தமிழ்நாட்டில் சுற்றுச் சூழலை நாசமாக்கி, கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்குக் கேடு செய்து, விவசாய நிலங்களை அடியோடு பாழாக்கி வரும் சீமைக் கருவேல மரங்கள் உயிர்க்காற்றை உறிஞ்சிக்கொண்டு, கரிக்காற்றை வெளியிடுகின்றன; வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சிக் கொள்கின்றன; இதனால், மனித வாழ்க்கைக்கும் கால்நடைகளுக்கும், பெரும் கேடு விளைவதால் சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வைகோ அவர்கள் ரிட் மனு தாக்கல் செய்து வழக்குத் தொடுத்தார்.
நீதியரசர்கள் அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ‘நீதிமன்றத்தின் வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக, இந்த மாவட்ட ஆட்சியர்கள் எடுத்த மேல் நடவடிக்கை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்பிறகு இந்த வழக்கு மூன்று முறை விசாரணைக்கு வந்தபோதும், சீமைக் கருவேல மரங்களை அகற்ற முதல் கட்ட வேலைகள் தொடங்கி இருப்பதாக அறிக்கை தந்தனர்.
2017 ஜனவரி 10 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வைகோவின் வாதங்களைக் கேட்ட நீதியரசர் செல்வம் அவர்கள், ‘13 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சீமைக்கருவேல மரங்களை அகற்றுகி;னற பணியை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்றும், மாவட்டத் தலைநகரங்களில், மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் இப்பணி நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்.
இன்று 2017 ஜனவரி 31 இல் இந்த வழக்கு அதே நீதியரசர்கள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வைகோ தான் எடுத்து வைத்த வாதத்தில்,
“சீமைக் கருவேல மரங்களை அகற்ற இந்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை;
20 சதவிகித மரங்கள்கூட அகற்றப்படவில்லை;
மாவட்ட நீதிபதிகள் மிகுந்த அக்கறையோடு மாவட்டத் தலைநகரங்களில் இந்தப் பணியை மேற்பார்வை செய்தனர்;
பொதுமக்களின் சொந்த நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற முடியவில்லை என்று அரசு கூறுகின்றது;
அந்தப் பட்டா நிலங்களிலும் தமிழக அரசாங்கத்தின் செலவிலேயே சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, அந்தச் செலவுத் தொகையை நில உடைமையாளர்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம்’;
மேலும், 13 மாவட்டங்கள் அன்றி, தமிழ்நாடு முழுவதிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற எனது ரிட் மனுவிலேயே கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கான உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுகிறேன்” என்று கூறினார்.
நீதியரசர் செல்வம் அவர்கள், சீமைக் கருவேல மரங்களை அகற்ற;த திட்டவட்டமான ஆணை பிறப்பித்தார்.
அதன்படி, மாவட்ட ஆட்சியகர்கள், வட்ட ஆட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் முழு வீச்சில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்;
இதுவரை என்ன நடந்துள்ளது என்று நாங்களே சுற்றிப் பார்த்ததில் மிகக் குறைந்த அளவில்தான் வேலை நடந்து இருக்கின்றது;
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்த நீதிமன்ற ஆணையைத் துளியளவும் செயல்படுத்தவில்லை; எனவே இந்த நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு தாக்கீது பிறப்பிக்கின்றது;
மாவட்ட நீதிபதிகளும், அதற்கு அடுத்த நிலையில் உள்ள முன்சீப்புகளும் இன்றைக்கு இந்த நீதிமன்றம் அறிவிக்கிற வழக்கறிஞர்களையும் சேர்த்துக்கொண்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவதை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த வேண்டும்;
பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை நில உடைமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றாவிட்டால், அரசாங்கமே செலவு செய்து பொக்லைன் உள்ளிட்ட தேவையான இயந்திரங்களைக் கொண்டு அகற்ற வேண்டும்;
அதற்காகச் செலவழிக்கப்பட்ட தொகையை இரண்டு மடங்காக நில உடைமையாளர்களிடம் வசூலிக்க வேண்டும்;
சீமைக் கருவேல மரங்களால் ஏற்படுகிற கேடுகள், ஆபத்துக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் உரிய முறையில் விழிப்புணர்வுக்கான விளம்பரம் செய்ய வேண்டும்;
தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு மனுதாரர் வைகோ தனியாக ரிட் மனு தாக்கல் செய்யலாம்” என்று அடுக்கடுக்கான உத்தரவுகளைப் பிற்ப்பித்ததுடன், வழக்கு விசாரணையை பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் என மதிமுக தலைமை கழகமான தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி