Monday, May 11, 2015

மே - 12 : உலக செவிலியர்கள் தினம் வைகோ வாழ்த்து!

‘உற்றான் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான் என்று அப்பால் நால் கூற்றே மருந்து!

மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவர், மருந்து, அம்மருந்தை அருகிலிருந்து முறையாக வழங்கும் தாதி என்ற நான்கு கூறுகளைக் கொண்டது என்று உலகப் பொதுமறையைத் தந்த அய்யன் திருவள்ளுவர் போதிக்கின்றார்.

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும், சகிப்புத் தன்மையும் கொண்டு மனித அசிங்கங்களை கூட பொருட்படுத்தாமல் ஆற்றும் மகத்தான சேவை, இராணுவம், காவல்துறை போன்று செவிலியர்களும் சீருடைப் பணியாளர்கள் இதை நினைவு கூற வேண்டியது நமது சமூகக் கடமை.

இங்கிலாந்தின் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சிஸ் தம்பதியர் இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் பணியாற்றியபோது 12.5.1820 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அந்நகரின் நினைவாகவும், தங்கள் குடும்பப் பெயரான நைட்டிங்கேல்லையும் இணைத்து புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்று பெயர் வைத்து அழைத்தனர். இறையருளால் தனக்கு இடப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் துவக்கி உலகத்தின் ஒளிச்சுடராய் விளங்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12 உலக செவிலியர் தினமாகும்.

1854 - 56 ஆம் ஆண்டுகளில் ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரிமியரில் நடைபெற்ற போரில் காயம்பட்டு குற்றுயிரும், குலை உயிருமாகப் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை அளித்த புரோரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று கிரிமிய போர்முனைக்கு அனுப்பப்பட்டனர்.

தங்கள் நாட்டுப் படையைச் சூழ்ந்த எதிரி நாட்டுப் படைகளைத் திணற அடித்த வீரன் போரில் காயப்பட்டு ஊனமாகிப் போனபின் தன் முகத்தில் மொய்க்கும் ஈக்களைக் கூட விரட்டச் சக்தியற்றுக் கிடப்பதையும், யுத்தக் களத்தில் இரண்டு நிமிடங்களில் கூடாரத்தை அமைத்து ஒரு நிமிடத்தில் மின்னல் வேகத்தில் அதைப் பிரித்து அப்புறப்படுத்திய வீரன் இன்று ஒரு மணி நேரமாகிறது படுக்கையிலிருந்து எழுந்து உட்காருவதற்கு. இவற்றைக் கண்ணுற்ற நைட்டிங்கேல் இடைவிடாது இரவு பகல் பாராமல் அவர்களுக்குச் சிகிச்சை அளித்து ஆறுதல் மொழி பேசி தேற்றி வந்தார். இரவு நேரங்களில் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தவர்களைக் கையில் இராந்தல் விளக்கை எடுத்துக் கொண்டு சுகம் விசாரித்து அவர்களின் வலிக்கு நிவாரணம் வழங்கி அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி அவர்தம் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து அவர்களின் மனச் சுமையைப் போக்கி இராணுவ வீரர்களை விரைந்து குணப்படுத்தினார். இதனைக் கண்ட இராணுவ வீரர்கள் தங்களைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு கையில் இராந்தல் விளக்குடன் வந்துள்ளது என்று புகழ்ந்து பாராட்டினார்கள். ‘விளக்கேந்திய பெருமாட்டி’ (Lady with the lamp) என்று வர்ணித்தனர். போருக்குப் பின் நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விக்கோரியா மகாராணிக்கு அடுத்தபடியாக அறியப்பட்டவராக பி.பி.சி. அறிவித்தது.

புளோரன்ஸ் நைட்டிங்கேலின் யுத்த காலப் பணிகளைப் பாராட்டி 1856 ஜனவரியில் விக்டோரியா மகாராணி தன் கைப்பட கடிதம் எழுதிப் பாராட்டினார். அதில், “அன்புள்ள நைட்டிங்கேல், நாட்டின் நலன் கருதி மிகப் பயங்கரமான இந்தப் போரில் உயிரைத் துச்சமென மதித்துப் போரிட்ட எனது சாம்ராஜ்யத்தின் போர் வீரர்களுக்குச் சமமாகவே நீங்கள் செய்த சேவையையும் காட்டிய கருணையையும் மனமாற மதிக்கிறேன். மெச்சத் தகுந்ததும் அருள் நிறைந்ததுமான உங்கள் சேவையைப் பாராட்டுமுகத்தான் இத்துடன் நான் அனுப்பியிருக்கும் அரசு முத்திரை பதித்த தங்கப் பதக்கத்தை உங்களுடைய அரசியாரின் பரிசாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்,” என்று புகழ்ந்து எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து 1883+ஆம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பணியைப் பாராட்டி செஞ்சிலுவைச் சங்க விருதும், 1907-ஆம் ஆண்டு புளோரன்சின் 84-ஆவது பிறந்ததினப் பரிசாக பிரித்தானிய மன்னர் ஏழாம் எட்வர்ட்டின் ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்னும் உயரிய விருதைப் பெற்ற முதல் பெண்மணியாகக் கௌரவிக்கப்பட்டார்.

போரில் காயம்பட்டு சாவின் விளிம்பில் இருந்து பலரைக் காப்பாற்றிய உலகப் புகழ்பெற்ற மருத்துவத் தாயாக நோயுற்றவர்களின் கருணையே வடிவமாகத் திகழ்ந்து சீர்கெட்ட மருத்துவத் துறையைச் செப்பனிட்ட சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த நைட்டிங்கேல் தன் வாழ்நாளின் அந்திமக் காலங்களில், “இன்னும் என் வாழ்நாளில் நான் பார்க்காதது ஒன்றே ஒன்றுதான் மிகுதி. ஒரே முறையாகவும் முடிவாகவும் பார்க்கக் கூடிய அபூர்வ நண்பன் மரணம். அதை எதிர்பார்த்தே நான் காத்துக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறி வந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் 13.08.1910-ஆம் ஆண்டு தனது 90-ஆவது வயதில் உலக வாழ்க்கையைத் துண்டித்து அமைதியான முறையில் கண்களை மூடிவிட்டார். அவரது நினைவாக அவரின் தன்னலமற்ற பணியை நினைவுகூர ஆண்டுதோறும் அவர் பிறந்த மே 12-இல் இலண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் உள்ள மாளிகையில் விளக்கு ஒளி ஏற்றி அந்நாளில் உலகத்தின் பல நாடுகளிலிருந்து அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு மாற்றப்பட்டு அந்த மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஓர் உன்னதமான உணர்வுபூர்வமான தருணமாகும். ஒரு செவிலியரிலிருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதாகும்.

புளோரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களை மாவட்டங்கள்தோறும் இனம்கண்டு நைட்டிங்கேல் விருதுகளை மே 12-இல் வழங்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களில் சிலரை தேர்வு செய்து மாநில அளவிலும், மாநில அளவில் மெச்சத் தகுந்த பணியாற்றியவர்களை அடையாளங்கண்டு தேர்வு செய்து மத்திய அரசின் சார்பில் நாட்டின் சுதந்திரத் தினத்தன்று பாராட்டி விருதுகளை வழங்கிட வேண்டும். இதுவே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும்.
செவிலியர் பணி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்து ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி அவர்களைக் கண்ணியப்படுத்திட வேண்டும்.

வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சிக் கூலி, மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் வலி கொடாடி பேரை ஏதேது செய்வானே....


குழந்தையின் நஞ்சுக் கொடியை அறுத்த மருத்துவச்சி (தாதி) ஊதியத்தையும், தீர்க்க முடியாத நோயைக் குணப்படுத்திய மருத்துவரின் ஊதியத்தையும் இன்சொல்லுடன் மனமகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது தமிழர்களின் உலக நியதி.

உலகச் சுகாதார நில நிறுவனம் (WHO), இந்திய நர்சிங் கவுன்சில் (INC ) வழிகாட்டுதலின் அடிப்படையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களின் பணி நியமனம் செய்திட வேண்டும்.

மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழகத்திற்கு 50 ஆயிரம் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர், மூன்று குழந்தை நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், ஐந்து நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தபட்சம் ஐந்து செவிலியர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த விகிதாச்சாரத்தில் தமிழகத்தில் அரசு பொது மருத்துவமனைகள் இயங்குகின்றனவா என்பது பதில் காண வேண்டிய மிகப் பெரிய கேள்விக் குறி.

சித்திரை மாதக் கோடை கத்திரி வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இக்கால கட்டத்தில் அனைத்து அரசுப் பொது மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மருந்துகளும், நவீன மருத்துவக் கருவிகளும் இருப்பில் வைத்திருக்க ஆவன செய்திட வேண்டுகிறேன்.

புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திப் பணியாற்றிக் கொண்டு வரும் செவிலியர் சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த மே 12 உலக செவிலியர்கள் தின நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment