Wednesday, January 18, 2017

பவானி குறுக்கே தடுப்பு அணை கட்டுவதை எதிர்த்து, ஜனவரி 20: கோவையில் ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!

பவானி ஆற்றின் குறுக்கே கேளரம் புதிய தடுப்பு அணை கட்டுமானப் பணிகள் தொடக்கம்! ஜனவரி 20: கோவையில் ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை என்ற இடத்திலும் மஞ்சக்கண்டி என்ற இடத்திலும் தடுப்பு அணை கட்டும் பணிகளைக் கேரள அரசு துவங்கியுள்ளது. மேலும் பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய இடங்களிலும் தடுப்பு அணை கட்டப் போவதாகத் தகவல் வந்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டித் தண்ணீரைத் திருப்பும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. தமிழக மக்களின் போராட்டத்தாலும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததாலும் அந்தத் திட்டத்தைக் கேரள அரசு கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதன்பிறகு, ‘அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசனத் திட்டம்’ என்ற பெயரில் சிறுவாணி நதியின் குறுக்கே பெரிய அணையைக் கட்டி அதன் மூலம் ஆண்டுக்கு 4.5 டிஎம்சி தண்ணீர் எடுக்கும் திட்டத்தை 2012 ஆம் ஆண்டு கேரள அரசு தொடங்கியது.

கடந்த ஆண்டு அந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் ஆய்விற்கான அனுமதியையும் மத்திய அரசிடம் இருந்து கேரள அரசு பெற்று விட்டது. பின்பு தமிழகத்தின் கடும் எதிர்ப்பின் காரணமாகவும், மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியைத் திரும்பப் பெற்றதன் விளைவாகவும், அந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை.


இந்த இரண்டு திட்டங்களும் தோல்வி அடைந்த நிலையில், தற்போது பவானி ஆற்றின் குறுக்கே பல தடுப்பு அணைகளைக் கட்டித் தண்ணீர் எடுக்கும் திட்டத்தைக் கேரள அரசு தொடங்கியுள்ளது. அதற்கான அணை கட்டும் பணிகளைத் தொடங்கி விட்டனர். வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வறட்சியின் காரணமாக இப்போது கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகின்றது. குடிநீருக்காகப் பொதுமக்கள் குடங்களுடன் அலைந்து கொண்டு இருக்கின்றனர். சிறுவாணி அணையில் தண்ணீர் எடுக்க முடியாத அளவிற்கு நீர்மட்டம் மிகவும் கீழே போய் விட்டது. அந்த அணையின் உள்பகுதியில் இருந்து பம்ப் மூலம் குடிநீர் பெறுவதற்கும் கேரள அரசு அனுமதிக்கவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக கோவை மாநகருக்கு சிறுவாணி தண்ணீர் வரவில்லை. பவானி தண்ணீர்தான் பில்லூர் திட்டத்தின் மூலம் கோவை மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைச் சமாளிக்க உதவுகின்றது. தற்போது கட்டப்படுகின்ற புதிய தடுப்பு அணைகளால் அந்தப் பில்லூர் திட்டத்திற்கும் ஆபத்து வந்து விட்டது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு கேரள அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழகத்தின் இசைவு இல்லாமல், பவானி ஆற்றின் குறுக்கே எந்த ஒரு தடுப்பு அணையையும் கட்டக் கூடாது. கேரள அரசின் அக்கிரம நடவடிக்கையைக் கண்டித்தும், இதனை மத்திய அரசை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், ஜனவரி 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்குக் கோவை மாநகரில் கோவை மாநகர், கோவை புறநகர் மாவட்ட மதிமுக சார்பில், கழகத்தின் ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் கணேசமூர்த்தி அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. மாரியப்பன், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர். மோகன்குமார். கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில், நீலகிரி மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன், இளைஞர் அணிச் செயலாளர் பொறியாளர் ஈஸ்வரன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன், டி.டி.அரங்கசாமி ஆகியோர் முன்னிலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கழகத் தோழர்களும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment