நடிகர் கமலகாசன் நடித்து நேற்று வெளியாகவிருந்த உத்தமவில்லன் திரைப்படமானது திடீரென்று திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த திரைக்குடும்பமே ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்து கொம்பன் திரைப்பட பிரச்சினையை அடுத்து, கலைக்குடும்பத்தின் அனைத்து சங்கங்களும் கூடி அமர்ந்து 24 மணி நேரம் சிறு தூக்கம் கூட இல்லாமல் தொடர்ந்து பேசி உத்தமவில்லன் திரைப்படத்தை இன்று மதியம் முதல் திரையிட ஏற்பாடு செய்துள்ளார்கள்.
பணம் வசூலிக்கும் திரைப்படங்களுக்கெல்லாம் ஒற்றுமையாக இணைந்து தூக்கமில்லாமல் போராடும் கலைக்குடும்பம், ஆந்திர மாநிலத்தில், சித்தூர் பகுதியில், செம்மரக்கட்டைகளை கடத்தினார்கள் என பொய் குற்றச்சாட்டின் பேரில் பிடித்து கொண்டு போய் படுகொலை செய்யப்பட்ட 20 அப்பாவி கூலித்தொழிலாளர்களின் நீதி வேண்டி தமிழகமே கொந்தளித்த போதும், பலமுனை போராட்டங்களை நடத்தியபோதும், சிறு அறிக்கை கூட வெளியிடாதது ஏன்?
அப்பாவி தமிழர்களுக்காக போராடினால் பணம் கிடைக்காது, திரைப்படத்துக்காக போராடினால், அப்பாவி ஏழைத்தமிழர்களிடத்திலிருந்து பணம் கிடைக்கும் என்ற சுய நலம் தானே உங்களிடத்தில் மேலோங்கி உள்ளது. பணத்திற்காக மட்டுமே ஒற்றுமையாக இணைந்து உறங்காமல் 24 மணி நேரம் தொடர்ந்து போராடும் நீங்கள், விலைமதிக்க முடியாத 20 தமிழர்களின் உயிருக்காக போராடவில்லையே? அனைத்து நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பளர்களும், விநியோகஸ்தர்களும் ஒன்றாக இணைந்து ஊடகவியலாளர்களுக்கு பல் இழித்து பேட்டி மட்டும் கொடுக்குறீர்களே! இதை எண்ணும்போது சுயநலவாதிகளால்தானே கால சக்கரம் சுழலுகிறது என்று தெரிகிறது.
பணத்திற்கு இருக்கும் மரியாதை, மனித உயிருக்கு கிடைப்பது எப்போதோ?
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment