இன்று (2017 ஜனவரி 12 ஆம் தேதி) மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் டெல்லி, 2 கிருஷ்ண மேனன் மார்க் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் காலை ஒன்பது மணிக்கு நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 25 நிமிடங்கள் நீடித்தது.
அப்போது, தமிழகத்தில் நிலவுகின்ற வரலாறு காணாத வறட்சியால் தமிழக மக்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற தாங்க முடியாத வேதனையையும் துன்பத்தையும், அமைச்சரிடம் துயரத்தையும் வைகோ எடுத்துரைத்தார்.
பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை, பொதுமக்களுக்குக் குடிதண்ணீரும், கால்நடைகளைப் பராமரிக்க நீரும் இல்லாத நிலைமையை விளக்கமாக எடுத்துக்கூறி, வறட்சி மாநிலமாகி விட்ட தமிழகத்திற்கு, தமிழக அரசு வேண்டுகிற நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கீழ்க்கண்ட கோரிக்கைக் கடிதத்தை நிதி அமைச்சரிடம் தந்தார்.
“இந்தியாவில் தலைவிரித்து ஆடிவரும் ஊழல் நடவடிக்கைகளை, கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று 2016 நவம்பர் 8 ஆம் தேதி இந்தியப் பிரதமர் அறிவித்ததையும், அதன் தொடர் நடவடிக்கைகளையும் நான் வரவேற்கின்றேன்.
கவலை தரும் தமிழகத்தின் வறட்சி நிலைமையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.
வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதை நீங்கள் அறிவீர்கள். 38 சதவிகித மழைதான் பெய்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டது இல்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும்கூட, கர்நாடக மாநிலம் தண்ணீரைத் திறந்துவிடாததால், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பிரதேசம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. மாநிலம் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் குடிநீர்ப் பிரச்சினையை ஒரு மாதம்தான் தாக்குப்பிடிக்க முடியும். தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரமான மதுரையிலும் இதே நிலைமைதான்.
ஜனவரி 14 ஆம் தேதிக்குப் பின்னர் அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.
பயிரிட்டது எல்லாம் பாழானதால் 130க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்துள்ளனர். உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், கோடிக்கணக்கான விவசாயிகள் தாங்க முடியாத துன்பத்துக்கு ஆளாவார்கள். அதிகமான தற்கொலைகள் நிகழக்கூடும் என அஞ்சுகிறேன்.
தண்ணீர்ப் பற்றாக்குறையால் கால்நடைகளும் செத்து மடிகின்றன. ஒன்பது மாதம் கழித்துத்தான் அடுத்த பருவமழையை எதிர்பார்க்க முடியும். எனவே, உடனடியாகத் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, தேசியப் பேரிடர் மீட்பு நிதியில் இருந்து தேவையான நிதியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டுகிறேன்.
நீங்கள் தாக்கல் செய்ய இருக்கின்ற 2017-18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் விதத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மற்றும் நவீன மயமான தண்ணீர்த் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள், தமிழகத்தின் நிலைமையை கவனத்தில் எடுத்துக்கொண்டு மத்திய அரசு செயல்படும் என வைகோ அவர்களிடம் உறுதி அளித்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment