முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 11 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நான் எந்தக் கருத்தும் கூறவில்லை. இந்தத் தீர்ப்பு முன்னைய தீர்ப்பை தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டதால், தீர்ப்பின் முழு விவரத்தையும் அறிந்த பின்னரே கருத்துத் தெரிவிக்க முடிவு செய்தேன். உலக செவிலியர்கள் நாளை முன்னிட்டு, செவிலியர்களுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.
நீதிபதி குமாரசாமி அவர்கள் தந்த தீர்ப்பில், நீதிபதி சொத்துக் கணக்கிட்டதில் இமாலய தவறு நேர்ந்து இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சி தருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்கள் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களை எல்லாம் அவரது வருமானமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி, அந்த கூட்டுத் தொகை 24 கோடியே 14 இலட்சத்து 31 ஆயிரத்து 274 ரூபாய் என்றும், எனவே வருவாய்க்கும் சொத்துகளுக்கும் இடையிலான வேறுபாடு 2.82 கோடிதான் என்றும், இது வருவாயை விட 8.12 சதவீதம் மட்டும்தான் என்றும், 10 சதவீதம் வரை சொத்து மதிப்பு அதிகம் இருந்தாலும் வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை நீதிபதி குமாரசாமி சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆனால் ஜெயலலிதா அவர்களின் வருமானத்தைவிட சொத்து மதிப்பு 76.75 சதவீதம் என்பதால், நீதிபதி இதுகுறித்து கணக்கிட்டது மிகப்பெரிய பிழை என்றும், தீர்ப்பின் அடிப்படையே தகர்ந்துவிட்டது என்றும், இந்தப் பிழையை நீக்கினாலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் உறுதியாக தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும், மிகச் சிறந்த வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யா ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார். உண்மைக்கும் நீதிபதி குமாரசாமி கூறியதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளதால், தீர்ப்பே முற்றிலும் கேள்விக்குறியாகி விட்டது.
எனவே உண்மை வெளிச்சத்துக்கு வரவும், நீதி நிலைக்கவும் கர்நாடக அரசு இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது ஒன்றுதான் சரியான நடவடிக்கையாக அமையும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்த ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற சொற்றொடரைத்தான் 11 ஆம் தேதி தீர்ப்பு நினைவூட்டுகிறது என வைகோ தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment