இந்தியா என்கின்ற நாடு, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டு அமைப்பு ஆகும். பல மொழிகள், பல சமயங்கள், பல்வேறு நாகரிகங்கள் கலாச்சாரங்களின் ஒன்றிணைப்பாக இந்திய நாடு திகழ்கின்றது. இதில் எந்தத் துறையில் ஒரு ஆக்கிரமிப்பு நிகழ்ந்தாலும், உரிமைகளில் கை வைத்தாலும் இந்திய ஒருமைப்பாடு ஆட்டம் கண்டு விடும்.
தொன்றுதொட்டுத் தமிழர்கள் கொண்டாடி வருகின்ற பண்டிகை தை முதல் நாள் பொங்கல் நன்னாள் ஆகும். அந்த நாள் மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாள்கள் பட்டியலில் இதுவரை இடம் பெற்று இருந்தது. தற்போது கிடைத்து இருக்கின்ற செய்தியின்படி, மத்திய அரசு அந்தப் பட்டியலில் இருந்து தை முதல் நாளை நீக்கிவிட்டு, விருப்பம் உள்ள பகுதிகளில் விடுமுறை நாளாகக் கொண்டாடலாம் என்று அறிவித்து இருப்பது மன்னிக்க முடியாத அநீதி ஆகும்.
தீபாவளிப் பண்டிகையை பிற சமயத்தினர் கொண்டாடுவது இல்லை. அதுபோல இÞலாமியர்களும், கிறித்துவர்களும் கொண்டாடும் பண்டிகைகளைப் பிற சமயத்தினர் கொண்டாடுவது இல்லை. ஆனாலும் அந்த நாள்கள் கட்டாய விடுமுறை நாளாகக் கொண்டாடும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மகாவீரர் பிறந்தநாளை இந்தியா முழுமையும் கொண்டாடுவது இல்லை. ஆனாலும் அம்மாமனிதரின் உயர்வைக் கருதி, மத்திய அவரது பிறந்த நாள் அனைத்து இந்தியாவிலும் மத்திய அரசின் விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
தசரா பண்டிகையும் இந்தியா முழுமையும் கொண்டாடப்படுவது இல்லை. அதுவும் கட்டாய விடுமுறை நாள்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
தமிழர்களின் தொல் பழங்கால விழா நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை மத்திய அரசு தடை செய்தது, தமிழர்களின் இதயத்தில் வேல் பாய்ந்த வேதனை ஆகும். அந்தத் தடையை நீக்கக் கோரித் தமிழகமே கொந்தளித்துள்ள நிலையில், தை முதல் நாளைக் கட்டாய விடுமுறை நாள்களின் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கி இருப்பது, வேல் பாய்ந்த புண்ணில் சூட்டுக்கோலைத் திணிக்கின்ற கொடுமை ஆகும். தமிழர் நாகரிகத்தின் மீதும், பண்பாட்டின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகவே கருதுகின்றேன்.
இந்தியத் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, தை முதல் நாள் விடுமுறையை இதுவரை இருந்த வந்த கட்டாய விடுமுறை நாள்கள் பட்டியலில் மீண்டும் இடம் பெறச் செய்ய வேண்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தமிழின முதல்வர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment