பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவரும், மத்திய அமைச்சர் மற்றும் தமிழக ஆளுநராகப் பொறுப்பு வகித்தவருமான, எனது மதிப்பிற்குரிய சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.
பல ஆண்டுகள் அவருடன் நேடியாகப் பழகி இருக்கின்றேன்.
ஒரு கட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் ஆட்சி கலைக்கப்பட்டபோது, மாநிலங்கள் அவையில் அகாலி தளம் கட்சியின் உறுப்பினர் குர்சரண்சிங் தோரா அவர்கள் அவையில் கலந்து கொள்ளாத நிலையில், தன்னந்தனியனாகக் காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்து, சபையை நடக்க விடாமல் செய்தேன்.
மறுநாள் வெளியான ஆங்கில ஏடுகள் இந்தச் செய்தியை வெளியிட்டன. அன்று மாலை கபூர்தலா மாளிகையில் நான் அகாலி தளம் தலைவர்களைச் சந்தித்தபோது, என்னைக் கட்டித் தழுவிப் பாராட்டியவர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் ஆவார்கள்.
1998 நவம்பர் 19 ஆம் தேதி என் மகன் துரை வையாபுரியின் திருமணம் சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்றது, அன்றைய மத்திய இராணுவ அமைச்சரும் எனது ஆருயிர்ச் சகோதரருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள், ஒரு சிறிய விமானத்தை ஏற்பாடு செய்து, தன்னோடு 5 மத்திய அமைச்சர்களைத் திருமணத்திற்கு அழைத்து வந்தார். அவர்களுள் ஒருவர் சுர்ஜித் சிங் பர்னாலா.
அதிர்ந்து பேச மாட்டார். மிக மென்மையாகப் பேசுவார். இனிமையாகப் பழகக் கூடியவர். அவரது மறைவுச்செய்தி என்னை மிகவும் பாதித்தது.
அன்னாரது குடும்பத்தாருக்கும், சகாக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment