இவன் உழுது என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு.
“நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா?” என்று அவனிடம் கேட்டே விட்டனர். அதற்கு அவன் அளித்த பதில்தான் நம்பிக்கையின் உச்சம்: “50 ஆண்டுகளுக்கு மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்படி என்றே எனக்கு மறந்து போய்விடும். அதனால்தான் தினமும் உழுது கொண்டு இருக்கிறேன்,” என்றான்.
இது வானத்தில் இருந்த பரந்தா மனுக்குக் கேட்டது. அவரும் யோசித்தார். 50 ஆண்டுகள் சங்கு ஊதாமல் இருந்தால், அதன் பிறகு எப்படி ஊதுவது என்று நமக்கும் மறந்து போயிடுமே என்று நினைத்து சங்கை ஊதிப் பார்த்தார். இடி இடித்தது; மழை பொழிந்தது. அந்த உழவனின் நம்பிக்கை வென்றது. "தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" அதுபோல எதிர்பார்த்த வெற்றிகள் இதுவரை கிடைத் திராத போதிலும், தமிழகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். அண்ணாவின் இலட்சியத்தை, அண்ணாவின் பெருமையை, அண்ணாவின் புகழைக் காக்கின்ற பணிகளை நாம் தொடர்ந்து செய்வோம். நமது நம்பிக்கை வெல்லும்!
திருப்பூர்-பல்லடம் சாலையிலே அறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாட்டை நடத்துவதற்கான இடத்தைத் தேர்வு செய்து விட்டதாக அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி, கழகத்தின் ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் சகோதரர் கணேச மூர்த்தி, மாவட்டச் செயலாளர் அன்புமிகு ஆர்.டி. மாரியப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கண்ணின் மணிகளே, கழகத் தோழர்களே!
இப்போது இருந்தே திட்ட மிடுங்கள். அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டைச் சிறப்பிக்க அலைகடலெனத் திரண்டிடுவோம்! எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்,
வைகோ
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment