தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆற்றிய உரையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தின் உரிமைகளுக்குப் போராடிய முதல்வர் என்று என்று புகழாரம் சூட்டி இருப்பது பொருத்தமானதே.
தமிழ்நாட்டின் தொன்மை கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை ஆணையை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டில் எழுந்த மக்கள் இயக்கம்தான் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிப்பதற்கு வழி அமைத்தது என்றும், அவசரச் சட்டத்திற்கு மாற்றாக உரிய சட்டத் திருத்தங்களுடன் சட்ட முன்வரைவு உடனடியாகக் கொண்டு வரப்படும் என்று கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை, ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்யவும், தமிழை வழக்காடு மொழியாக ஆக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைளால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சரியான அணுகுமுறை மேற்கொண்டதால் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டு இருக்கின்றது. அதன் அடிப்படையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய வரி வருவாயில் தமிழகத்திற்கு உரிய நிதிப் பங்கீடு அளிக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் நிதி இழப்பைக் கருத்தில் கொண்டு வரி வருவாயில் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரி இருப்பது நியாயமானது ஆகும்.
கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் வறட்சியைத் தமிழ்நாடு சந்தித்துள்ளதால் தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 39,595 கோடி ரூபாய் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் உரையில் குறிப்பிட்டு இருக்கின்றார்.
வர்தா புயலால் சென்னையில் இலட்சக்கணக்கான மரங்கள் வேரோடு பெயர்ந்து விட்டதால், சுற்றுச் சூழலைப் பேணும் வகையில் தமிழக அரசு சார்பில் மரம் நடும் பெரும் திட்டம் மறைந்த ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.
ஈழத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்ட சிங்கள பேரினவாத அரசைச் சர்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்றும், ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவம் கைப்பற்றி உள்ள நிலங்களை மீட்டு, தமிழர்களுக்கு மீள் ஒப்படைப்பு செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1974 ஆம் ஆண்டு கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததால், தமிழக மீனவர்களின் உரிமை பறிபோனதை ஆளுநர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழகம் வந்தாலும், பொது விநியோக முறை பாதிக்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.
உணவு தானிய விளைச்சலை ஊக்கப்படுத்த 803 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; ஆனால், தமிழ்நாட்டில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது பற்றி ஆளுநர் உரையில் இடம் பெறாததும், தமிழக முதல்வர் அறிவித்த வறட்சி நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்தும் அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிக்கின்றது. மேலும், முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு நான்காயிரம் ரூபாயாக உறுதி செய்ய வேண்டும் என்ற கரும்பு விவசாயிகளின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
குடிசைகள் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவதற்கான அறிவிப்பும் மதுரை, தூத்துக்குடியில் தொழில் பூங்காவுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
திருப்பெரும்புதூரில் மூடப்பட்ட பன்னாட்டு நிறுவனமான நோக்கியா ஆலையை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் மீண்டும் இயங்கிடச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை சரியானது.
தமிழ்நாட்டை அறிவுத்துறையில் மேம்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றாலும், மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படாதது ஏமாற்றம் அளிக்கின்றது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்ததைப் போன்று தமிழகத்தில் மீண்டும் குடிமராமத்துத் திட்டத்தைக் கொண்டு வர வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பாராட்டத்தக்கது ஆகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment